by பிறேமன் அண்ணா
>>>
என் அன்பின் தம்பி தங்கைமாரே,
இயேசு சுவாமியின் நல்ல சீஷர்களாய் வாழ அழைக்கப்பட்டிருக்கிற நம் ஒவ்வொருவரிலும் இயேசு சுவாமியின் சாயல் இருக்கவேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆம். இயேசுவின் சீஷர் என எம்மை அர்ப்பணிக்கும்போது , நம்மில் உண்மையாகவே இயேசு சுவாமியைப் போன்ற குணநலன்களும் வாழ்க்கைமுறையும் இருக்கின்றதா என்பதை நாம் சிந்தித்துக்கொள்ளவேண்டும். இயேசு சுவாமியின் சாயல் எம்மில் உள்ளதா என்பதை நாம் எப்படி அறிந்துகொள்ளலாம்? சிந்திப்போமா?
நம் ஆண்டவராகிய தேவன் நம்மை சிருஷ்டித்து உருவாக்கியபோது, நம்மைத் தமது சாயலாக உருவாக்கினார். ஆதியாகமம் 1: 26 ல், "பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக" என்று சொல்லியிருப்பதை நாம் வாசிக்கிறோம். அப்படியானால், நம்மை மனுஷராய் படைத்தபோதே தமது சாயலையும் தமது ரூபத்தையும் நம்மில் ஆண்டவர் வைத்திருக்கிறார். தமது குணாதிசயங்கள், தமது எண்ணங்கள் தமது உணர்வுகள், தமது விருப்பங்கள் என அவருடைய சாயலை நம்மிலே பதிந்து வைத்திருக்கிறார். அது மட்டுமல்லாது, நம்மைப் படைத்தபோது தமது ரூபத்தின்படியேயும் நமது உடலை ஆண்டவர் உருவாக்கினார் என வேதம் சொல்லுகிறது. ஆகையால், இன்றைக்கு உங்கள் வீட்டிலுள்ள கண்ணாடியிலோ அல்லது உங்கள் Phone இலுள்ள Selfie கேமராவிலோ உங்களை நீங்கள் பார்க்கும்போது, "நான் தேவனுடைய சாயலாகவும் அவருடைய ரூபத்தின்படியேயும் படைக்கப்பட்டிருக்கிறேன்" என்று சொல்லவேண்டும்.
ஆகையால், தேவனுடைய சாயலையும் ரூபத்தையும் பெற்று, நமது இயேசுசுவாமியின் சீஷராய் வாழ விரும்புகிற நாம் ஒவ்வொருவரும் இந்த மகிமையான தன்மையை எம்மில் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இயேசு சுவாமி எப்படியாக பாவத்துக்கு தன்னுடைய வாழ்வில் இடம்கொடாமல், பரிசுத்தமாய் வாழ்ந்து காட்டினாரோ, அதேபோலவே நாங்களும் வாழ எத்தனிக்கவேண்டும். எம்முடைய வாழ்வும் இயேசுவைப்போல பரிசுத்தமாய் இருக்கவேண்டும். இயேசு சுவாமி எப்படியாக எல்லோரிடத்திலும் தமது அன்பையும் ஆதரவையும் மனதார கொடுத்துவந்தாரோ, அது போலவே எமது வாழ்வும் இருக்கவேண்டும். பிறர்மீது அன்பு வைத்து அவர்களை ஆதரித்து, ஏன் சில நேரங்களில், நம்மை இழந்தும் மற்றவர்களுக்காக நாம் வாழவேண்டும். அதுவே உண்மையான இயேசுவின் சீஷரில் நாம் காணும் இயேசுவின் சாயல். இப்படியாக வாழ்வதே நமது அழைப்பு.
ஆகையால், இன்றைக்கு எங்களையே நாங்கள் சிந்தித்துப் பார்ப்போம். இயேசு சுவாமியின் சீஷராய் வாழ விரும்புகிற எம்மில் இயேசுசுவாமியின் எண்ணங்கள், விருப்பங்கள், குணாதிசயங்கள், உணர்வுகள் இருக்கின்றனவா என சிந்தித்துப் பார்ப்போம். வரும் நாட்களில் இந்த குணாதிசயங்களைப் பற்றி மென்மேலும் உங்களோடு பேச காத்திருக்கிறேன்.
ஆண்டவர்தாமே உங்கள் ஒவ்வொருவரையும் தமது பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலைத் தந்து தமது உண்மையான சீஷராய் வாழ உதவி செய்வாராக.
"இன்னும் இன்னும் உம் அன்பை அறியணுமே..."
வாசிப்பாளர் சின்னம்
READERS BADGE
Comments
Post a Comment
Comments