Skip to main content

ஜோன் விக்ளிப் (John Wycliffe)


by டேவிட் அண்ணா

>>>

ஜோன் விக்கிளிப் என்பவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘திருச்சபை சீர்திருத்தத்தின் விடிவெள்ளி’ (The Morning Star of Reformation) என்றும் ‘எழுதுகோல் புரட்சியாளர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அக்கால திருச்சபையில் அதிக சக்திவாய்ந்த மனிதராக கருதப்பட்ட போப்பினதும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையினதும் தவறான கொள்கைகளுக்கு எதிர்த்து நின்றவர். அத்துடன் கிறிஸ்துவுக்காகவும், சத்தியவசனத்திற்காகவும் மரிக்கவும் ஆயத்தமாயிருந்தவர். 14ம் நூற்றாண்டில் திருச்சபையில் ஓர் விழிப்புணர்வு வருவதற்கு ‘Peter Waldo’ இற்கு பிறகு இவரும் ஓர் முக்கிய காரணமாக இருந்தார். 

ஜோன் விக்கிளிப் கி.பி. 1330ம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள யோர்க்சயர் (Yorkshire எனும் இடத்திலுள்ள ஹிப்ஸ்வெல் (Hipswell) என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ரோஜர் விக்ளிப், தாயார் கத்தரின். ஜோன் விக்ளிப் தனது 17ம் வயதில் Oxford University இல் சட்டப்படிப்பைப் படிக்கச் சென்றார். அங்கு மிகவும் தலைசிறந்த மாணவனாக அவர் திகழ்ந்தார். Arch Bishop ஆகவிருந்த அவருடைய பேராசிரியர் வேதாகம போதனையை அவருக்கு கற்பித்தார். நாளடைவில் அவருக்கும் அவருடைய பேராசிரியருக்குமிடையில் ஒரு தனிப்பட்ட ஜக்கியம் ஏற்பட்டது. அது ஓர் நல்ல உறவாக மாறியது. நாளடைவில் தேவனுடைய வெளிச்சத்திற்கு ஜோன் விக்ளிப் வந்தார்.

ஒரு சமயம் இங்கிலாந்தை ஒரு பயங்கரமான நோய் தாக்கியது. அந்த நோயினால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். மக்கள் மிகவும் சோர்வடைந்து மன வேதனையில் இருந்தார்கள். அப்போது மனிதர்கள் மூட பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்கள். இதை கவனித்த ஜோன் விக்ளிப் முதன்முதலாக புரட்சிகரமான கைப்பிரதியொன்றை எழுதினார். அதில் மேற்படி கொள்ளைநோயை தேவனுடைய நியாயத்தீர்ப்பாக அடையாளப்படுத்திய விக்ளிப், திருச்சபையினர் அனைவரதும் பாவத்தின் விளைவாக அது ஏற்பட்டதென கூறியதுடன், திருச்சபை தலைமைத்துவம் உட்பட அனைவரையும் தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் தேவனிடம் திரும்பும் படி எச்சரிக்கையும் விடுத்திருந்தார். அந்த கொள்ளை நோயினால் திருச்சபை போதகர்கள் பலர் இறந்துவிட்டனர். போதகர்கள் சபையை நடாத்த இல்லாதபடியினால், வேத அறிவு இல்லாதவர்களை போதகர்களாக கத்தோலிக்கத் திருச்சபை ஏற்படுத்தியது. அவர்கள் பிச்சையெடுத்து தங்களுடைய வாழ்வை நடாத்தினர். அதுவுமல்லாது “இயேசுக் கிறிஸ்துவும், ஆதி அப்போஸ்தலரும் கூட இவ்விதமாகத்தான் தங்களுடைய வாழ்க்கையைப் போக்கிக் கொண்டார்கள்” என்று மக்களுக்கு தவறான போதனையை வேறு அவர்கள் போதித்தார்கள். இதைக் கண்ட ஜோன் விக்ளிப், அவர்கள் சரியான விளக்கத்தைப் பெறும்பொருட்டு அவர்களுடைய தப்பறையான போதனைக்கு எதிராக கைப்பிரதிகளை எழுதினார். அவர்களுடைய அந்தக் கருத்து வேதாகமத்திற்கு முற்றிலும் மாறுபட்டது என்றும், ஒருவன் இயேசுக் கிறிஸ்துவை அறிகிறவனாக இருந்தால் அவன் கடவுளை நம்பி, தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் வாழ வேண்டும், மாறாக மற்றயவர்களுக்கு பாரமாக இருக்கக் கூடாது அத்துடன் பிச்சையெடுத்து வாழ்க்கை நடாத்தக் கூடாது எனப் பல கருத்துக்களை அக்கைப்பிரதிகளில் எழுதியிருந்தார்.

ஜோன் விக்ளிப் சட்டப்படிப்பை படித்துமுடித்து விட்டு, இறையியல் படிப்பைக் கற்க ஆரம்பித்தார். கி.பி.1375ம் ஆண்டில் லண்டன் மாநகரத்திலுள்ள புனித பவுல் ஆலயத்தின் வெளிப்புறத்தில் பகிரங்கமாக வேத வார்த்தைகளை மக்களுக்கு போதிக்க ஆரம்பித்தார். மேலும் அவர் இறைஏவுதல் பெற்று, மறைமுகமாக அல்லாது நேரடியாக அக்கால ரோமன் கத்தோலிக்க திருச்சபையையும் அதில் நடக்கும் வேதத்திற்கு முரண்பாடான காரியங்களையும், பாப்பாண்டவரின் நேர்மையற்ற வாழ்க்கையையும் கண்டித்து பிரசங்கிக்க ஆரம்பித்தார். மேலும் தேவன் பெயரில் தேவையற்ற காரியங்களுக்கு கட்டணங்கள் வசூலிப்பதை கடுமையாகக் கண்டித்தும் பிரசங்கித்தார். மக்கள் ஆர்வத்தோடு கூட்டம் கூட்டமாக விக்ளிப்பின் போதனைகளை கேட்பதற்கு வர ஆரம்பித்தார்கள்.

16 வருடம் படித்து இறையியலில் Doctor பட்டத்தைப் பெற்றுக் கொண்ட பின்பு, Oxford பல்கலைகழகத்தில் இறையியல் பேராசிரியராக விக்ளிப் அமர்த்தப்பட்டார். பல மாணவர்கள் அங்கு அவரிடம் விருப்பத்தோடு இறையியலைக் கற்றுத் தேர்ந்தனர். ஒருவன் போதகராக இருக்க வேண்டுமென்றால், முதலில் அவன் உள்ளும் புறமும் பரிசுத்த வாழ்க்கையை வாழ வேண்டும்;, தன் பேச்சிலும், சிந்தையிலும், செயலிலும் பரிசுத்தத்தை காத்துக்கொள்ள வேண்டும், மற்றையவர்களின் நலனுக்கான ஜெபிப்பவனாக இருக்க வேண்டும், ஆக மொத்தத்தில் பாவத்தை விரும்பாது, பரிசுத்தத்தை விரும்பி, சுயநலமற்றவனாகவும் ஒழிவுமறைவு அற்ற திறந்த புத்தகமான வாழ்க்கை  வாழ்பவனாகவும் இருக்க வேண்டும் அத்துடன் மனிதனுடைய வார்த்தையைக் காட்டிலும் தேவனுடைய வார்த்தைக்கு முன்னுரிமையளித்து அதற்கு கீழ்ப்படிவதை தன் வாழ்வில் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற அம்சங்களை தம் மாணவர்கள் மனதில் ஆணித்தரமாக ஜோன் விக்ளிப் பதிய வைத்தார். 

இங்கிலாந்து நாட்டுசபையில் நடக்கும் தவறுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும், பாப்பாண்டவரின் தகாத விதிமுறைகளையும் சுட்டிக்காட்டிப் பேசியதற்காக அக்காலத்து பாப்பாண்டவர் ஜோன் விக்ளிப்பை கைது செய்ய உத்தரவிட்டார். மேலும் இங்கிலாந்திலுள்ள அதிகாரிகளிடம் ‘ஜோன் விக்ளிப் ஒரு மிகப்பெரிய கொள்ளைக்காரன்’ என்ற தவறான குற்றச்சாட்டை சுமத்தினார். இதனால் ஜோன் விக்ளிப் Oxford பல்கலைக்கழகத்தில் போதிப்பதை நிறுத்தும் படி Arch Bishop உத்தரவிட்டார். கட்டளை பிறப்பிக்கப்பட்ட உடனே, ஜோன் விக்ளிப் Oxford பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதுமட்டுமன்றி ஜோன் விக்ளிப் அதுவரை எழுதிய எழுத்துக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. 

அதன்பிறகு விக்ளிப் தன்னை முழுவதுமாக எழுத்து ஊழியத்தில் ஈடுபடுத்திக்கொண்டார். மனந்தளராது, பல கைப்பிரதிகளை இலத்தீனிலும், ஆங்கிலத்திலும் விக்ளிப் தொடர்ந்து எழுதி வெளியிட்டு வந்தார்;. தேவனே அவருக்கு பக்க பலமாக இருந்து வழிநடத்தினார். அதனால் மனிதர்களினதும், அதிகாரங்களினதும் பயமுறுத்தல்களுக்கும் மிரட்டுதல்களுக்கும் ஜோன் விக்ளிப் பயப்படவேயில்லை. இங்கிலாந்து நாட்டு மக்கள் அவர்களது தாய் மொழியான ஆங்கில மொழியில் அதுவரை வேதாகமத்தை கொண்டிருக்கவில்லை என்பதை கண்ட விக்ளிப் அக்குறையைப் போக்க கி.பி.1374ம் ஆண்டிலிருந்து ஆங்கிலமொழிக்கு வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணியை செய்ய ஆரம்பித்தார். அப்பணியை சிறப்பாக தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல நிக்கொலஸ், அர்போக், ஜோன் பர்வே அத்துடன் இன்னும்பலர் அவருக்கு தோள் கொடுத்து உதவினர். அந்நாட்களில் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே தமது கைகளினாலேயே வேதாகமத்தை எழுதினர். இன்றும் ஜோன் விக்ளிப் தம் கைப்பட எழுதிய வேதாகமம் லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதைக் நாம் காணலாம்.

ஆங்கில வேதாகமத்தை யாராவது படித்தால் அவர்களது ஆடுமாடுகள், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அக்கால கத்தோலிக்க சபையினால் ஆணைபிறப்பிக்கப்பட்டது. ‘உரோமன் கத்தோலிக்க ஆலயத்தில் ஆராதனை நடத்துவோர் மட்டுமே வேதாகமத்தை வைத்திருக்க வேண்டும். அதை மீறி யாராவது அதை வைத்திருப்பின் தண்டிக்கப்படுவர்’ என்ற சட்டம் பாப்பாண்டவரால் அறிமுகப்படுத்தப்பட்டமைக்கு ஜோன் விக்ளிப் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துடன், ‘பொது மக்கள் வேதாகமத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும். அதை மக்கள் படிப்பதை தடைசெய்ய நீ யார்?’ என்றும் வினாவினார். மேலும் அக்காலத்தில் உரோமன் கத்தோலிக்க சபையினால் நடாத்தப்பட்ட சிலுவைப்போர்கள் தவறு, அவை வேதத்திற்கு முரணானவை என்று கண்டித்துப் பேசினார். அதுமட்டுமன்றி, ‘மனிதர்களின் பாவங்களை தேவன் தான் மன்னிக்க முடியும், பாப்பாண்டவர் அல்ல’ எனப் பல சீர்திருத்த சிந்தனைகளை விக்ளிப் தனது எழுதுகோலால் தந்தார்.

இவ்வாறு உரோமன் கத்தோலிக்க சிறையில் சிக்கிக் கிடந்த கிறிஸ்தவத்தை மீட்டெடுக்க பாடுபட்டவர்களில் முக்கியமாவராகத் திகழ்ந்த ஜோன் விக்ளிப் கி.பி.1384ம் ஆண்டு டிசம்பர் 29ம் திகதியன்று இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார். அவர் இவ்வுலகைவிட்டு சென்றாலும் அவருக்கு பின்வந்த பல சீர்திருத்த பிதாக்களினால் இவரது சீர்திருத்த எண்ணக்கருக்கள் தொடர்ந்தும் பின்பற்றப்பட்டு வலுப்பெற்றன. ஜோன் விக்கிளிப் செய்த சீர்திருத்தங்களும் அதற்காக அவர் அனுபவித்த இழப்புக்களும் கொடுமைகளும் கணக்கிட முடியாதவை. அவர் மரித்து அடக்கம் பண்ணப்பட்ட பின்பும் கூட சில வருடங்கள் கழித்து அவருடைய எலும்புகள் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு அக்கினியில் சுட்டெரிக்கப்பட்ட கொடூரச் செயலானது அவர் மீதும், சத்திய வேத வசனங்களின் மீதும் அக்கால கத்தோலிக்க திருச்சபையினருக்கு இருந்த வெறுப்பை எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. எனினும், விக்ளிப் தனி மனிதனாக நின்று எத்தனையோ மாபெரும் காரியங்களை தன் வாழ்நாளில் செய்தார். அதற்கு காரணம்: அவர் தம்முடைய வாழ்வில் தேவனோடு கொண்டிருந்த ஐக்கியம் தான். ‘தேவனுடைய வழிநடத்துதல் எம்வாழ்வில் இருந்தால் நாம் எதையும் சாதிக்க முடியும்’ என்பதற்கு இவரது வாழ்வு சிறந்த எடுத்துக்காட்டாகவுள்ளது.

ஆக மொத்தத்தில் ஜோன் விக்கிளிப்பின் வாழ்வை பார்க்கும் போது, எனக்கு பின்வரும் கிறிஸ்தவ பாடல் வரிகள் ஞாபகம் வருகின்றன.

“உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால்

அதிகம் பேர் நிற்பதே அவர்கள் சொல்லும் கணக்கு

(ஆனால்) அப்பா உம் கண்ணில் (நான்) தனி மனிதன் ஆயினும்

நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு….”

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்தவத்தில் அன்றிருந்த அடக்குமுறையை உடைத்தெறிந்து சீர்திருத்ததை ஏற்படுத்த தான் தனியாளாக இருப்பினும் அதைக்குறித்துக் கவலைப்படாமல் ஆண்டவரை முழுவதும் சார்ந்து கொண்டு,போராடிய ஜோன் விக்ளிப்பின் செயலானது பிற்காலத்தில் பலரை தேவனுக்கு உண்மையாக வாழச் செய்ததை நாம் இன்று பார்த்தோம். அதுபோலவே நாமும் நம்முடைய அனுதின வாழ்வில் சந்திக்க நேரிடும் சத்துருவின் தாக்குதல்களுக்கும் சோதனைகளுக்கும் ஆண்டவருடைய சத்திய வார்த்தைகளைச் சார்ந்து கொண்டு ஆண்டவர் தரும் பெலத்துடன், உதவியுடன் ஜெபத்தில் உறுதியாக தரித்திருந்து அவற்றிற்கு எதிராக போராடி ஜெயமெடுத்து, தேவனுக்காக ஒரு புது உத்வேகத்துடன் வாழ்வோமாக! எப்போதும் சத்தியத்திற்கு சாட்சிகொடுக்க ஆயத்தமாயிருப்போமாக! பயப்பட வேண்டாம்; கர்த்தர் உங்களோடு!

“நீ தண்ணீர்களைக் கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன்;; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும் போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன் பேரில் பற்றாது.” 

(ஏசாயா 43:2)


கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


Comments

Popular posts from this blog

எனக்கொத்தாசை வரும் பர்வதம் | Enakkoththasai Varum Parvatham | MUSIC NOTES & CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>

ஆவியின் கனிகள் @ QUILLING & NEEDLEWORK

by  ஷரோன் அக்கா >>>

தேவகுமாரா என்னை நினைச்சிடுங்க | Devakumara Enna Ninachchidunga | MUSIC NOTES AND CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>