Skip to main content

உண்மைத்துவமான ஆயத்தம் | BIBLE STUDY



by பிறேமன் அண்ணா

>>>

இயேசு சுவாமி கலிலேயாக் கடலோரமாய் நடந்து போனார். தம்மோடு சேர்ந்து பணிசெய்வதற்கு ஊழியர்களைத் தேடிச்சென்றார். உண்மையுள்ள சிலரைத் தெரிந்தெடுத்து, அவர்களைத் தம் சீடர்களாக்கி, இறைபணியின் உன்னதத்தை அவர்களுக்குக் காண்பித்து, அவர்களிடம் கடவுளின் இராட்சியத்தின் பணிகளை ஒப்படைக்க விரும்பினார். என்னவொரு உன்னதமான தெரிவு அது! இந்த உலகத்தில் சிலருக்கே அந்த வரப்பிரசாதம் கிடைத்தது. இயேசுவோடு இந்த உலகில் ஒன்றாக ஊழியம் செய்ய, அவரிடமிருந்து தேவ இராட்சியத்தின் இரகசியங்களைக் கேட்டறிந்துகொள்ள, தம் சொந்த கண்களால் அவர் செய்த அற்புதங்களைப் பார்த்து மெய் மறந்து நிற்க, அவர் மரித்து உயிர்த்தேழுந்தார் என்பதற்கு சாட்சியாய் வாழ, அந்த நற்செய்தியை உலகெங்கும் கொண்டுசெல்ல சிலருக்கே வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அவர்கள் எம்மோடு பகிர்ந்து கொண்ட அந்த நற்செய்தியால் நாமும் இன்று அந்த வரப்பிரசாதத்தின் பங்காளிகளாகின்றோம்.

அன்றைய தினம் இயேசு சுவாமி கலிலேயாக் கடலோரமாய் நடந்து போகையில், சிலரைத் தம் சீடர்களாக தெரிவு செய்தார். உங்களிடம் அவர்களின் பெயர்களைக் கேட்டால் இலகுவாக சொல்லிவிடுவீர்கள். ஆனால் இயேசு சுவாமியின் அத்தெரிவில் ஒரு இரகசியம் இருக்கிறது. இயேசு சுவாமி அன்றைய தினம் சீடர்களாக தெரிவு செய்த பேதுருவும் அவன் சகோதரன் அந்திரேயாவும் அச்சமயம் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று பார்த்தீர்களா? தங்கள் வேலைகளில் அக்கறையுடன் கவனமாக இருந்தார்கள். மீன் பிடிப்பவர்களாகிய அவர்கள் தங்கள் வலைகளைப் போட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டு, “என் பின்னே வாருங்கள் உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” என்று இயேசு அழைத்தார். இன்றைக்கு நீங்களும் நானும் இயேசு சுவாமியின் இந்த மகத்தான ஊழியத்தை செய்ய விரும்பும் காலத்தில் எம்மிடம் இப்போது அவர் கொடுத்திருக்கும் ஊழியத்தை உண்மையோடும் உத்தமத்தோடும் உற்சாகத்தோடும் செய்கிறோமா? எம்மிடமிருந்து எதிர்பாக்கப்படும் பொறுப்புகளைக் கவனமாக செய்கிறோமா? 

இன்று நீங்கள் உயர்ந்த பதவியிலே ஒரு ஆசிரியராக இருந்தால், உண்மையோடும் உற்சாகத்தோடும் சிறந்த கல்வியை மாணவருக்கு வளங்குவதே நீங்கள் செய்யும் ஊழியம். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருப்பீர்களாயின், உத்தமத்தொடு உங்கள் கடமைகளைச் செய்வதே நீங்கள் செய்யக்கூடிய சிறந்த ஊழியம். நீங்கள் சொந்த வியாபாரத்தை நடாத்தும் ஒரு வர்த்தகராய் இருந்தால், கவனத்தோடு அதைச் செய்வதே உங்கள் ஊழியமும் பொறுப்புமாகும். ஒரு வைத்தியராக இருந்தால், கடவுள் பயத்தோடு உங்கள் பொறுப்புகளைக் கவனமாகச் செய்வதே உங்கள் ஊழியம். இப்படியாக உங்களுக்கு கொடுத்திருக்கும் கொஞ்சமாகிய இப்பொறுப்புகளில் நீங்கள் உண்மையாயிருந்தால், நீங்கள் தேவனுடைய இராட்சியத்தின் ஊழியத்தின் பங்காளிகளாகுகின்றீர்கள். எப்படியாக மீன் பிடிக்கிறவர்களாகிய பேதுருவையும் அந்திரேயாவையும் அவர்கள் கடலிலே வலை போட்டுக்கொண்டிருக்கிறதைக் கண்டு அவர்களை அழைத்தாரோ, அவ்வாறே உங்கள் வாழ்கையிலும் சின்னச் சின்னப் பொறுப்புகளை நீங்கள் உத்தமத்துடனும் கரிசனையுடனும் செய்யும்போது கர்த்தர் அதைக் காண்கிறார்; கண்டு உங்களிடம் இன்னும் மேலான தனது ஊழியத்தை ஒப்படைக்கிறார்.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய இன்னுமொரு இரகசியம் உள்ளது. இந்த வேத பகுதியை நாம் தொடர்ந்து வாசிக்கும்போது வேறே இரண்டு சகோதரர்களாகிய யாக்கோபையும் யோவானையும் இயேசு தம் சீடர்களாக அழைப்பதைக் காண்கிறோம். இவர்களும் மீன் பிடிப்பவர்களே. இவர்கள் கடலில் வலை போட்டுக்கொண்டு இருக்கவில்லை, மாறாக வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அதில் என்ன விசேஷம் உள்ளது? வலைகளைப் பழுது பார்ப்பது ஆயத்தத்தின் அடையாளம். இவர்கள் தாங்கள் செய்யப்போகும் பொறுப்பை உணர்ந்து தங்களை ஆயத்தப்படுத்திகொண்டிருந்தவர்கள். மீன் பிடிப்பதற்கான வலைகளை பழுது பார்த்து ஆயத்தம் செய்துகொண்டு இருந்த இவர்களையும் இயேசு சுவாமி அழைத்தார். ஆச்சரியம் அல்லவா? 

தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செய்பவர்கள் மட்டுமல்ல, அந்த பொறுப்பை முன்னரே உணர்ந்து தங்களை அதற்கு ஆயத்தம் செய்பவர்களையும் கர்த்தர் கண்டு அவர்களையும் அழைக்கிறவராயிருக்கிறார். இன்றைக்கு நீங்கள் ஒரு படிக்கின்ற மாணவராக இருந்தால், உங்கள் கனவுகள் எல்லாம் ஒரு சிறந்த ஊழியத்தை இயேசு சுவாமிக்காக செய்ய வேண்டும் என்றால், இப்போது நீங்கள் செய்ய வேண்டியது கவனத்தோடு படிப்பதே. அதுவே ஒரு மாணவராக நீங்கள் இயேசு சுவாமியின் நாமம் உயர்த்தப்பட செய்யக் கூடிய சாட்சியுள்ள ஊழியம். உங்கள் உண்மைத்துவமான ஆயத்தத்ததைக் கண்டு கர்த்தர் உங்களுக்கு ஒரு மகத்தான ஊழியத்தைக் கொடுப்பார்.

மீன்பிடிக்கிறவர்களைக் கண்டு அவர்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக அழைத்தவரும், வலைகளைப் பழுது பார்த்து தங்களை ஊழியத்துக்கென ஆயத்தம் செய்தவர்களைக் கண்டவருமாகிய இயேசு சுவாமி இன்றும் உங்களுக்கு ஒரு உன்னதமான அழைப்பை வைத்திருக்கிறார். அவருடன் வாழும் வாழ்க்கையிலே அனுதினமும் வளரவும், அவர் தொனியைக் கேட்க ஆயத்தமாய் உள்ளவராயும், அவர் அழைக்கும்போது அனைத்தையும் அவருக்காக விட்டுக்கொடுத்து அவர் அழைப்பை ஏற்பதற்கும் தேவன்தாமே நம் ஒவ்வொருவரையும் வழி நடத்துவாராக.



வாசிப்பாளர் சின்னம் 
READERS BADGE 



Comments

Popular posts from this blog

எனக்கொத்தாசை வரும் பர்வதம் | Enakkoththasai Varum Parvatham | MUSIC NOTES & CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>

ஆவியின் கனிகள் @ QUILLING & NEEDLEWORK

by  ஷரோன் அக்கா >>>

தேவகுமாரா என்னை நினைச்சிடுங்க | Devakumara Enna Ninachchidunga | MUSIC NOTES AND CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>