Skip to main content

நம்மைத் தெரிந்துகொண்ட இயேசு சுவாமி | GEM STONES


by பிறேமன் அண்ணா

>>>



2011ம்  ஆண்டு, நான் இந்தியாவின் பெங்களூரிலே பல்கலைக்கழக மாணவனாய் இருந்த காலம். ஒரு நாள், அழகான குளிர்ச்சியான அதிகாலை நேரம் அது. எனது சில நண்பர்களோடு சேர்ந்து பெங்களூரு நகரத்துக்கு அப்பாலே இருக்கும் "நந்தி மலை" என அழைக்கப்படும் மலையின் உச்சியை அடைவதற்காக சில மோட்டார் சைக்கிள்களில் சேர்ந்து புறப்பட்டோம். 


எமது நோக்கமெல்லாம், சூரியன் உதிப்பதற்கு முன்னரே நாம் அந்த மலை உச்சியை அடைந்துவிடவேண்டும் என்பதே. திரண்டிருக்கும் அதிகாலை மேகக்கூட்டங்களுக்கு மேல் உள்ள அந்த மலையுச்சியிலிருந்து சூரியன் உதிப்பதைப் பார்ப்பது ஒரு கண்கொள்ளாக் காட்சியென்று கேள்விப்பட்டிருந்தோம். ஆகையால் எங்கள் மோட்டார் சைக்கிள்கள் விரைந்தே சென்றுகொண்டிருந்தன. 

இப்படியாக நாங்கள் விரைந்து சென்ற வழியிலே, நகரத்தின் எல்லையை நெருங்கிக்கொண்டிருந்தோம். எமது மோட்டார் சைக்கிள்கள் சென்ற அந்த பாதைகள்  என் கவனத்தை ஈர்த்தது. திடீரென்று எனக்கு ஒரு ஆச்சரியத்தைக் கொடுத்தது. நாங்கள் பெங்களூரு நகரத்தை விட்டு வெளியேறும் வரையும் அந்த அதிகாலைக் குளிர்ச்சியிலே அநேக வணக்க ஸ்தலங்களை நான் அவதானித்தேன். நாங்கள் சென்ற வழிநீளம் வெவ்வேறு நம்பிக்கைகளை உடையவர்கள் வழிபடும் பல்வேறு ஆலயங்கள், கோவில்கள், பள்ளிவாசல்கள், கூடாரங்கள், ஆச்சிரமங்கள் இருப்பதை அவதானித்தேன். 

இவற்றையெல்லாம் அவதானித்து அவற்றின் பலவிதமான கட்டட அமைப்பு அழகையெல்லாம் ரசித்து சென்ற எனக்கு திடீரென்று ஒரு கேள்வி மனதில் எழுந்தது. சிறு வயதிலிருந்து ஒருபோதும் எழாத கேள்வியொன்று அன்று என் மனதிலே உதித்தது. நகரத்தின் கடைசி வீதிசமிஞ்சை மின்விளக்கு  சந்தியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த எமது மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடியே நமது ஆண்டவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன். விபரீதமான ஒரு கேள்வி. என் வாழ்வில் நான் ஒருபோதும் ஆண்டவரைப் பார்த்து கேட்காத ஒரு கேள்வி. 

"என் ஆண்டவரே, இத்தனை விதமான வெவ்வேறு நம்பிக்கைகளின் மத்தியில் நான் ஏன் உம்மைத் தெரிந்துகொண்டேன்? உம்மை நான் எனது நம்பிக்கையாய் தெரிந்துகொண்ட அந்த ஒரே காரணம் என்ன?" 24 ஆவது வயதில் எழுந்த இந்த கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் தேடிய என் உள்ளம் ஒரு கணம் ஏங்கிப்போனது. ஆனாலும் இதைப்பற்றி பின்பு யோசிப்போம் என்று மனதிலே  சொல்லிவிட்டு தொடர்ந்தும் பயணத்தை சந்தோஷமாய் முடிப்போம் என்று சொல்லிக்கொண்டு மீண்டும் எனது கவனத்தை பயணத்திலே செலுத்தினேன்.

 இந்த மன குழப்பத்தின் நேரம் எமது மோட்டார் சைக்கிள்கள் எல்லாம்  மெதுவாக அந்த பாதையின் முடிவிலே இருக்கும் அந்த வீதிசமிஞ்சை விளக்குகள் அருகாமையில் வந்து நின்றன. எம்  முன்னே ஒரு ஜீப் வண்டியும் நின்றுகொண்டிருந்தது. சிவப்பு நிற விளக்கு எரிந்துகொண்டு இருந்தது. பச்சைநிற விளக்காக மாறுவதற்கு இன்னும்  60.. 59.. 58.. 57.. 56.. செக்கன்கள் எனக் காட்டிக்கொண்டு இருந்தது. சரியாக 03.. 02.. 01.. 00.. என கடிகாரம் மாறி பச்சை நிற விளக்கு ஒளிரவே மோட்டார் சைக்கிள்கள் எல்லாம் உறுமிக்கொண்டு புறப்படும் நேரம் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. நாம் கேட்டவற்றை மறந்தாலும் அவற்றை மறக்காமல் பதில் தரும் ஆண்டவர் எனக்கு ஒரு ஆச்சரியத்தை வைத்திருந்தார். 

எமக்கு முன்னே அவ்வளவு நேரமும் நின்றுகொண்டிருந்த ஜீப் வண்டியின் பின் பக்க கண்ணாடியில் ஒரு வேத வசனம் எழுதப்பட்டிருந்ததை அப்போதுதான் கவனித்தேன். என்ன ஒரு பெரிதான ஆச்சரியம் தெரியுமா? அந்த வேத வசனம் என்ன சொன்னது தெரியுமா? 

யோவான் 15: 16
"நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்."

இன்றைய நாளிலும் இந்த ஆச்சரியத்தை வாசித்துக்கொண்டு இருக்கும் தம்பியே தங்கையே, உன்னையும் ஆண்டவர் தெரிந்துகொண்டிருக்கிறார். நாம் அவரைத் தெரிந்துகொள்ளவில்லை. அவரே நம்மைப் பெயர்சொல்லி அழைத்த ஆண்டவர். வேதத்திலே உள்ள ஆண்டவருடைய வார்த்தை சொல்லுகிறது (எரேமியா 01:05) "நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்" என்று. அன்றைய நாள் காலையிலே எனக்கு இவ்வளவு ஆச்சரியமான பதிலைக் கொடுத்த ஆண்டவர், நம் இயேசு, அவர் உண்மையுள்ள ஜீவனுள்ள ஆண்டவர். அவர் உங்களையும் தனக்காக தெரிந்தெடுத்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். இன்றைக்கு நாம் நமது இயேசு சுவாமியை ஆராதிப்பது, அவருக்கு சாட்சியாய் வாழ்வது, அவருக்காய்  சேவை செய்வது என்பது நாம் விரும்பியதால் நடப்பதல்ல! அவர் நம்மைத் தெரிந்தெடுத்திருப்பதால் நம்மை அவருக்காய் நமது சமூகத்திலே சாட்சியாய் வாழ அழைக்கிறார். அவருடைய உண்மையான சீஷராய் இந்த உலகிலே வாழ அவர் நம்மை அழைத்திருக்கிறார். 

இன்றைக்கு உங்களை சுற்றிலும் இருப்பவர்கள், உங்களுடைய நண்பர்கள், வீட்டில் இருப்பவர்கள், அயலவர்கள் உங்களை, உங்கள் விருப்பங்களை, நல்ல குணங்களை, கெட்டித்தனங்களை அறியாமல் இருக்கலாம். ஆனால் உங்களைத் தெரிந்தெடுத்து அழைத்திருக்கும் நம் இயேசு சுவாமி அதையெல்லாம் நிறம்பவே அறிந்திருக்கிறார். அவருக்கு உங்கள் வாழ்வை ஒப்படைத்து, அவருக்காக வாழும்போது, அவர் நிச்சயமாய் உங்களை  உயர்த்திடுவார். 

ஜெபம் செய்வோமா?
"அன்பின் பிதாவே, நீர் எங்களை உமக்காய் தெரிந்தெடுத்திருக்கிறபடியால் உமக்கு நன்றி. இயேசு சுவாமியின் மூலமாய் நீர் எமக்கு காட்டின அன்புக்காய் நன்றி. உமது பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தோடு நாங்கள் உமக்காய் வாழ நீர் எங்களுக்கு உதவி செய்தருளும். 
ஆமென். 





வாசிப்பாளர் சின்னம் 
READERS BADGE 





Comments

Popular posts from this blog

எனக்கொத்தாசை வரும் பர்வதம் | Enakkoththasai Varum Parvatham | MUSIC NOTES & CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>

ஆவியின் கனிகள் @ QUILLING & NEEDLEWORK

by  ஷரோன் அக்கா >>>

தேவகுமாரா என்னை நினைச்சிடுங்க | Devakumara Enna Ninachchidunga | MUSIC NOTES AND CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>