‘ஒரு மிஷனரி என்பவன் வெறும் சுவிசேஷம் அறிவிப்பவனாக மாத்திரம் இருக்கக்கூடாது. தான் ஊழியம் செய்கிற மக்கள் கூட்டத்தில் ஒட்டுமொத்த சமுதாய மாற்றத்தை உண்டுபண்ண வேண்டும். எந்தவிதத்திலும் அவர்கள் விட்டுவந்த பாவபழக்கத்திற்கு திரும்பிவிடக்கூடாது.’ றொபர்ட் மோபட்டும் அவரது மனைவியும் இதை நன்கு உணர்ந்து ஊழியம் செய்தனர். மிகவும் தாழ்மையாக ஊழியம் செய்து ஆபிரிக்க மக்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக தங்கள் வாழ்நாளை தியாகம் செய்தவர்கள் இவர்கள்.
றொபட் மோபட், 1795ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதியன்று ஸ்கொட்லாந்து தேசத்தில் பிறந்தார். இவரது தாய் வேதத்தை நேசிக்கவும், அதைத் தியானிக்கவும் கற்றுக்கொடுத்தார். தவறாமல் ஆலயம் சென்று வந்தார் றொபர்ட். அந்த ஆலயத்திலிருந்த போதகர் வயதான காரணத்தால் போதக பொறுப்பிலிருந்து ஓய்வு பெற எண்ணினார். அவர், தன்னுடைய இத்தனை வருடகால ஊழியத்தின் மூலம் யாரேனும் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்களா? என்பதை சிந்தித்துக்கொண்டு ஆலய வளாகத்தில் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார். திடீரென்று ஓர் அழுகையின் சத்தம். அந்த திசை சென்று பார்த்தால் அங்கு புதருக்குப் பின்னால் தன் போதகரை இழக்கப் போவதை எண்ணி சிறுவன் றொபர்ட் அழுதுகொண்டிருந்தான். துக்கத்தோடு சிறுவன் றொபர்ட், தான் தூர தீவுகளுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை எடுத்துச்செல்ல விரும்புவதாக போதகரிடம் கூறினார். தன் ஊழியத்தில் பலனை கண்ட திருப்தியால் போதகரின் மனம் மகிழ்ச்சியால் துள்ளிற்று.
தன் இளவயதில் தோட்டக்கலை கற்றார் றொபர்ட். பின்னாட்களில் மிஷனரி பணியில் அத்தோட்டக்கலை அவருக்கு பெரும் உதவியாக இருந்தது. 1816ம் ஆண்டில் ஆபிரிக்காவுக்கு மிஷனரியாகச் சென்றார் றொபர்ட். அப்போது அவருக்கு வயது 21. அங்கு அவருக்கு மொழி சொல்லி கொடுப்பார் யாருமில்லை. அதனால் அம் மக்களோடு தங்கி, வேட்டையாடி, அவர்களைப் போலவே வாழ்ந்து மொழியைப் படித்தார். சில காலத்திலேயே ஆபிரிக்க மக்களை நன்கு புரிந்து கொண்டு, அவர்களை கையாளும் திறமையை பெற்றார். அவரது ஊழியம் முன்னோடி ஊழியமாய் இருந்ததால் அனேக நாட்கள் கனியில்லை.
‘ஞானமுள்ள திருமணம் ஒரு மனிதனின் ஆற்றலை இரட்டிப்பாக்கும்’ என்ற கூற்று உண்டு. றொபர்ட் மோபட்டின் திருமணமும் அதிலொன்று. அவரது மனைவி ‘மேரி ஸ்மித்’ மிஸனரி பணியை உற்சாகப்படுத்தும் மொறேவியன் பள்ளியில் படித்தவர்; பக்தி நிறைந்தவர். 1819ம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. கணவனும் மனைவியுமாக ஆபிரிக்கா வந்த இவர்கள் திட்டமிட்டு ‘குருமன்’ என்ற இடத்தை மையமாகக் கொண்டு ஊழியம் செய்ய ஆரம்பித்தனர்.
ஊழியத்தின் ஆரம்பகாலத்தில் அனேக ஏமாற்றங்கள், சோர்வுகள் ஏற்பட்டன. அவர்கள் ஊழியம் செய்த மக்கள் கூட்டம் மிகவும் மோசமானவர்கள். அவர்கள் பார்க்கும் அனைத்தையும் திருடிவிடுவார்கள். றொபட் பாடுபட்டு உருவாக்கிய தோட்டத்தின் கனிகள், ஆசையோடு வளர்த்த ஆடு எதையுமே அவர்கள் விட்டுவைக்கவில்லை. அதனால் மோபட் தம்பதியினர் தமது சமையல் பாத்திரங்களைக் கூட குடிசையில் வைக்காமல் ஆலயத்திற்கு எடுத்துச் செல்வர், திருடிவிடக் கூடாது என்று. அம் மக்களை நல்லவர்களாக மாற்றுவது சாத்தியமற்றதாகவே தோன்றிற்று. ஆனாலும் இத்தம்பதியினர் சோர்ந்துபோகவில்லை. வருடத்திற்கு வெறும் 120 டொலர் சம்பளத்தில் மிக எளிமையாய் வாழ்க்கை நடாத்தி, எதிர்காலத்திற்காகவும், ஆபிரிக்க மக்களின் மீட்பிற்காகவும் தேவனையே சார்ந்து வாழ்ந்தனர்.
சிலநேரங்களில் காட்டுமிராண்டி தலைவர்களால் விரட்டப்பட்டபோது தேவன் பேரிலுள்ள விசுவாசத்தினாலும், மனிதர்களை லாவகமாக கையாளும் திறமையாலும் தப்பித்தார் மோபட். ஒருமுறை நாட்டைவிட்டு வெளியேறும் படிக்கு மிரட்டப்பட்டபோது, ‘என்னைக் கொன்றாலும் இந்தப் பணியை விட்டுப் போகமாட்டேன்’ என்று அவர் துணிவாகக் கூறினார். அந்தக்காலத்தில் ஊழியம் செய்வது எளிதல்ல. போக்குவரத்து வசதி கிடையாது. சாலை வசதிகள் கிடையாது. அநேக நாட்கள் தொடர் பயணத்தினால் தண்ணீர் குடியாமல் நாவரண்டு பேசமுடியாமல் போன அனுபவமும் உண்டு. சிலவேளைகளில் பசியை மறக்க வயிற்றைச் சுற்றி துணியைக் கட்டிக்கொண்டதும் உண்டு.
பல வருட காத்திருப்புக்கும், மனந்தளராது இவர்கள் ஆற்றிவந்த இறைபணிக்கும் பலனாக, அந்தப்பகுதிக்கே அச்சமாயிருந்த பெரும் தலைவனாகிய ஒரு ஆபிரிக்கன்; கிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் தொடப்பட்டு மனந்திரும்பி தேவனுடைய பிள்ளையாக மாறினான்.
ஆபிரிக்காவில் தாங்கள் நடாத்திய முதல் திருவிருந்து பற்றி மேரி மோபட் பின்வருமாறு எழுதுகிறார்….
‘ஆபிரிக்க இன மக்களோடு சேர்ந்து தேவனை ஆராதிக்கும் இந்தத் தருணம் மகிழ்ச்சியாய் இருக்கிறது. தரையும் சுவரும் சேற்றுக் களி மண்ணாலான இந்த எளிய ஆலயத்தில் நாம் இருந்தாலும், இந்த உலகத்திலுள்ள ராஜாக்கள் எனக்கு கொடுக்க முடியாத கனத்தை தேவன் கொடுத்துவிட்டதாக எண்ணுகிறேன்’ என்றார்.
மேலும் மோபட் அம் மக்களின் மொழியில் வேதாகமத்தை முழுவதுமாக மொழிபெயர்த்துக் கொடுத்தார். குருமனில் ஒரு கிறிஸ்தவ சமுதாயம் உருவானது. அந்த கிறிஸ்தவ மக்கள் ஏற்படுத்திய தாக்கத்தினாலும், மோபட்டின் மிஷனரி பிரயாணங்களாலும் அனேக ஆபிரிக்க இன மக்கள் கிறிஸ்தவர்களானார்கள்.
சீனாவிற்கு மிஷனரியாக செல்ல நினைத்த தன் மருமகன் டேவிட் லிவிங்ஸ்டனை ஆபிரிக்காவில் ஊழியம் செய்ய உற்சாகப் படுத்தியதுடன் தனக்குப் பின்வரும் ஊழியர்களும் ஊழியம் செய்ய ஆபிரிக்க நிலத்தை ஓரளவுக்கு தயார்படுத்திவிட்டுச்சென்றார் மோபட். 1879ம் ஆண்டில் தன் உடல்நிலை மோசமாகவே இங்கிலாந்து திரும்பிய இவர், இறுதியாக, 1883ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 9ம் திகதியன்று தன்னுடைய 88வது வயதில் காலமானார். தன் ஓட்டத்தை இவ்வாறு கிறிஸ்துவுக்குள் வெற்றியாக ஓடி முடித்தார்.
ஆம்… என் அருமை நண்பர்களே, வேதாகமம் கூறுகிறது…..
‘கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்.’ (யோவான் 12:24)
அதைப்போலவே, நாமும் கூட ஆண்டவருக்காக மிகுந்த நற்கனிகளைக் கொடுக்க, எம் வாழ்வை அர்ப்பணிப்போமாக!
வேதவாசிப்புப் பகுதி : யோவான் 15:1-8
Comments
Post a Comment
Comments