ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி
ஸ்லேசர் அம்மையார்;
(1848 – 1915)
மேரி ஸ்லேசர் 1848ம் ஆண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று
ஸ்கொட்லாந்திலுள்ள ஏபர்டீன் எனும் ஊரில் பிறந்தார். இவர் கிறிஸ்துவை தன் வாழ்வின்
இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாள் முதற்கொண்டு,
கிறிஸ்துவுக்காக துணிச்சலோடும் துடிதுடிப்போதும்
இறைபணியாற்றி வந்தார்.
கலபார் நதி, இன்றைய நைஜீரியா. அதுவே மேரியின் தரிசன
பூமியாயிருந்தது. ஆனால் அன்று அவ்வூர் மக்களின் நிலைமை படுமோசமாக இருந்தது.
மனிதர்கள் மனிதர்களாகவே இல்லை. வாழ்க்கைக்கானச் சட்டமோ, ஒழுக்கமான வாழ்க்கை முறையோ அங்கு இருக்கவில்லை.
மாறாக மூடப்பழக்கவழக்கங்கள் மலிந்து கிடந்தன.
அந்தோ பரிதாபம்! இரட்டைக் குழந்தைகளைப்
பெற்றெடுத்தாள் ஓர் தாய். குழந்தைகளின் உடல் ஈரம் காய்வதற்கு முன்னே, கொடூரன் ஒருவனின் கை, மூர்க்கமாய் பாய்ந்தது அக்குழந்தைகள் மீது.
பிஞ்சு வாய் திறந்து அக்குழந்தைகள் அழும் முன்னே, அவைகளின் தலைகளை துண்டித்து எறிந்தான் அக்
கொடூரன். சோகத்தின்மேல் சோகம் மீண்டும் தொடர்ந்தது. அழுவதற்குக் கூட கண்ணீரற்ற அக்குழந்தைகளின்
தாயானவள் வீட்டை விட்டு காட்டிற்கு விரட்டப்பட்டாள். தனிமையில் அவள்
வேதனைப்பட்டாள்.
காரணம்…?
‘இரட்டைக்
குழந்தைகள் பிறந்தால் அவை தீயசக்திகள் மூலம் பிறந்தவை’ என்பது அவர்களின்
நம்பிக்கை. என்ன அறியாமை அது?
இதனைக் கேள்வியுற்ற மேரி ஸ்லேசரின் கண்கள்
சிவந்தன. ‘நான் அங்கு போய் அதை நிறுத்தாவிடில் அங்கே இன்னும் அதிக இரத்தம்
சிந்தப்பட்டு அநேகர் கொல்லப்படக்கூடும்’ என்று கூறிக்கொண்டு, யுத்தவீரனைப் போல உள்ளத்தில் வீறுகொண்டு
எழுந்தார். கிறிஸ்துவின் அன்பு அவரை உந்தித்தள்ள, கிராமமெங்கும் வீடு வீடாய்ச் சென்று உண்மைச்
செய்தியை உற்சாகமாய் எடுத்துரைத்தாள். பேச்சிலே மாத்திரமல்ல தன் செயலிலும்
கிறிஸ்து இயேசுவின் அன்பை மக்களுக்கு வெளிப்படுத்தினார். கடவுள் இவரோடு கூட
இருந்து மனவலிமையை அளித்தபடியால் இவர் எதற்கும் அஞ்சாது இறைபணியை செய்தார். ;மக்களின் அறிவுக் கண்களை திறந்தார். அவர்களது
அறியாமையைப் போக்கினார். இதனால் இரட்டைக் குழந்தைகளெல்லோரும் காப்பாற்றப்பட்டனர்.
முழுக்கிராமமுமே இதனால் களிகூர்ந்தது.
ஆப்பிரிக்காவின் வெள்ளை ராணி ‘மா’ என்று அங்குள்ள மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட மேரி
ஸ்லேசர் 1915ம் வருடம் ஜனவரி
பதின்மூன்றாம் திகதியன்று, தான் காப்பாற்றிய இரட்டைக் குழந்தைகள் சூழ்ந்திருக்க இறைவன் பாதம்
சரணடைந்தார்.
ஜெபம் : அன்பான ஆண்டவரே, கனிவுள்ள கண்களை எனக்குத் தாரும். அறியாமை
என்னும் இருளை அகற்றி, மக்களை உம் வெளிச்சத்தின் அண்டைக்கு கொண்டுவர எனக்கு ஆற்றல் தாரும். இயேசுவின்
பெயரினால் உம்மிடம் தாழ்மையோடு கேட்கிறேன். ஆமென்.
‘அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.’ (அப்போஸ்தலர் 17:30)
Comments
Post a Comment
Comments