கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.
படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே.
கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லியோ விக்கிரக ஆராதனை மோசமான நிலையை அடைந்துவிடாமல் இருக்க சபைகளில் படங்களையும், விக்கிரகங்களையும் மிக உயரமான இடங்களில் வைக்கும்படிக் கட்டளையிட்டான். வழிபாட்டுக்கு வருகிறவர்கள் அவற்றிற்கு முத்தம் கொடுப்பதைத் தடுப்பதற்காக அரசன் இதைச் செய்தான். ஆனால், கொன்ஸ்டன்டின்நோபிலின் அதிகாரிகளும், கிரீஸ் சிரியாவில் இருந்தவர்களும் இதற்கெதிராக குரல் கொடுத்தனர். உடனே பெரும் சச்சரவு ஏற்பட்டதால் சபைகளில் இருந்து அத்தனை படங்களையும், விக்கிரகங்களையும் அகற்றும்படிப் பேரரசன் கட்டளையிட்டான். இதனால் பெரும் போராட்டம் வெடித்தது. போப் 3ம் கிரெகரி அரசனைக் கண்டித்து விக்கிரக ஆராதனைக்கு மிகவும் ஆதரவாகப் பேசினார். இந்த சமய வழிபாட்டுப் பிரச்சனை வரலாற்றில் ஐக்கனோகிளாஸ்டிக் சச்சரவு (Iconoclastic) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தை விக்கிரகங்கள் உடைத்தலைக் குறிக்கிறது.
கி.பி. 754 ஆம் ஆண்டில் பேரரசன் 5ம் கொன்ஸ்டன்டைன் ஒரு பெரும் செனட்டைக் கூட்டி ‘விக்கிரக ஆராதனை வேதத்திற்கு முரணானது’ என்றும், அது ‘புறஜாதியாரின் வழிபாட்டு முறை’ என்றும் தீர்மானம் நிறைவேற்றி அதைத் தடை செய்தான். இந்தக் காலப்பகுதியில் ஏற்கனவே விக்கிரக ஆராதனை சபையில் நுழைந்து, அவற்றிற்கு தூபாராதனை காட்டும் வழக்கமும் வழக்கில் இருந்தது.
கொன்ஸ்டன்டைனுக்குப் பிறகு பதவியேற்ற 4ம் லியோவின் மனைவி (விதவை) கி.பி. 787 ஆம் ஆண்டில் இரண்டாம் நைசியா கவுன்சிலைக்கூட்டி, போப் 3ம் லியோவின் கட்டளையை நீக்கினாள். அத்தோடு, இயேசு கிறிஸ்து, கன்னி மேரி, தேவ தூதர்கள், பரிசுத்தவான்கள் ஆகியோரின் சிலைகளை வைக்கவும் அனுமதி அளித்தாள். இவ்வாறு இரண்டாம் நைசியா கவுன்சில் விக்கிரகங்களுக்கு மரியாதையுடனான வழிபாடு அளிக்கும்படி சிபாரிசு செய்தது.
மேற்குப் பிராந்தியத்தில் இருந்த போப் விக்கிரக ஆராதனையை வலியுறுத்தியபோதும், சார்ளிமனும் பிராங்கிஸ் பிஷப்புக்களும் கி.பி. 794 ஆம் ஆண்டில் பிராங்பட்டில் (Frankfurt) கூடிய கவுன்சிலின் மூலம் விக்கிரக ஆராதனையைக் கடுமையாகக் கண்டித்து அதை எதிர்த்து வந்தனர். மேற்கின் பேரரசன் சார்ளிமன் தனது நூலில், ‘கர்த்தரை மட்டுமே ஆராதனை செய்ய வேண்டும். பரிசுத்தவான்களுக்கு மரியாதை மட்டுமே அளிக்க வேண்டும். விக்கிரகங்களை ஒருபோதும் வணங்கக் கூடாது’ என்று எழுதி வைத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
யாத்திராகமம் (விடுதலைப்பயணம்) 20:3-6 இல் தேவன், மோசேயிடம் சீனாயில் வைத்து மக்களுக்கு கூறும்படி கூறியதாவது,
‘என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். (1ம் கட்டளை)
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். (2ம் கட்டளை)
(காரணம்) உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.’
மேலும், வெளிப்படுத்தல் (திருவெளிப்பாடு) 21:8, 22:14-15 இல்; ‘விக்கிரகாராதனை செய்வோர் தேவனுடைய பரலோக ராஜ்ஜியத்திற்குள் நுழைய முடியாதெனவும், மாறாக அவர்கள் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் (நரகம்) தான் பங்கடைவர்’ என்றும் எழுதப்பட்டுள்ளது.
எனவே, என் அருமை சகோதரர்களே, ‘நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக.’ (1யோவான் 5:21)
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.
Comments
Post a Comment
Comments