by பிறேமன் அண்ணா
>>>
அன்பின் தம்பி தங்கைமாரே,
இயேசு சுவாமி எம் ஒவ்வொருவரையும் தம்முடைய சீஷர்களாய் அழைத்திருக்கிறார், தெரியுமா? தமது உண்மையுள்ள சீஷர்களாய் நாம் வாழ வேண்டும் என்பதே அவருடைய விருப்பம். ஆனாலும், இன்றைக்கு நான் உங்களிடம் ஒரு குட்டிக் கேள்வி கேட்க விரும்புகிறேன். இயேசுவின் விசுவாசிகளாக வாழ்வதற்கும், இயேசுவின் சீஷராய் வாழ்வதற்கும் இடையே என்ன வித்தியாசம்? சிந்திக்கத் தோணுகிறதல்லவா? சிந்திப்போமா?
இயேசுவின் நாமத்திலே நம்பிக்கை வைத்து, அவரையே தங்கள் வாழ்வின் வழியாய், கடவுள் எம்மீது வைத்த அன்பின் வெளிப்பாடாய் இயேசுவைக் கண்டு, அவரின் நாமத்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிற எல்லோருமே அவருடைய விசுவாசிகளே. ஆனாலும், இயேசுவின் சீஷராய் வாழ்வதென்பது இவற்றையும் தாண்டிச் செய்யும் ஒரு காரியமே.
சாதாரணமாக இந்த உலகில், சீஷர் என்றால் யார் என்று கேட்கும்போது, ஒரு குருவிடம் பயின்று, அவர் வழியைப் பின்தொடர்ந்து, அவரையே தங்கள் உதாரணமாய் வைத்து வாழ்பவர்களே என்று யாரும் சொல்லக்கூடும். அப்படியாயின், நாம் இயேசுவின் சீஷராய் இருப்பதுவும் அதுதானா? அல்லது இவற்றிற்கும் மேலாக ஏதுமுண்டா? இவற்றிக்கு நாம் பதில் தேட விரும்புவதால், இயேசுவின் சீஷர் என்றால் யார், அவர்களிடம் நாம் எதிர்பார்க்கும் விஷேட குணாதிசயங்கள் எவை என்பதை சிந்தித்துப் பார்க்கலாம்.
நாம் வாழும் இந்த உலகில், அநேகர் அநேக விதமான தேவைகளோடு, பாரங்களோடு, கஷ்டங்களோடு வாழுவதை நாம் அறிந்திருக்கிறோம். இவற்றின் மத்தியிலே இருக்கும் மிகப்பெரிய பாரம் தான் குற்ற உணர்வு. நாம் பிழையான காரியங்கள் செய்யும்போது, விஷேடமாக மற்றவர்களை நோகப்பண்ணும், பாதிக்கும், காயப்படுத்தும் அளவுக்கு நாம் ஏதும் செய்து, நமது பிழையை நாம் பின்னர் உணரும்போது வேதனைப்படுகிறோம். "ஐயோ, நான் அப்படி செய்திருக்கக் கூடாதே" என்று நினைத்து கலங்குகிறோம். நமக்குள்ளே குற்ற உணர்வு பெருக ஆரம்பிக்கும். இப்படியாக கடவுளுக்கு அருவருப்பான , பிறருக்கு வேதனையளிக்கும் காரியங்களை நாம் செய்வதையே "பாவம்" என்று சொல்லுகிறோம். ஆகையால் பாவம் செய்த ஒருவருக்கு, தன் பாவத்தை உணரும்போது வரும் உணர்வே "பாவசஞ்சலம்" அல்லது "குற்றவுணர்வு" என்று நாம் அழைக்கிறோம். இந்த உணர்வு ஒரு நாலு பக்கமும் கம்பியால் அடைத்த சின்ன சிறைக்கூண்டுக்குள் இருப்பதைப் போல ஒரு உணர்வைத் தரும். இந்த குற்ற உணர்வை மனதிலே பாரமாய் தூக்கிக்கொண்டு உலகில் அநேகர் அலைந்து கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
"யார் நம்மை இந்த பாவசஞ்சலம் என்ற கூட்டிலிருந்து விடுவிப்பார்கள்? யார் உதவி செய்வார்கள்? இந்தக் குற்ற உணர்விலிருந்து நான் எப்படி விடுபடலாம்?" என்று கோடிக்கணக்கானோர் இந்த பூமியில் வேதனையோடு இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இயேசுவின் அன்பைக் காட்டி, "நீ பயப்படாதே, உனக்காக, உன்னுடைய இடத்தில் இயேசு சுவாமி மரித்தார். உன்னுடைய குற்றங்களை அவர் சிலுவையில் சுமந்தார். இன்றும் உயிரோடெழுந்து உனக்கு வாழ்வு தருவதற்காய் அவர் நம்மிடையே வாழ்கிறார்" என்ற நல்ல செய்தியைச் (நற்செய்தி) சொல்லுவது மட்டுமில்லாது, இப்படியாக கஷ்டப்படும் அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் தொடர்ந்தும் சேவை செய்வதே இயேசுவின் சீஷரின் முதல் நோக்கம்.
ஆகையால், இயேசுவின் சீஷராய் வாழ விரும்பும் ஒருவருக்கு முதலாவது, இயேசு சுவாமியைப்போல் இந்த உலகில் இருப்பவர்களை நேசிக்கும், அன்பு காட்டும், அவர்களுடைய கஷ்டத்தை உணர்ந்து அவர்களுக்கு உதவி செய்யும் மனது இருக்க வேண்டும். அதுவே மிகமுக்கியம். இயேசுவின் சாயல், இயேசுவின் அன்பு, இயேசுவின் இரக்கம், இயேசுவின் மன்னிக்கும் உள்ளம், இயேசுவின் பணி செய்யும் எண்ணம் நமக்குள் வளர வேண்டும். அப்படி நடக்கும்போதே நாம் அவருடைய சீஷராய் மாற, இந்த உலகில் இயேசுவுக்கு சாட்சிகளாய் வாழ முடியும்.
இயேசுவின் சீஷரின் குணாதிசயங்கள் இன்னும் அநேகம் உண்டு. தொடர்ந்து வரும் நாட்களிலே நான் ஒவ்வொன்றாய் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நாம் ஒவ்வொன்றாக வரும் நாட்களிலே கற்கப்போகிறோம்.
இன்றைக்கு ஆண்டவர் இயேசு சுவாமி உங்களையும் தன்னுடைய சீஷரில் ஒருவராய் அழைத்திருக்கிறபடியால் அவரிடம் ஜெபிப்பீர்களா? "இயேசு சுவாமி நான் உம்முடைய சீஷரில் ஒருவராய் உமக்காய் வாழ, உமக்காய்ப் பணி செய்ய விரும்புகிறேன். நீர் என்னை அழைக்கிறீர் என்று அறிகிறேன். இன்றைய நாளிலும் என்னை உம்மைப்போல் மாற்றும் ஆண்டவரே. உம்முடைய சாயல், உமது அன்பு, உமது இரக்கம், உமது மன்னிக்கும் உள்ளம், உம்மைப்போல் பணி செய்யும் எண்ணம் என்பவற்றை என்னில் நிரம்பவே தந்து ஆசீர்வதியும்" என்று கேட்போமா?
வாசிப்பாளர் சின்னம்
READERS BADGE
Comments
Post a Comment
Comments