நூற்றாண்டு காலங்களாக ஓவியக் கலை என்பது வரலாற்றின் வெவ்வேறு
கட்டங்களில் தனிச்சிறப்புடன் சிறந்து விளங்கிய ஒரு கலை ஆகும். அழகியல்
வெளிப்பாட்டுக்காக மட்டுமன்றி, பலதரப்பட்ட அரசியல், பொருளாதார, மனித வளர்ச்சிகளை
வெளிப்படுத்தும் ஊடகமாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் அதே சிறப்புடன், வெவ்வேறு
சந்தர்ப்பங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாக ஓவியங்களும் ஓவியக் கலையும்
திகழ்கின்றன.
இன்றைக்கு கிறிஸ்தவர்கள் மத்தியிலும், கிறிஸ்தவ ஊழியங்கள், விசேடமாக
நற்செய்தி பணியில் இசை என்பது பெருமளவில் பயன்படும் ஒன்றாகவும், வெளிப்படையாக
பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாகவும் இருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம், நிகழ்காலத்தில்
YouTube ல்
கிறிஸ்தவ நற்செய்தி மற்றும் ஆராதனை பாடல்களுக்கு இருக்கும் முக்கியத்தைக்
எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதே அளவுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ஒன்றே ஓவியங்கள்.
கர்த்தரின் அபிஷேகம் நிரம்பிய, அர்ப்பணிக்கப்பட்ட அநேக நற்செய்தி
ஓவியர்களைக் நம்மிடத்தே காணவேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.
எமது ஆண்டவரின் மேன்மையைப் பற்றியும், அவர் செய்த மற்றும் செய்து
வருகிற ஆச்சரியங்கள் அதிசயங்களை, அவரது அன்பை, எதிர் காலத்தில் நாம் சந்திக்க
இருக்கும் ஆவிக்குரிய மற்றும் உலகத்தின் சவால்கள் பற்றியும், தரிசனங்கள்
பற்றியும், ஜெபத்தோடும் அர்ப்பணிப்போடும் ஓவியங்களை வரைந்து சமூகத்தில் பகிர்ந்துகொள்ளும் கிறிஸ்தவ நற்செய்தி ஓவியர்கள் இன்றைக்கு நம் மத்தியில் வேண்டும். இந்த
ஓவியர்களின் ஒவ்வொரு கோடுகளும் வர்ணங்களும் கர்த்தரின் மகிமைக்காகவும் அவரது
மேன்மையின் வெளிப்பாடகவும் இருக்கவேண்டும். இந்த அர்ப்பணிப்பின் ஓவியர்களின்
கரங்களும் சிந்தைகளும் கர்த்தரின் அபிஷேகம் நிரம்பியவையாக இருக்கட்டும். இரண்டு
முக்கியமான விடையங்களை இவ்விடத்தில் பகிர்ந்து கொள்வது நல்லது.
ஒன்று, இந்த குறிப்பை வாசிக்கும்போதே உங்களுக்கு எழுந்திருக்கக்கூடிய
ஒரு கேள்வி. “ஓவியக்கலை கற்றவர்கள் நம்மத்தியில் இல்லையே” என்பதாகும். இசையை,
நடனத்தை கற்பதற்காக நம்மத்தியில் அநேக சந்தர்ப்பங்கள் இருக்கும்போது, ஓவிய கலையை
எமது சிறார்களுக்கும் முறைப்படி கற்று தேறுவதற்கு
சந்தர்ப்பங்கள் இல்லாமலா உள்ளது. ஓவிய கலையில் ஆர்வம் உள்ள ஒவ்வொரு தம்பி தங்கையும் இந்த ஊழியத்துக்காக ஆயத்தப்பட வேண்டும் என்றால், நிச்சயம்
அதற்குரிய வழியை ஆண்டவர் திறந்து கொடுப்பார். தேடிச் சென்று முறைப்படி கற்று
கொண்டு ஊழியத்துக்கு ஆயத்தப்படல் முக்கியம்.
இரண்டாவது, அநேகருக்கு எழும் கேள்வி “இந்த ஓவியங்களை வைத்துக்கொண்டு எப்படி நற்செய்தி பகிர்வது?” என்பதாகும். நமது சமூகத்தில் அழகியல் செயற்பாடுகள் மூலமாக நற்செய்தி பகிர்வது என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த வெளிப்பாடுகளில் உள்ள அழகியல் அம்சமானது மற்றவர்களை இலகுவில் ஈர்ப்பதாக அமைந்துள்ளது. நிகழ்காலத்தில் இப்படியான அழகியல் வெளிப்பாடுகளை பகிர்வதற்கு அநேக சந்தப்பங்களும் இடங்களும் உள்ளன. சஞ்சிகைகள், வலைத்தளங்கள் விசேடமாக சமூக வலைத்தளங்கள் என்பன ஒரு பெரும் சந்தர்ப்பம் என்றே சொல்லவேண்டும். ஆனால் இவற்றுக்கும் மேலாக, மனித நடமாட்டங்கள் உள்ள எந்தவொரு வீதியோ சந்திகளோ இவற்றுக்கு விதிவிலக்கு அல்ல.
ஒரு நற்செய்தி ஓவியத்துடன் வீதியருகே நிற்கும் ஒரு நற்செய்தி ஓவியன்
என் கண்களில் எப்போதும் உள்ளான். ஜெபத்துடனும் அர்ப்பணிப்புடனும் வரைந்த அந்த அழகான
பேசும் ஓவியத்தால் கவரப்பட்டு வீதி வழியாக சென்ற ஒருவர் அதனருகே வந்து அந்த
ஓவியத்தை உற்று நோக்குவதையும் காண்கிறேன். “இந்த ஓவியத்தைப் பற்றி மேலும் அறிய ஆசைப்படுகிறேன்”
என்று அவர் வினவுவதும் என் காதுகளில் கேட்கின்றன. கர்த்தரின் அபிஷேகத்தின் வாலிப
ஓவியன் அவனுக்கு கர்த்தரின் அன்பை பற்றி சொல்வதை கண்டு மகிழ்கிறேன். இரட்சிக்கப்பட்ட
அந்த ஆத்துமாவை நினைத்து பரலோகத்தில் சந்தோஷம் உண்டாக்குவதையும் உணர்கிறேன்.
இது நம் வாலிபர் மத்தியில் வேண்டும்! நற்செய்தி ஓவியர்கள் நம் மத்தியிலும் வேண்டும்! அந்த நாளை காண்பது என் மனதின் அவா!
* இச்சிந்தனையானது 2018ம் ஆண்டில் "வாலிபன்" மாதாந்த சஞ்சிகையில் என்னால் பகிரப்பட்டது.
Comments
Post a Comment
Comments