Skip to main content

மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் ( Medical missionary - Dr. John Scudder Sr.)


by டேவிட் அண்ணா

>>>

மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் (Dr. John Scudder Sr.) - கி.பி.1793 - 1855

மருத்துவர் ஐடா ஸ்கடரை (Dr. Ida Scudder) பற்றி கேள்விப்படாதோர் யாருமே இருக்கமாட்டோம். ஆனால் முன்னோடி மருத்துவ மிஷனரியான அவரது தாத்தா ஜோன் ஸ்கடர் சீனியர் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாத்தா ஜோன் ஸ்கடரில் ஆரம்பித்து பேத்தி ஐடா ஸ்கடர் வரை இரண்டு தலைமுறைகளாக ஸ்கடர் குடும்பத்தினர் இலங்கையர், இந்தியருக்கு மருத்துவ மற்றும் ஆன்மீக சேவை செய்திருக்கிறார்கள். என்னவொரு அர்ப்பணிப்பு பாருங்கள்.

இன்று ஜோன் ஸ்கடர் பற்றி ஒருசில காரியங்களை தெரிந்து கொள்ளலாம். அவர் 1793ம் ஆண்டு செப்டெம்பர் 3ம் திகதி அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாகாணத்தில் ப்ரிஹோல்ட் எனும் ஊரில் (Freehold, New Jersey, USA) பிறந்தார். சிறுவயதிலிருந்தே தேவையுள்ளோருக்கு உதவும் இரக்க குணம் நிறைந்தவராகக் காணப்பட்டார். எப்போதுமே ஜோனிற்கு கிறிஸ்தவ மனநிலை உண்டு என அவரது குழந்தைப் பருவம் பற்றி அவரது அம்மா கூறியிருக்கிறார். படிப்பில் கெட்டிக்காரனாகவிருந்த அவர் Princeton University மற்றும் New York College of Physicians and Surgeons இல் மருத்துவம் கற்று 1815ம் ஆண்டு மருத்துவராக தேர்ச்சி பெற்றார். அவர் மருத்துவராக காலடியெடுத்து வைக்கும் போது ‘மக்களின் சரீர குறைபாட்டிற்கு மருத்துவம் செய்ததோடு அவர்களின் ஆத்தும தேவையையும் தன்னால் கூடுமான வரையில் பூர்த்தி செய்ய வேண்டும்’ என்று தனக்குள் ஒரு தீர்மானம் எடுத்தார்.

அந்நாட்களில் அதிகளவு மருத்துவர்கள் இல்லாததினால், மருத்துவர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதுமட்டுமின்றி ஜோன் ஸ்கடரின் திறமையும், கனிவோடு நோயாளிகளை விசாரிக்கும் அன்பும் அனேகரை கவர்ந்தது. ஜோன் நாளுக்கு நாள் பிரபலமாகிக் கொண்டே சென்றார். நல்ல பிரகாசமானதொரு எதிர்காலம் அவரை எதிர்நோக்கி இருந்த நிலையில், அவர் வாசித்த ஒரு கைப்பிரதி அவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது. ஆம், இந்தியா மற்றும் இலங்கையில் சுவிசேஷ ஊழியம் செய்யவேண்டியதன் அவசியத்தை கூறும் ‘600 மில்லியன் மக்களின் மனமாற்றத்திற்கு திருச்சபை என்ன செய்ய வேண்டும்?’ என்ற அக்கைப்பிரதியை அவர் வாசித்தார். மீண்டும் மீண்டும் வாசித்தார். இது ஆண்டவர் தனக்குக் கொடுக்கும் அழைப்பு என்று உணர்ந்தார். சிலநாட்கள் தேவனின் வழிநடத்துதலுக்காக காத்திருந்தார். இறுதியில் இயேசுவே, சுவிசேஷத்தை அறியாதவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்து உம் இறுதி பேராணையை நிறைவேற்ற நான் செல்கிறேன் என்று உறுதியாக முடிவெடுத்தனர்.

ஜோன் தான் மிஷனரியாக செல்லவிருக்கும் முடிவை மற்றவர்களுக்கு அறிவித்த போது அவர் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. அவரது அப்பா இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. உனக்கு அமெரிக்காவிலே பிரகாசமானதொரு எதிர்காலம் காத்திருக்கும் போது ஏன் கடல் கடந்து மிஷனரியாக செல்ல வேண்டும்? அந்த வேலையை அதிக உபயோகமில்லாத மற்ற யாராவது செய்வார்கள் என்று கிறிஸ்தவ நண்பர்கள் கூட கூறினார்கள். இன்றும் அனேக கிறிஸ்தவர்கள் இவ்வாக்கியத்தை சொல்லுவதைக் கேட்கலாம். ஆனால் ஜோன் ஸ்கடர் தனது மிஷனரி அழைப்பில் உறுதியாக இருந்தார். எனக்காக ஜெபம் மட்டும் செய்யுங்கள். அது ஒன்றே நான் உங்களிடம் கேட்பது என்று சொல்லிவிட்டு தனது 26வது வயதில் 1819ம் ஆண்டு தனது மனைவி ஹரியட், இரண்டு வயது மகள் மரியா மற்றும் சில மிஷனரிகளோடு ‘லிண்டஸ்’ கப்பலில் ஏறி இலங்கை (Sri Lanka) நோக்கி பயணத்தை ஆரம்பித்தார்.

இறுதியில் இலங்கையை வந்தடைந்த இவர் 1820, ஜூலை மாதத்தில் வட பகுதியில் இருக்கும் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பண்டத்தரிப்பு (Pandatherippu) என்ற இடத்தினை மையமாகக் கொண்டு தனது ஊழியத்தை தொடங்கினார். அதுவரையில் யாழ்ப்பாணத்தில் சித்த மருத்துவமே வழக்கத்தில் இருந்தது. 

மருத்துவ மிஷனரி. ஜோன் ஸ்கடரே முதன் முதலாக மேற்கத்திய மருத்துவத்தை இலங்கை உள்ளடங்கலாக முழு தெற்காசியாவிற்கும் அறிமுகம் செய்து வைத்தார். கொலரா(Cholera), மஞ்சள்காய்ச்சல்(Yellow Fever) போன்ற நோய்களால் அக்காலத்தில் பீடிக்கப்பட்டிருந்த அனேகருக்கு மருத்துவ உதவி வழங்கி அவர்கள் உயிரை காப்பாற்றினார்.

யாழ்ப்பாணத்தில் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் Green Memorial Hospital –Manipay இல் கூட ஜோன் ஸ்கடர் அன்றைய காலத்தில் மருத்துவ மிஷனரியாக மக்களுக்கு சிறப்பாக பணியாற்றினார். பின்னர் 1836ம் ஆண்டில் இந்தியாவிலுள்ள சென்னை மற்றும் மதுரை பகுதிகளில் பணியாற்ற கடந்து சென்ற அவர் அங்கும் ஆண்டவருடைய நாமத்தின் மகிமைக்காக அரும் பெரும் பணியாற்றியுள்ளார்.

மருத்துவமனையிலிருந்து கொண்டு தம்மண்டை வருபவர்களுக்கு சிகிச்சையளித்து அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்வதோடு மட்டும் இவர் நின்றுவிடாது வீதிகளிலும், தெருக்களிலும், மக்கள்கூடும் இடங்களிலும் கூட சென்று சுவிசேஷத்தை பிரசங்கித்தார். ‘நான் செய்த பிரசங்கங்களை மக்கள் மறந்துவிட வாய்ப்பு உண்டு. ஆனால் அச்சிடப்பட்ட வேத வார்த்தைகளை அவர்கள் மீண்டும் மீண்டும் வாசித்து பிரயோஜனமடையலாம்’ என்று கருதி, இந்தியாவின் கிழக்கு பகுதியிலிருந்து மேற்கு பகுதி வரை பிரயாண வசதிகள் அதிகம் இல்லாத சூழலிலும் கூட சுற்றுப் பிரயாணம் செய்து சுவிசேஷ கைப்பிரதிகளையும், வேதாகம பிரதிகளையும் மக்களுக்கு கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். மேலும் இவர் பாடசாலைகளை அமைத்து மாணவ செல்வங்களுக்கு கல்வியும் புகட்டி வந்தார். எல்லா ஊழியங்களிலும் இவரது மனைவியான ஹரியட் அம்மையார் இவருக்கு உதவியாக இருந்தார்கள். 

ஆரம்பகால ஊழியத்தியத்தின் போது அவரது செல்ல மகள் மரியா மரித்துப் போனாள். மூன்று மாதங்கள் கழித்துப் பிறந்த அடுத்த மகளும் மரித்துப் போனாள். இந்த இழப்புகளினால் இந்த மிஷனரி தம்பதி, தாம் முன்வைத்த காலை பின்வைத்துவிடாமல் தொடர்ந்து தம் ஊழியத்தை முன்னெடுத்துச் சென்றனர். கிறிஸ்துவுக்காக சகல உபத்திரவங்களையும் பொறுமையோடு சகித்தனர்.

ஜோன் ஸ்கடர் மருத்துவர் என்ற காரணத்தால் அவர் எங்கு சென்றாலும் குஷ்டரோகிகள், குருடர், ஊனமுற்றோர், நோயாளிகள் என்று அவரைச் சுற்றி ஓர் கூட்டம் கூடிவிடும். அனேக வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளையும் அவர் செய்திருக்கிறார். ஒருமுறை வேலூரில் அவர் சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இருந்த இடத்தைவிட்டு நகராமல் ஓய்வெடுக்காமல் ஊழியம் செய்தார். உணவு இடைவேளை கூட எடுத்துக் கொள்ளவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்தளவுக்கு தன்னை வருத்தி அர்ப்பணிப்போடு ஊழியம் செய்து வந்தார். வெப்பம் நிறைந்த இந்திய பிரதேசத்தில் அடிக்கடி பிரயாணம் செய்ததால், அவரது உடல் அதிகம் பெலவீனமடைந்தது. பரமனின் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து இலங்கையிலும், இந்தியாவிலும் 36 ஆண்டுகள் முன்னோடி மிஷனரியாக பணியாற்றிய கிறிஸ்துவின் போர்வீரனான ஜோன் ஸ்கடர் 1855ம் ஆண்டு ஜனவரி 13ம் திகதியன்று இவ்வுலகில் தனது ஓட்டத்தை முடித்து இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார்.

இக்கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும் அன்பார்ந்த நண்பர்களே, “நீ நன்கு படித்திருக்கிறாய்;; நல்ல வேலை பார்க்கிறாய்;; நீ ஏன் மிஷனரி ஊழியனாக செல்ல வேண்டும்? நீ போகாதே. வேறு யாராவது அப்படிப்பட்ட ஊழியத்திற்கு செல்லட்டும்” என்று இன்றும் பலர் சொல்கின்றனர். நாமும் அதைக் கேட்டு அதுவும் சரிதானே என்று எண்ணுகிறோம். சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். ஜோன் ஸ்கடர் தனது நண்பர்களின் பேச்சைக் கேட்டு அன்று மிஷனரியாக வராதிருந்தால் என்ன ஆகியிருக்கும்? மக்கள் மருத்துவ உதவி பெற்றிருக்க மாட்டார்கள். தேவனுடைய சுவிசேஷத்தை கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இந்தியாவில் பிரசித்திபெற்ற மருத்துவமனையாகத் திகழும் வேலூர் Christian Medical College (CMC) மருத்துவமனை தோன்றியிருக்கமாட்டாது. நம் இலங்கை தேசத்தில் கூட மேற்கத்தேய மருத்துவம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்காது. இன்னும் அநேகம் சொல்லிக்கொண்டே போகலாம்.

அன்றைக்கு மிஷனரிகள் நம் தேசத்தில் கோதுமை மணிகளாக விழுந்ததினால்தான் இன்றைக்கு நாம் நல்ல நிலைமையில் இருக்கிறோம் என்பதை நாம் ஒருபோதும் மறந்து போகக்கூடாது. எனது ஆசையெல்லாம் ‘படிப்புவராதவர்கள் தேவ ஊழியம் செய்யட்டும்’ என்ற முட்டாள்தனமான கூற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்; நன்கு படித்தவர்களும், திறமைவாய்ந்தவர்களும் கூட ஜோன் ஸ்கடர் போன்று தம் திறமைகளை ஆண்டவருடைய நாமம் மகிமைப்படவும் பிறருக்கு ஆசீர்வாதமாயிருக்கவும் அவற்றைப் பயன்படுத்தி, கிறிஸ்துவை அறியாத மக்கள் மத்தியில் சென்று ஊழியம் செய்யக்கூடிய மிஷனரி தேவஊழியர்களாக நம் தேசத்தில் எழும்ப வேண்டும் என்பதேயாகும்.

“…நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.’’ (நீதிமொழிகள் 3:27)

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!



Comments

Post a Comment

Comments

Popular posts from this blog

எனக்கொத்தாசை வரும் பர்வதம் | Enakkoththasai Varum Parvatham | MUSIC NOTES & CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>

ஆவியின் கனிகள் @ QUILLING & NEEDLEWORK

by  ஷரோன் அக்கா >>>

தேவகுமாரா என்னை நினைச்சிடுங்க | Devakumara Enna Ninachchidunga | MUSIC NOTES AND CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>