மருத்துவ மிஷனரி - இசபெல்லா கேர் அம்மையார்
‘கொத்தி பேய்’ - யாழ்ப்பாண வீடுகள்தோறும் பல தசாப்தங்களுக்கு முன்பு வரை பயந்திருந்த விடயம்.
குடும்பங்களில் ஒரு குழந்தை பிறந்தவுடன் ஐந்தாம் நாள் அக்குழந்தையை கொத்தி பேய் கொண்டு சென்றுவிடுமோ என்ற பயம் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தது. சரியான பரிகாரங்களைச் செய்தால் தான் அக்குழந்தையை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை சமூகத்திற்குள் உருவாகி இருந்தது. மேலும் அப்பரிகாரங்களைச் செய்ய பிரசவம் பார்த்த மருத்துவச்சிகளுக்கு மட்டுமே தெரியும் என்ற பிம்பத்தை அக்கால மருத்துவச்சிகளும் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தி கொண்டார்கள்.
பிரசவ அறையிலே குழந்தை பிறந்தவுடன் கொத்தி பேய்க்கு பலவித கறிகளுடன் உணவு சமைத்து பிரசவம் பார்த்த மருத்துவச்சி மூலம் படைப்பார்கள். பிறகு அம்மருத்துவச்சி பந்தம் ஒன்றை பற்ற வைத்து தாயையும் பிள்ளையையும் ‘நல்லா இருங்கோ நல்லா இருங்கோ’ என வாழ்த்தி விட்டு சகல அறைகளிலும் “செத்தேக்க பத்தேக்க நில்லாத கொத்தியாத்த” என்று பாடுவாள். பிறகு பேயை அழைத்து செல்கிறேன் என்று கூறி பிரசவம் நடந்த பாய்,தலையனை,சேலை முதலியவற்றை சுருட்டிக்கொண்டு அப்படையல் உணவையும் ஒரு பெட்டியில் எடுத்துக்கொண்டு ஒரு பாழடைந்த இடத்தில் அவ்வுணவை வைத்து முகர்வாள். பிறகு, தன்னுடைய உணவை எடுத்து தன் வீட்டிற்கு செல்வாள். அவள் முகரவில்லையென்றால் அப்பேய் திரும்பவும் வந்துவிடும் என்ற நம்பிக்கை. அதனால் ஒவ்வொரு தாய்க்கும், அவள் சரியாக முகர்ந்தாலோ இல்லையோ, என்ற பயம் ஐந்தாம் நாள் வரை வாட்டி எடுக்கும்.
பிரசவித்த தாய்க்கு இப்பயம் மட்டும் பிரச்சினை அல்ல யாழ்ப்பாண சமூகம் பிரசவித்த தாயை ஒரு தீட்டாகவே முப்பத்தியொரு நாள் வரை பார்த்தது. எனவே, பிரசவித்த பிறகு தாயின் தீட்டு கழியும் வரை வீட்டை விட்டு வெளியே ஒரு குடிசையிலேயே தாயையும் சேயையும் தங்க வைத்தனர். வெயிலோ, மழையோ அவர்கள் இருவரும் அங்கு தான் தங்க வேண்டும். காடுகள், கழனிகள் என்று சூழ்ந்திருந்த அக்காலத்தில் பூச்சிகள், பாம்புகள் போன்ற ஊர்வனவற்றினது பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அநேக நேரங்களில் இக்குடிசைகளில் தாயோ சேயோ அல்லது இருவரும் இறந்து போன நேரங்களும் உண்டு.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் சாவகச்சேரியில் அமெரிக்க மிஷன் மூலம் 1880ம் ஆண்டு அருட்பணி செய்ய வந்த அமெரிக்க வெர்மன்ட் பகுதியை சேர்ந்த மேரி லீச்ரூபவ் மார்கரெட் ஆகிய சகோதரிகளுக்கு யாழ்ப்பாண பெண்கள் மீது ஒரு கரிசனையை கடவுள் கொடுத்தார். மகப்பேறுக்காக சிறப்பு மருத்துவமனையொன்று துவங்குவதே யாழ்ப்பாண பெண்களின் மகப்பேற்று பிரச்சினையை போக்க ஒரே வழியென விளங்கிக்கொண்டனர்.
மேலும், இம்மருத்துவமனை பெண்களால் துவங்கப்பட்டு, பெண்களால் நிர்வகிக்கப்பட்டு, பெண்களால் நடத்தப்பட வேண்டும் என முடிவு எடுத்தனர். தங்கள் மிஷன் மூலம் இத்தரிசனத்தை நிறைவேற்ற முடியாத நிலையில், இந்தியாவில் ஊழியம் செய்து வந்த லண்டன் ஜெனானா மிஷனில் இணைந்தார்கள்.
இருவரும் இங்கிலாந்து சென்று யாழ்ப்பாணத் தமிழ் பெண்கள் பிரசவ காலங்களில் கடந்து செல்லும் சங்கடங்களை பகிர்ந்தனர். ஒரு மகப்பேற்று மருத்துவமனையின் தேவைகளையும் எடுத்துரைத்தனர். தமிழ் பெண்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெறமாட்டார்கள் என்பதனையும் எடுத்துக் கூறி, பெண் மருத்துவ மிஷனரி ஊழியர்கள் தேவை என்பதையும் விளம்பரப்படுத்தினார்கள். தேவன் அவர்களின் தாகத்தை அறிந்தவராய் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றினார்.
ஒரு மகப்பேறு மருத்துவமனை கட்டுவதற்கு தேவையான பணத்தை மக் லியோட் (McLeod) என்ற போதகர் குடும்பம் முழுவதுமாக பொறுப்பேற்றது. கனடாவை சேர்ந்த மேரி இர்வின் என்பவரும் ஸ்கொட்லாந்து நாட்டை சேர்ந்த இசபெல்லா கேர் என்பவரும் மிஷனரிகளாக முன் வந்தனர்.
இனுவில் - நீர்வளம், நிலவளம் நிறைந்த இயற்கை கொஞ்சும் கிராமம். லீச் சகோதரிகள் மருத்துவமனை கட்டுவதற்கு தெரிவு செய்த இடமும் அதுவே. அதேவேளையில், இர்வின் அம்மையாரும் கேர் அம்மையாரும் கொழும்பு வந்திறங்கினார்கள். இர்வின் அம்மையார் கொழும்பு நகரிலேயே தங்கிவிட, தனது இருபது வயதுகளில் கேர் அம்மையார் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தார்கள். மாத்தளை வரை மட்டுமே அக்காலத்தில் புகையிரத சேவை இருந்தது. பிறகு குதிரை வண்டி மூலமாகவே மீதம் 200 மைல் தூரம் பயணம் செய்ய வேண்டும்.
யானை நடமாட்டம் அதிகமுள்ள காட்டுப்பகுதி வழியே அவ் இளம்பெண் தனியாக முன்பின் தெரியாத இடத்தில், மொழி தெரியாத ஊரில் தேவனுக்காக பயணித்தாள். ஒரு குதிரை வண்டியில் ஐந்து மைல்தான் செல்லலாம். வரைபடம் (map) இல்லாத காலத்தில் மைக்கல் இல்லாத பாதையில் வண்டிகள் மாறும் போது அவளுடைய விசுவாசமே அவளுக்கு துணை நின்றது. மாத்தளை முதல் வவுனியா வரை 100 மைல்களும் அவளுடைய பயணங்கள் இரவுகளிலேயே அமைந்ததாக அவள் குறிப்பெழுதியிருக்கிறாள்.
இவ்வளவு தியாகத்துடன் வந்த கேர் அம்மையாருக்கு, இனுவிலை அடைந்தவுடன் ஏமாற்றமே காத்திருந்தது. ஒருவரும் அவரது பிரசவ சேவையை ஏற்கவில்லை. பல பிரயாசங்களுக்கு பின்பு ஒருநாள் மாட்டிற்கு பிரசவம் பார்க்க கிராம மக்கள் அவரை அழைத்திருந்தார்கள். அவரும் பொறுமையோடு மாட்டிற்கு பிரசவம் பார்த்தார். இரண்டாம் முறையாக மாட்டிற்கு பிரசவம் பார்க்க அழைக்கும்போதே தான் மாட்டிற்கு பிரசவம் பார்க்க வரவில்லை எனவும் மனிதர்களுக்கே பிரசவம் பார்க்க வந்தேன் எனவும் திடமாக கூறினார்.
படிப்பறிவில்லா மருத்துவச்சிகள் மேலிருந்த பயத்தால் யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிறப்பான தேர்ச்சியுடன் எடின்பரோ பல்கலைகழகத்தில் மருத்துவ படிப்பையும், சத்திர சிகிச்சை நிபுணத்துவத்தை பேர்மிங்காம் பல்கலைகழகத்திலும் பெற்ற இசபெல்லா கெர் அம்மையார் மீது நம்பிக்கை வைத்து அவரை ஏற்று, அவரிடமிருந்து சிகிச்சை பெற ஆரம்பத்தில் தயக்கம் காட்டினர். எனினும், சிலகாலம் போனபின்பு படிப்படியாக ஜனங்கள் அவரிடம் மருத்துவ உதவி பெற வர ஆரம்பித்தனர். கேர் அம்மையாரின் விடாமுயற்சியும் இறையருளும் யாழ் மண்ணில் கிரியை செய்தன. இன்றைக்கு, கொத்தி பேய் துரத்தும் மருத்துவச்சிகள் கூட்டமே வடு இல்லாமல் போய்விட்டது. கொத்தி மூலைகள் என்று இன்று கிராமங்களில் அழைக்கப்படும் சில பகுதிகள் மட்டுமே மீதமுள்ள நினைவுகளாகும்.
‘பிரசவம் என்றாலே இனுவில்’ என்ற நிலை அன்று உருவாகியது. “பிள்ள நீங்கள் சுகமில்லாமல் (கற்பமாக) இருக்கிறியலோ?” என்பதற்கு “இனுவிலுக்கு போக ஆயத்தமோ?” என்று கேட்பதே யாழ் மண்ணில் வழக்கமாகியது. இனுவில் மருத்துவமனையில் பிரசவம் பார்க்க வரும் பெண், குடும்பத்தோடு வந்து தங்குவதற்கு வசதியாக அந்தக் காலத்திலேயே தனித்தனி வீடுகள் கட்டப்பட்டன. யாழ்ப்பாண தமிழ் பெண்களுக்கு பிரசவ காலம் மேலிருந்த பயம், கொத்தி பேய் திகில், தீட்டுக்கால வெறுப்பு அறவே நீங்க உதவி புரிந்தவர் கேர் அம்மையார் என்றால் மிகையாகாது.
யாழ்குடா நாட்டின் கலாச்சாரத்தையே ஒரு தனி இளம் பெண்ணாக நின்று தேவ துணையுடன் மாற்றினார். நாற்பது ஆண்டுகள் எம் தமிழ் பெண்களுக்காக தியாகத்துடன் பணி செய்து மீண்டும் இங்கிலாந்து சென்ற போது 6வது ஜோர்ஜ் மன்னன் பிரித்தானியா அரசினால் வழங்கக்கூடிய மிக உயர்ந்த விருதான MBE – ‘Member of the British Empire’ விருதை அவருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
பல மிஷன் நிலையங்கள் யாழ் மண்ணில் மறைந்துள்ள நிலையில் இன்று வரை கெம்பீரமாக நிற்கும் MCLEOD மருத்துவமனை பல தியாக அருட்பணி சுவடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. விசேடமாக பெண் தாதியருக்காக முதல் சிறப்பு பயிற்சி இனுவில் வளாகத்திலேயே யாழ் மண்ணில் நடைபெற்றது. இன்றைக்கு இளம் பெண்கள் எவற்றை சாதிக்க முடியும் என்ற கேள்விகளுக்கு பதிலாக தேசம் கடந்து, மிஷன் நிறுவனம் கடந்து, தரிசனத்தை எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்பதற்கு சாட்சியாக இசபெல்லா கேர் அம்மையாரின் வாழ்க்கை உள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மேலும், கேர் அம்மையார் தேவன் தனக்கு கொடுத்த திறமையை பயன்படுத்தி தேவனுக்கு மகிமையையும், ஜனங்களுக்கு ஆசீர்வாதத்தையும் கொண்டு வர அன்று தன்னால் இயன்றதைச் செய்தபடியால், இன்று உலகமே அவரை திரும்பிப்பார்த்து, அவர் செய்த நற்கிரியைகளை நினைவுகூர்ந்து அவருக்கும், அவரை யாழ் மண்ணுக்கு அனுப்பிய எம் ஆண்டவருக்கும் நன்றி செலுத்துகிறது.
அது போலவே, உங்களுக்கும் தேவன் பலதரப்பட்ட திறமைகளை கொடுத்திருக்கிறார். அவற்றைச் சரியான விதத்தில் பயன்படுத்தி, ஆண்டவருக்கு மகிமையுண்டாக உங்களால் இயன்றதைச் செய்ய முன்வாருங்கள்.
‘இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்… இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்…’ (மாற்கு 14 : 8 - 9)
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
Comments
Post a Comment
Comments