by பிறேமன் அண்ணா
>>>
சிறு வயதிலிருந்தே இசையிலே ஆர்வம் இருந்த எனக்கு, பாடசாலைக் காலங்களிலே இசை சம்பந்தமான நிகழ்வுகளிலும் போட்டிகளிலும் பங்குபற்றும் வாய்ப்பு நிறையவே கிடைத்தது. நான் வாழ்ந்த பிரதேசத்தின் சிறந்த இசை ஆசிரியர்களால் பயிற்றப்பட்ட சந்தர்ப்பங்களும் அநேகம் கிடைத்துக்கொண்டு இருந்தன. இப்படியாக இசைத் துறையிலே அநேகம் சாதிக்கலாம், புகழ் பெறலாம் என்று இருந்த எனக்கு திடீரெண்டு ஒரு எண்ணம் உதித்தது. எனது 12 வது வயதிலே ஒரு எதிர்பாராத எண்ணம் என்னைப் பிடித்துக்கொண்டது.
என் ஆண்டவர் இயேசு சுவாமி எனக்கு ஆசீர்வாதமாய்த் தந்த இந்த இசை ஞானம், இசைக்கருவிகளை மீட்டும் திறன், பாடும் ஆற்றல் என்பவற்றை ஆண்டவருக்குப் பிரியமில்லாத, ஆண்டவர் வெறுக்கும், அருவருக்கும் தேவைகளுக்குப் பாவிக்கவும் கூடாது, அப்படிப் பாவித்து பயனடையவும் கூடாது என்று ஒரு முடிவு எடுத்தேன். இந்த முடிவை நான் எடுத்திருந்த காலங்களிலே, நான் பாடசாலையிலே கர்நாடக சங்கீதத்தையும், தனியார் வகுப்புகளிலே மேலைத்தேய சங்கீதத்தையும் (Western Music) ஆவலாய்க் கற்று வந்தேன். இவை இரண்டும் எனக்கு இன்றுவரை மிகவும் விருப்பம். எனது இசை வாழ்வின் இன்றியமையாத இந்த இரண்டு சங்கீதங்களும் இன்றுவரை எனது ஊழிய பயணத்திலும், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக வாழ்விலும் அநேக பங்களிப்பையும் சந்தோஷங்களையும் கொடுத்தவையாகவே உள்ளன. ஆனாலும், அந்த சிறு பராயத்திலே எனது மனதுக்கு விரும்பாத, என் நாவு பாட விரும்பாத எத்தனையோ பாடல்களை நான் பாடவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன். ஏனென்றால் நான் பாடசாலையிலே படித்துவந்த பாடங்களில் அது ஒன்றாகும், ஆகையால் நான் அவற்றில் எனக்கு விரும்பிய எத்தனையோ பாடல்களைப் பாடினாலும், எனக்கு விரும்பாத அநேக பாடல்களையும் பரீட்சைகளிலே கட்டாயம் பாடவேண்டிய நிலைக்கு வந்தேன். நான் எடுத்திருந்த தீர்மானத்தையும், ஆண்டவருக்கு விரும்பாத எதையும் நான் செய்ய விரும்பவில்லை என்ற எனது அவாவையும் எனது பெற்றோரிடம் சொன்னேன். என்னைச் சிறு வயதுமுதல் ஆண்டவருக்குள்ளே வளர்த்தெடுத்த அவர்களுக்கு எனது தேவை விளங்கியது. அவர்களின் உதவியுடன், பாடசாலையில் கர்நாடக சங்கீதம் படிப்பதில்லை என்ற தீர்மானத்தை எடுத்தேன்.
அந்நாட்களில், எமது பாடசாலையில் இரண்டு தெரிவுகளே இருந்தன. ஒன்றில் கர்நாடக சங்கீதம் கற்கவேண்டும், இல்லாவிட்டால் சித்திரக் கலையைக் கற்கவேண்டும். எனக்கும் சித்திரத்துக்குமோ வெகு தூரம் என்பதை நான் நன்கே அறிந்திருந்தேன். மேசையில் மூன்று புத்தகங்களையும் ஒரு பூச்செண்டையும் வைத்துவிட்டு இதைப் பார்த்துக் வரையுங்கள் என்றால் எனது படம் மாத்திரம் மூன்றுமாடி உடைந்த கட்டிடங்களும் அருகில் ஒரு பெரிய விசித்திரமான வாழைமரமும் நிற்பதுபோல் தென்படும். எனது வரைதல் அவ்வளவு மோசம்! ஆனாலும் துணிகரமாக, வேறு வழி இல்லையென்பதால், இன்றுவரை எனக்கு மிகவும் அருமையான விருப்பமான கர்நாடக இசையைக் கற்பதை நிறுத்தி எனது ஏழாம் ஆண்டு இரண்டாந் தவணையிலே சித்திர வகுப்பினுள் சென்று சம்பந்தமே இல்லாத நான் என்னை அதனுள் புகுத்திக்கொண்டேன்.
ஆசிரியர்கள் நண்பர்கள் எல்லோருக்கும் பெரிய ஆச்சரியம். சில ஆசிரியர்கள் என்னை அழைத்துப் பேசியும் இருந்தார்கள். அந்த நாட்களில், சித்திரம் கற்று GCE O/L பரீட்சையில் 'A' சித்தி பெற்றுக்கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. அதே வேளை, இசையில் சிறப்பாக ஈடுபடும் மாணவருக்கு சங்கீதத்தில் 'A' சித்தி பெற்றுக்கொள்ளுவது என்பது சுலபமான ஒன்றாக தென்பட்டது. ஆகவே "உனது O/L பரீட்சையில் ஒரு 'A' சித்தியை வீணாக இழக்கப்போகிறாய்" என்றும் பயமுறுத்தினர். ஆனால் ஆண்டவருக்காய் எடுத்த முடிவிலே உறுதியாய் இருந்தேன். எனது முடிவையும், அந்த முடிவால் வந்த மாற்றத்தையும் எனது ஞாயிறு பாடசாலை ஆசிரியரிடமும் சொல்லியிருந்தேன். அது அவரையும் ஆச்சரியப்படவைத்தது.
இவை அனைத்துக்குப் பின்பும், எனது பாடசாலை சங்கீத ஆசிரியர்கள் என்னை மறக்கவில்லை. என்ன ஆச்சரியம். எவ்விதமான சங்கீத மேடைகள், போட்டிகள், நிகழ்வுகளிலிருந்தும் அவர்கள் என்னை மறக்கவில்லை. என்னைத் தேடி அழைத்து சேர்த்துக்கொள்ளுவார்கள். அத்தனை சங்கீதம் கற்கும் மாணவர்கள் மத்தியில் சித்திர வகுப்பிலிருந்து ஒரு மாணவனாய் அநேக மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டிகளிலும் நிகழ்வுகளிலும் பங்குபெறவும் பரிசுகள் வாங்கவும் ஆண்டவர் உதவி செய்தார். இதே காலங்களில், நான் தனியார் வகுப்புகளிலே கற்றுவந்த மேலைத்தேய சங்கீதத்திலும் சிறந்து விளங்கினேன். எத்தனையோ பரீட்சைகளிலும், போட்டிகளிலும் முதலிடங்களையும், தங்கப் பதக்கங்களையும் பெற்றிருந்தேன். இப்படியாக சில வருடங்கள் கழிந்தது. கஷ்டப்பட்டு, ஒரு விதமாக, அத்தனை வருடங்களும் சித்திரப் பாடத்தில் இயலுமான புள்ளிகளைப் பெற்று School Marks Report ஐ நிரப்பி வந்தேன். கடைசியாக என்னுடைய GCE O/L பரீட்சையை எழுதி பெறுபேறுகளுக்காக ஆவலாய்க் காத்திருந்தேன். என்னுடைய பெறுபேறுகள் வெளியாகின. பாடசாலையின் வாழ்த்துதலைப் பெற்றுக்கொள்ளும் மாணவர் பட்டியலில் என்னுடைய பெயர் இடம்பெற்றாலும், எனது பெறுபேறுப் பட்டியலில் ஒரே ஒரு 'S' இருந்தது. அந்த 'S' வேறு எதுவுமல்ல, அந்த சித்திரக் கலைப் பாடமே!
நான் என்னுடைய ஏழாம் ஆண்டிலே எடுத்த திடமான முடிவை நான் மறந்துபோயிருந்தாலும், என்னுடைய ஞாயிறுப்பாடசாலை ஆசிரியர் அதை மறக்கவில்லை. அவர் என்னை அழைத்து எனக்கு ஒரு அருமையான வாக்குத்தத்தத்தை சொன்னார். "மகன், நீ ஆண்டவருக்காய் நின்றதை நீ மறந்திருக்கலாம், ஆனால் அவர் அதை மறக்கப்போவதில்லை. இன்றைக்கு உனக்கு சித்திரத்திலே ஒரு 'S' கிடைத்திருக்கலாம், ஆனாலும் ஆண்டவர் உனக்கு இசையிலே கோடி கோடியான 'A' தந்து உன்னை எடுத்து மகிமையாய்ப் பயன்படுத்துவார்" என்றார். அன்று என்னுடைய ஆசிரியருக்கூடாக பேசியத்தைப் போலவே, இன்றுவரைக்கும் ஆண்டவர் உண்மையுள்ளவராய் என்னை இசையிலே வளர்த்து வருகிறார்.
60 க்கும் மேலான பாடல்களை எழுதி பாடவும், அநேகரைப் பாடவைக்கவும் உதவி செய்திருக்கிறார். எனது 19 வது வயதிலே சகிஷ்ணா அண்ணாவுடன் சேர்ந்து "இயேசுவே என் நேசர்" என்ற இசை இறுவட்டை வெளியிடவும், தொடர்ந்து அநேக இடங்களிலே ஆண்டவருக்காய்ப் பாடவும் செய்திருக்கிறார். இன்று சகிஷ்ணா அண்ணாவும் படித்து ஒரு வைத்தியராகியும் ஒரு பிரபல இசை அமைப்பாளர் ஆகி இருப்பது மட்டுமல்லாது ஆண்டவருக்காய் எழுந்து நிற்கிற ஒரு பெரிய சாட்சி ஆகி இருப்பதை நினைத்து மகிழ்கிறேன். நான் சென்ற இடமெல்லாம் ஆண்டவர் என்னை பயன்படுத்தினார். திருச்சபையிலும் பயன்பட வைத்தார். பல்கலைக்கழகத்திலும் வெளியிலும் ஆண்டவருக்காக நிரம்பவே பாடி மகிழ்ந்திருக்கிறேன். ஒரு ஆராதனைத் தலைவனாய் என்னை அழைத்த ஆண்டவர் நான் பாடும் பாடல்களில் மகிழ்ந்தார். எத்தனையோ வெற்றிகளையும் மகிமையையும் தந்து காக்கிறார். அநேக தடவைகளில் நான் பாவத்தில் விழுந்து விலகிச் செல்ல முயன்ற நேரங்களிலும், இந்த இசை என்ற ஆசீர்வாதத்தால் தேற்றி, வளர்த்து மீண்டும் நிறுத்தினார். எத்தனையோ வாலிப அண்ணாமார் அக்காமார் எனது பாடல்களால் தொடப்பட்டு சாட்சிகளைப் பகிர்ந்து கொள்வதை கேட்டு மகிழ்வேன். இன்றும் என்னிடம் இசை கற்றுக்கொண்டவர்கள் என்னை விட எவ்வளவோ உயரங்கள் தொட்டிருப்பதை பார்த்து ரசிக்கிறேன். எனது நண்பர்கள் எத்தனையோ பேர் தங்களுடைய விசேடமான வாழ்வின் தருணங்களிலே என்னுடைய பாடல்களைத் தெரிந்தெடுத்து பாடுவதை பார்த்து ஆச்சரியப்படுகிறேன். இந்த சாட்சியும் வியப்பும் என்னுடைய வாழ்விலே இன்னும் அநேகம் தொடரும் என்று நம்புகிறேன். நம் ஆண்டவர் இயேசு சுவாமிக்கே எல்லா துதியும், புகழும், மகிமையும் உண்டாகட்டும்.
இன்று உங்களையும் ஆண்டவர் அழைக்கிறார். உங்களிடம் ஆண்டவருக்கென்று கொடுக்க பயன்படுத்த அநேக கெட்டித்தனங்கள், திறன்கள், ஆற்றல்கள் உண்டு. அவற்றை அவர் விருப்பத்துக்கும் சேவைக்குமே பயன்படுத்துவேன் என்றும், அவருக்கு பிரியமில்லாத அருவருப்பான வழிகளிலே நான் அதைப் பயன்படுத்துவதில்லை என்று உங்களை அர்ப்பணிக்கும்போது, அவர் உங்களை உயர்த்தி, மகிமைப்படுத்தி, உங்களை வல்லமையாய் எடுத்துப் பயன்படுத்துவார். ஆண்டவர்தாமே நம்மை வழிநடத்துவாராக.
Comments
Post a Comment
Comments