Skip to main content

இயேசு சுவாமியைப் பற்றிய நமது ஆவல் | BIBLE STUDY

 

by பிறேமன் அண்ணா

>>>


இயேசு சுவாமியின் சீஷராய் வாழ விரும்பும் நமக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகளில் ஒன்று அவரைப்பற்றிய ஆவலாகும். இயேசு சுவாமியைப் பற்றி அறிவதிலும், அவர் நம்மை சீஷராய் அழைத்திருக்கும் நோக்கத்தையும் அறிவதிலும் உள்ள ஆவல். இயேசு சுவாமியின் பிறப்பும், வாழ்வும், சிலுவை மரணமும், அவருடைய உயிர்த்தெழுதலும் இந்த உலகுக்கு தரும் நல்ல செய்தி பற்றி அறியும் ஆவல். அவர் நமக்கு இந்த உலகத்தில் விட்டுச் சென்ற ஊழியத்தின் முக்கியத்துவத்தை அறியும் ஆவல். இவையே நம் ஆண்டவர் இயேசுவின் மேலே நமக்கு இருக்கும் ஆவலாய் இருக்கவேண்டும்.

அடர்ந்த காடு ஒன்றினுள் இருந்து மிகையாக வளர்ந்து இருக்கும் மரங்கள் எப்படி சூரிய ஒளியைத் தேடி நாடி வளர்கிறதோ, அது போலவே, இயேசு சுவாமியைப் பற்றிய ஆவலுடன் நாம் வளரவேண்டும். அனுதினமும் வேதத்தை வாசிப்பதன் மூலம், இயேசு சுவாமியின் வாழ்வையும் அவருடைய போதனைகள் ஒவ்வொன்றையும், அவருடைய வாழ்வின் ஒவ்வொரு தருணங்களும் எப்படியாய் இந்த உலகையும் அவரைச் சுற்றி இருந்தோரின் வாழ்வையும் மாற்றின என்றும் நாம் ஆவலுடன் அறிந்துகொள்ளவேண்டும். இந்த ஆவலின் பலனாக, நமக்கு ஆண்டவர் தந்திருக்கும் ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய தேவையான ஆண்டவரின் வழிநடத்துதல் நமக்குக் கிடைக்கும். 

இயேசு சுவாமியின் வாழ்க்கையை விவரமாக எடுத்துச் சொல்லும் சுவிசேஷ புத்தகங்களில் ஒன்றான லூக்கா சுவிசேஷத்திலே மார்த்தாள் மரியாளின் வீட்டிலே இயேசு தங்கியிருந்தபோது நடந்ததொரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது.  

இயேசு சுவாமி ஓரிடத்தலிருந்து இன்னுமொரு ஊரிற்கு பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா (அக்கறையில்லையா)? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார் (லூக்கா 10: 38-42).

இந்த சம்பவத்திலிருந்து ஒரு ஆழமான சீஷத்துவப் பண்பினை நாம் அறியக்கூடியதாக உள்ளது. மார்த்தாளும் மரியாளும் ஒரே வீட்டிலே வளர்ந்த, வாழ்ந்துகொண்டிருந்த சகோதரிகளாய் இருந்தாலும், மரியாளுக்கு இயேசு சுவாமியைப் பற்றிய ஆவல் அதிகமாய் இருந்தது. மார்த்தாள் பற்பல வீட்டு வேலைகளைக் கவனித்து செய்து வந்தாலும், மரியாள் இயேசுவைப்பற்றியும் அவர் போதனைகளைப் பற்றியுமே ஆவலாய் இருந்தாள். மரியாள் எந்த அளவுக்கு இயேசு சுவாமியைப் பேசக்கேட்பதிலே ஆவலாய் இருந்தாள் என்றால், மார்த்தாள் இயேசு சுவாமியிடம் வந்து முறைப்பாடு செய்யும் அளவுக்கு ஆவலாய் இருந்தாள். இயேசு சுவாமியின் பாதத்தண்டையிலே அமர்ந்திருந்து அவர் பேசுவதைக் கேட்பதிலேயே அவளுடைய முழு எண்ணமும் சிந்தனையும் இருந்தது. 

மரியாளின் ஆவல் வீணாய்ப்போகவில்லை. இயேசு சுவாமி மரியாளிடம் இருந்த அந்த ஆவலை "தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்" என்று சொல்கிறார். இயேசு சுவாமி தங்களது வீட்டிலே தங்கியிருக்கிறார் என்பது மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் பிரமிப்பை நிச்சயம் உண்டாக்கியிருக்கும். நன்றாக உபசரிக்கவேண்டும், நேரத்துக்கு உணவு சமைத்துக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் இருவருடைய மனதிலும் இருந்திருக்கும். ஆனாலும், இவைகளைத் தாண்டியும், இயேசு சுவாமியின் எண்ணங்களை, அவருடைய அழைப்பை , அவருடைய போதனைகளை  மென்மேலும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலுடன் மரியாள் அவருடைய பாதத்தண்டையிலேயே அமர்ந்திருந்தாள். மார்த்தாளோ மற்றைய வீட்டுக் காரியங்களைக் கவனித்துக்கொண்டு இருந்தாள். 

இதை வாசிக்கும்போது நமக்கும் பெரிதானதொரு கேள்வி மனதிலே எழக்கூடும். "அப்படியானால், வீட்டுக்காரியங்களை மற்றும் நாம் அன்றாடம் செய்யவேண்டியவற்றைக் கவனிக்கத் தேவையில்லையா?" என்ற எண்ணம் தோன்றக்கூடும். ஆனாலும் நாம் இங்கு கவனிக்கும் சந்தர்ப்பம் இந்தக் கேள்விக்கு மிகவும் ஆழமானதொரு பதிலைக் கொடுக்கிறது. வீட்டிலே அநேக வேலைகள் செய்யவேண்டியிருந்தும் மரியாள் அன்றைய நாளுக்கு அன்றைய சந்தர்ப்பத்துக்கு இயேசு சுவாமியின் பிரசன்னத்தைத் தெரிந்தெடுத்தாள். அவரைக்குறித்து மரியாளுக்கு இருந்த ஆவல், அன்றைய நாளின் வேலைகள் தேவைகள் அனைத்தையும்விட இயேசு சுவாமியின் வார்த்தைகளைக் கேட்டு அவரைப் புரிந்துகொள்வதே அவளுக்கு முக்கியமானதாய்ப் தென்பட்டது. அன்றைய நாளின் உணவு, வீட்டுத் தேவைகள், தனது தனிப்பட்ட காரியங்கள் அனைத்தையும் விட மரியாள் "தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்." நிரந்தரமில்லாத இந்த தேவைகளின் மத்தியில் நிரந்தரமான, தன்னை விட்டு ஒருபோதும் எடுபடாத ஆண்டவரின் வார்த்தைகளே அவளுக்கு ஆவலை ஏற்படுத்தியது. 

இன்றைய நாளிலும், நாம் இயேசு சுவாமியின் உண்மையுள்ள சீஷராய் வாழ்வதற்கு அவரைப்பற்றிய ஆவலும், அந்த ஆவலின்மூலம் நாம் செய்யும் தெரிவுகளும் மிகவும் முக்கியமானவை. நம்மைச் சுற்றி அனுதினமும் அநேக தேவைகள், நாம் செய்துமுடிக்கவேண்டிய கடைமைகள், படித்து சித்தியடையவேண்டிய பரீட்சைகள் என்று அநேகம் இருக்கலாம். ஆனாலும், இயேசு சுவாமியைப் பற்றிய ஆவலும், அவரில் நாம் வளரவேண்டும் என்ற என்ற எண்ணமும் ஒருபோதும் குறைந்துவிடக்கூடாது. எம்மைச் சுற்றி இருக்கும் எந்தவொரு பொருளோ, வேலையோ, நிலைமையோ, உறவோ இயேசு சுவாமியோடு நாம் செலவிடும் நேரத்தையும் அவரைப்பற்றி எமக்கு இருக்கும் ஆவலையோ குறைக்க இடமளிக்கக் கூடாது. அதுவே நம் ஆண்டவர் இயேசு சுவாமி நம்மிடம் எதிர்பார்க்கும் 'நம்மை விட்டெடுபடாத நல்ல பங்கு.'

ஆகையால், கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பான தங்கை தம்பிமாரே, நமது வாழ்வின் அன்றாட ஓட்டங்கள், தெரிவுகள், வேலைகள், முயட்சிகளின் மத்தியில் இயேசு சுவாமியைப் பற்றிய நமது ஆவலும், அவருடைய விருப்பங்களை எண்ணங்களை புரிதலும், அவரோடு செலவிடும் நேரமும் நமது முதன்மையான தேவைகளாய் இருக்கும்போது, நாம் அவருடைய சீஷராய் வாழ்வது நமக்கு ஏற்றதாய் இருக்கும். 





Comments

Popular posts from this blog

எனக்கொத்தாசை வரும் பர்வதம் | Enakkoththasai Varum Parvatham | MUSIC NOTES & CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>

ஆவியின் கனிகள் @ QUILLING & NEEDLEWORK

by  ஷரோன் அக்கா >>>

தேவகுமாரா என்னை நினைச்சிடுங்க | Devakumara Enna Ninachchidunga | MUSIC NOTES AND CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>