அன்புள்ள தம்பி தங்கைமாரே,
நம்முடைய வாழ்க்கை தேவனுடைய கைகளில் இருக்கிறது என்பதை அறிவீர்களா? ஆமாம். இந்த உண்மையை விளங்கிக்கொள்ள நாம் ஒரு உவமையைப் பார்ப்போமா?
உங்கள் எல்லோருக்கும் பென்சில்கள் நன்றாக தெரியும்தானே? நாம் நாளாந்தம் பயன்படுத்தும் சாதாரணமான பென்சில்களையே கூறுகிறேன். ஆம், நாம் எல்லோரும் நமது பரம பிதாவின் கரங்களில் ஒரு பென்சிலைப் போல உள்ளோம் என்பதை அறிவோமாக.
பென்சில்கள் பல மூலப்பொருட்களின் சேர்க்கையினால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனுள் காரீயம், மரத்துண்டு, நிறப்பூச்சு எனப் பல்வேறுபட்ட பொருட்கள் காணப்படுகின்றன. இதே போலவே, நம்மையும் பிதாவின் கைகளில் உள்ள ஒரு பென்சில் என்பதாக நினைத்தோமானால், இந்த பென்சில்களின் பகுதிகள் போலவே நம்மையும் அறிந்துகொள்ளலாம்.
பென்சிலில் நாம் அறிந்துகொண்ட மூலப்பொருட்களுக்குள், காரீயம் என்பது நம்மைக்குறிக்கும். ஆனாலும், வெறும் காரீயத்தைக் கொண்டு அழகாக எழுத முடியுமா? இல்லையே. ஆகவே, அதனைச் சுற்றிக் "கிருபை" என்ற மரத்துண்டை ஆண்டவர் அழகாக நம்மேல் போர்த்திருக்கிறார். ஆகவே, காரீயமும், காரீயத்தைச் சுற்றி இருக்கும் மரத்துண்டும் சேர்ந்து அழகாக எழுத உதவினாலும் அந்த பென்சிலைப் பார்க்கும்போது அதில் எந்த கவர்ச்சியும் இருப்பதில்லை. ஆகவேதான், அந்த பென்சிலுக்கு கவர்ச்சியை கொடுக்க நிறப்பூச்சைப் பூசுவார்கள். ஆகவே, பென்சில்களாகிய எமக்கு பூசப்பட்டிருக்கும் அந்த நிறப்பூச்சானது தேவன் நமக்கு கொடுத்திருக்கும் அபிஷேகமாகும். காரீயமான நம்மை உருவாக்கி படைத்து, நம்மைச் சுற்றிலும் கிருபை என்னும் மரக் கவசத்தை தந்து, அதின் மேல் அபிஷேகம் என்னும் நிறப்பூச்சையும் கொடுத்திருக்கிறார் நம் ஆண்டவர்.
அதுமட்டுமல்ல. நம்முடைய பென்சில் பெட்டிகளினுள் உள்ள பென்சில்களை எடுத்துப் பார்த்தீர்களானால் அவை ஒவ்வொன்றின்மேலும் அந்த பென்சிலை உருவாக்கியவர்கள் தங்களது பெயரையோ, அல்லது தங்கள் நிறுவனத்தின் பெயரையோ அல்லது முத்திரையையோ பொறித்திருப்பார்கள். இது போலவே, பென்சில்களாக உருவாக்கியிருக்கும் நம் ஒவ்வொருவர் மீதும் ஆண்டவர் தனது பெயரைப் எழுதி வைத்துள்ளார். நாம் ஒவ்வொருவரும், பரலோகத்துக்குச் சொந்தமான தேவனுடைய பிள்ளைகள் என்பதை ஆண்டவர் நினைவுபடுத்தி எம்மில் தமது பெயரை எழுதி வைத்திருக்கிறார். இந்தப் பெயர் மட்டுமல்லாது, இந்தப் பென்சில்களின் பெயர்களுக்கு அருகில் ஓவ்வொரு பென்சில்களும் செய்யப்பட்ட தேவையைப் பொறுத்து அவற்றின் தரம் எழுதப்பட்டிருக்கும். இவற்றுள் உயர்வான தரம், தாழ்வான தரம் என்றில்லை, ஆனாலும் ஒவ்வொரு தரத்திற்கும் ஒவ்வொரு வேலை உண்டு. இதைப்போலவே, நம் ஒவ்வொருவரையும் படைத்த ஆண்டவர், நம்மேல் தனது பெயரை வைத்து "நீ என்னுடையவள்", "நீ என்னுடையவன்" என்று சொன்னது மட்டுமல்லாது, நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அழைப்பையும் வைத்திருக்கிறார். அந்த அழைப்பை நம்மிலே அவர் எழுதி வைத்திருக்கிறார்.
இவை எல்லாவற்றையும் போலவே, இந்த பென்சில்களைப் பார்த்தோமானால் அவற்றின் மேல் பக்க முனையிலே ஒரு சிறிய eraser துண்டு (அழி றப்பர்) பொருத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இந்த றப்பரினுடைய பயன்பாடு என்ன? ஆம். நாம் ஒரு பென்சிலை எடுத்து ஒரு தாளில் எழுதும்போது அல்லது வரையும்போது சில பிழைகளை விட்டுவிடுகிறோம். அந்தப் பிழைகளை அழித்து அவைகளைத் திருத்திக்கொள்வதற்கே இந்த அழி றப்பர் பயன்படுகிறது. ஆமாம். இது போலவே, நம்மையும் ஒரு பென்சிலாக பார்க்கும்போது, நம்மேல் ஆண்டவர் வைத்திருக்கும் இயேசு சுவாமியின் இரத்தம் எனக் கொள்ளலாம். நாம் ஆண்டவர் நம்மை அழைத்த அழைப்புக்கு ஏற்ற விதமாய் வாழும் இந்த வாழ்க்கையில் இடையிடையே பிழைகளை விட்டுவிடுகிறோம். ஆண்டவருக்குப் பிரியமில்லாத பாவங்களை செய்துவிடுகிறோம். ஆனாலும், அவற்றை மன்னித்து, பாவமறக் கழுவி, வாழ்வை மாற்றியமைக்கும் இயேசுவின் இரத்தம் நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்னுமொரு முக்கியமான விடயம் உண்டு. மேலே நாங்கள் வாசிக்கும்போது நம் ஒவ்வொருவரையும் ஆண்டவர் ஒரு பென்சிலாக ஒரு நோக்கத்துடன் படைத்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டோம். ஆனாலும், நம்மை ஆண்டவர் படைத்த அந்த நோக்கம் நம்முடைய வாழ்வில் நிறைவேற வேண்டும் என்றால், ஆண்டவருடைய அழைப்பு எங்கள் வாழ்வில் நிறைவேற வேண்டும் என்றால், நாம் மறந்துவிடக் கூடாத ஒரு முக்கிய விடயம் உண்டு. அது என்ன தெரியுமா? பென்சிலானது அதைச் சரியான நோக்கத்திற்காக பயன்படுத்துபவரின் கைகளில் இருக்க வேண்டும். இந்தப் பென்சிலின் அருமை தெரியாத, அதைச் சரியாக பயன்படுத்தத் தெரியாத ஒரு குழந்தையினிடமோ, அல்லது பென்சிலைப் பயன்படுத்தத் தெரியாத ஒருவரின் கைகளிலோ அந்தப் பென்சில் செல்லுமாயின் அதை அவர்கள் பிழையாகப் பயன்படுத்தக்கூடும், அதை எறிந்து விடக்கூடும், உடைத்து விடக்கூடும். ஆகவே பென்சில் சரியானவரின் கைகளிலே எப்போதும் இருக்கவேண்டும். இதைப்போலவே, நாமும் நம்மைத் நமது தாயின் வயிற்றிலிருக்கும்போதே நம்மை அறிந்து, நம்மேல் ஒரு அழைப்பையும் நோக்கத்தையும் வைத்து நம்மைச் சரியாக வழிநடத்தும் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கரங்களுக்குள் அடங்கி இருக்கவேண்டும். அவருடைய கரங்களுக்குள்ளே நாம் அடங்கி இருக்கும்போது நாம் சரியாகப் பயன்படுத்தப்படுவோம்.
இன்னுமொரு அழகான விடயம் தெரியுமா? ஒரு பென்சிலைப் பயன்படுத்துபவர் அந்தப் பென்சிலை அடிக்கடி தீட்டி கூர்மையாக்கிக்கொள்வார். அப்போதுதான் அந்தப் பென்சிலைப் பயன்படுத்தி தேவைக்கேற்றவாறு நுணுக்கமாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதே போலவே நம்மைப் பயன்படுத்தும் நமது பரம பிதாவும் நம்மை அடிக்கடி தீட்டி கூர்மையாக்கிக்கொள்வார். பல்வேறு விதமான சவால்கள், துன்பங்கள், கஷ்டங்கள், தோல்விகள் இனூடாக நாம் கடந்து போனாலும், அதை ஆண்டவர் நம்மைத் தீட்டி தமக்குள்ளே கூர்மையாக்கும் நேரமாக நாம் கருதவேண்டும். ஆண்டவர் நாம் அவருக்கென இன்னும் திறமையாக பயன்படுவதற்காக நம்மைக் கூர்மையாக்கிக் கொள்ளுகிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். தீட்டப்படுவது பென்சிலுக்கு வேதனையைக் கொடுக்கும். "ஐயோ நான் தீட்டப்படுகிறேனே, வேதனையாய் இருக்கிறதே, சில பாகங்களை இழக்கிறேனே, அளவில் சிறியதாகிறேனே" என்று வேதனைப் படலாம். ஆனால், இந்தப் பென்சில் தீட்டப்படவில்லையென்றால் அதில் எந்தப் பயன்பாடுகளும் இல்லை என்பதை அறிவோம். அதே போலவே எமக்கும். நாமும் பிரச்சனைகள் கஷ்டங்கள் சவால்கள் வரும்போது "இவை எல்லாமே நன்மைக்குத்தான், ஆண்டவர் என்னை மென்மேலும் பயன்படுத்துவதற்காய் என்னைத் தீட்டுகிறார் என்பதை அறிந்து அவரில் விசுவாசத்திலே பெலப்படவேண்டும். நாம் இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாய் இருக்கப்போகிறோம் என்பதை அறிந்து செயற்படவேண்டும்.
எனவே, தம்பி தங்கைமாரே, நான் உங்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் யாருடைய கரங்களில் இருக்கிறீர்கள்? 1 பேதுரு 5: 6 சொல்லுகிறது "ஆகையால், ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்" என்று. நாம் நமது பரம பிதாவின் பலத்த கைக்குள் அடங்கி இருந்தோம் என்றால், அவருடைய சித்தம்போல நம்மை வழிநடத்த விட்டுக்கொடுத்தோமானால் நமது உலகத்துக்கும், நமது சமுதாயத்துக்கும் ஒரு ஆசீர்வாதமாய் இருப்போம். நமது திருச்சபையிலும், நமது பாடசாலைகளிலும், நமது வீட்டிலும் நாம் அநேகருக்கு ஆசீர்வாதமாய் இருப்போம்.
ஆகவே, பரம பிதாவின் கைகளில் நாமும் பென்சில்களாய் இருக்கிறோம் என்பதை மறவாமல் வாழ்வோமாக. கர்த்தர் நிச்சயமாக நம்மை உயர்த்துவார். ஆண்டவர் உங்களை உயர்த்தும்வரைக்கும் அவருடைய பலத்த கைகளுக்குள்ளே அடங்கி இருப்போமாக.
கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment
Comments