Skip to main content

FOOTPRINTS க்கு பின்னாக ஒளிந்திருக்கும் ஒரு ஆச்சரியத்தின் கதை | GEM STONES


by பிறேமன் அண்ணா

>>>

அன்புள்ள தங்கை தம்பிமாரே, 

இன்று நான் உங்களுடன் ஒரு அழகான, பிரபலமான சித்திரம் பற்றியும், அதற்குப் பின்னாக இருக்கும் கதை பற்றியும் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.



 உங்களில் எத்தனை பேர் மேலே காணப்படும் "FOOTPRINTS/கால்சுவடுகள்" என்ற படத்தை/சித்திரத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்கள்? அதிகமாக, நமது இல்லங்களில் இந்தப் படமானது ஒரு ஆங்கில கவிதையோடு (English Poem) சேர்த்து அச்சிடப்பட்டு சுவர்களில் மாட்டப்பட்டு இருப்பதை காணமுடியும். 

ஆனாலும், எப்போதாவது இந்த படத்தின் அர்த்தம் என்ன, இதை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இல்லங்களின் சுவர்களிலே மாட்டிவைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? அப்படி என்ன விசேஷம் உண்டு என அறிந்துகொள்ளுவோமா? இயேசு சுவாமியின் சீஷராய் வாழ விரும்பும் நம் ஒவ்வொருவருக்கும் இந்தப் படத்திலே ஒரு ஆழமான உண்மை மறைந்திருக்கிறது.


1964ம்  ஆண்டு எழுதப்பட்டிருக்கக்கூடும் என கருதப்படும் இந்த ஆங்கில கவிதை யாரால் எழுத்தப்பட்டது என்பது இன்றைக்குவரைக்கும் ஒரு கேள்வியான விடயமே. அதிகப்படியான ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கவிதை மார்கிரெட் பவேர்ஸ் (Margaret Powers) என்பவரால் எழுதப்பட்டது என்றே நம்புகின்றனர். ஆனாலும் நாம் இன்று கற்றுக்கொள்ள இருக்கும் கடவுளின் சத்தியம் யாருக்கூடாகவோ கொடுக்கப்பட்டது என்பதை நினைத்து நம் ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம். இந்த "FOOTPRINTS-கால்சுவடுகள்" என்ற கவிதையே பின்னர் வெவ்வேறு ஓவியர்களால் ஓவியமாக சித்திரிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த கவிதையும் ஓவியங்களும் என்னத்தைச் சொல்லுகின்றன எனப் பார்ப்போமா? 

ஒரு நாள் ஒருவர் ஒரு கனவு கண்டாராம். அந்தக் கனவிலே, அவர் ஒரு கடற்கரை ஓரமாய் மணலின் மீது நடந்துகொண்டு சென்றாராம். அவர் நடந்துகொண்டு செல்லும்போது நிச்சயமாக அவருடைய கால்சுவடுகள் அந்த மெதுமையான மணலின் மேலே பதிந்திருக்கும் அல்லவா? ஆம். இப்பொழுது இந்த  நபர் நீண்ட தூரம்  மணலின்மேல் நடந்து முடித்துவிடவே, அவர் தான் கடந்து வந்த வழியைத் திரும்பிப் பார்த்தாராம். அப்பொழுது இரண்டுபேர் நடந்து வந்த காலடிகள் அவருக்குத் தெரிந்ததாம். "இதுவே நீ கடந்து வந்த வாழ்க்கைப் பாதை. உன்னோடு சேர்ந்து நானும் நடந்து வந்தேன்" என ஆண்டவர் உணர்த்தும் எண்ணம் இவருள் தோன்றியதாம். என்னவொரு மகிழ்ச்சி. "ஆ, என்னுடைய வாழ்க்கைப் பாதை முழுவதும் ஆண்டவரும் என்னோடு நடந்து வந்தாரா? எவ்வளவு ஆசீர்வாதம்!" என்று மனம் மகிழ்ந்தாராம். இப்படியாக மனம் மகிழ்ந்து அந்த கால்சுவடுகளை மணலின் மேல் உற்றுநோக்கிய அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததாம். அது என்ன தெரியுமா?

அவர் தனது கடந்து வந்த வாழ்க்கையே இந்த மணலின் மேலுள்ள கால்சுவடுகள் என்று நினைத்து மகிழ்ந்து அதை உற்றுநோக்கியபோது, சில இடங்களிலே ஒருவருடைய கால்சுவடுகள் மாத்திரமே இருந்ததாம். "ஐயோ, ஆண்டவரும் நானும் வாழ்விலே தொடர்ந்து ஒன்றாக நடந்து வந்தோம் என்று நினைத்தேனே, ஆனால் சில இடங்களிலே ஒருவருடைய கால்சுவடுகள் மட்டுமே இருக்கின்றனவே?" என்று மனம் உடைந்தாராம். அது மட்டுமல்ல. இந்த ஒரு நபரின் கால்சுவடுகள் தெரிவதெல்லாம் எந்தக் காலங்கள் என ஞாபகப்படுத்திப் பார்த்ததும் அவருக்கு இன்னும் கவலை அதிகரித்ததாம். ஏனெனில், எப்போதெல்லாம் அவருடைய வாழ்விலே கஷ்டங்கள், கவலைகள், கண்ணீர்கள், தோல்விகள், பிறரின் வெறுப்புகள், அவமானங்கள், நோய்கள், மன உடைவுகள் வந்ததோ அப்போதெல்லாம் ஒரு நபரின் காலடிகள் மட்டுமே தெரிந்ததாம். மிகவும் மனம் உடைந்தாராம். எனக்கு கஷ்டம் வந்த நேரங்கள், தாழ்விலே இருந்த நேரத்திலெல்லாம் ஆண்டவர் என்னோடு வரவில்லையே, என்னை விட்டுத் தள்ளிப்போய்விட்டாரே என்று விரக்தியடைந்தாராம். என்ன செய்தார் தெரியுமா?

நேரே ஆண்டவரிடம் ஓடினாராம். விரக்தியுடன் ஆண்டவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாராம். "ஆண்டவரே, எப்போதெல்லாம் என்னுடைய வாழ்விலே கஷ்டங்கள், கவலைகள், கண்ணீர்கள், தோல்விகள், பிறரின் வெறுப்புகள், அவமானங்கள், நோய்கள், மன உடைவுகள் வந்ததோ அப்போதெல்லாம் ஒரு நபரின் காலடிகள் மட்டுமே தெரிகின்றன. நான் தனியாக நடந்திருக்கிறேன். ஏன் என்னை அந்த நேரங்களிலே தனியாக விட்டுச்சென்றீர்கள்? அந்த நேரங்களில் அல்லவா நீங்கள் எனக்காக என்னோடு இருந்திருக்கவேண்டும்?" என்று வேதனையோடு கேட்டாராம். அதற்கு ஆண்டவரின் பதில் என்ன தெரியுமா? 

அவருடைய வேதனை நிறைந்த கேள்வியைப் பார்த்து ஆண்டவர் ஒரு அமைதலான ஆறுதலான பதில் சொன்னாராம். "மகனே, உனக்கு எப்போதெல்லாம் வாழ்விலே கஷ்டங்கள், கவலைகள், கண்ணீர்கள், தோல்விகள், பிறரின் வெறுப்புகள், அவமானங்கள், நோய்கள், மன உடைவுகள் வந்ததோ அப்போதெல்லாம் ஒரு நபரின் காலடிகள் மட்டுமே தெரிவது உண்மையே. ஏனெனில், அந்த நேரங்களிலெல்லாம் தெரிவது உன்னுடைய கால்சுவடுகள் அல்ல, அவை என்னுடையவை. உனக்கு எப்போதெல்லாம் சந்தோசம், நிறைவு, களிப்பு, வெற்றி, அன்பின் உறவுகள், புகழ்ச்சி இருந்ததோ அப்போதெல்லாம் நான்  உன்னோடு கைப்பிடித்து நடந்தேன். ஆனால் நீ கஷ்டப்பட்ட நேரங்களில், நான் உன்னை நடக்க விடவில்லை. உன்னை நான் தூக்கிச் சுமந்துகொண்டு நடந்தேன்!" என்று விடையளித்தாராம். 

என் அன்பின் தம்பியே தங்கையே, இன்றைய நாளிலும் நீங்கள் இதை வாசிக்கும்போது உங்கள் கண்கள் கலங்கலாம். ஆண்டவரின் அன்பையும் அவருடைய அரவணைப்பையும் நினைத்து நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால், இதுவே உண்மை. உன்னைப் பெயர்சொல்லி அழைத்திருக்கிற ஆண்டவர் நம் இயேசு சுவாமி உண்மையுள்ளவர். ஒருபோதும் மாறாதவர். அவர் உங்களை என்றுமே காத்திடுவார். அவருக்கே உங்களுடைய வாழ்வை அர்ப்பணித்து அவருக்காகவே வாழ உங்களை ஒப்புவிப்பீர்களா? கர்த்தர் உங்களை  தேற்றி வழிநடத்துவார். 

அடுத்த முறை "FOOTPRINTS - கால்சுவடுகள்" படத்தைப் பார்க்கும்போதோ, அல்லது அந்த கவிதையைக் காணும்போதோ, இந்த ஆழமான சத்தியம் உங்களுக்கு ஞாபகம் வரட்டும். ஆண்டவர் தாமே உங்களை வழிநடத்துவாராக. 



Comments

Popular posts from this blog

எனக்கொத்தாசை வரும் பர்வதம் | Enakkoththasai Varum Parvatham | MUSIC NOTES & CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>

ஆவியின் கனிகள் @ QUILLING & NEEDLEWORK

by  ஷரோன் அக்கா >>>

தேவகுமாரா என்னை நினைச்சிடுங்க | Devakumara Enna Ninachchidunga | MUSIC NOTES AND CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>