இந்தியாவுக்கு வந்த ஒரு உன்னத சீடன் - அப்போஸ்தலன் தோமா - பாகம் 02 | Thomas the Apostle | FOOTPRINTS OF MISSIONARIES
by டேவிட் அண்ணா
>>>
‘ஞானவான்கள் ஆகாய மண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.’
(தானியேல் 12:3)
அன்பான தம்பி, தங்கைமாரே,
நம் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். கடந்த வாரத்தில் நாம் இயேசுவின் சீடரும் கிறிஸ்தவ மிஷனரியுமான தோமா ஐயாவின் வாழ்விலிருந்து பல படிப்பினைகளை கற்றோமல்லவா? ஆம், அனைவருக்கும் அது பிரயோஜனமாய் இருந்திருக்கும் என நான் விசுவாசிக்கிறேன். இக்கட்டுரை வாயிலாக நாம் தோமா ஐயாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி சென்று அவரது மிஷனரி ஊழியம் மற்றும் அவரது இறுதிக்கால சம்பவங்கள் குறித்து ஆராயவுள்ளோம். என்ன நீங்கள் ஆயத்தமா? வாருங்கள் ஆராய்வோம்.
சந்தேகத் தோமாவின் சந்தேகத்தைப் போக்கி, சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை சுமந்துசெல்லும் உன்னத சீடராக அவரை, நம் இயேசப்பா மாற்றினார். இதனால் மாறிய மனதுடன் மங்கல வாழ்விற்குள் புது நம்பிக்கையுடன் அடியெடுத்து வைத்து, தன் சுவிசேஷப் பயணத்தை இஸ்ரவேலிலிருந்து தென்னிந்தியா நோக்கி தொடர்ந்தார் நம்ம தோமா ஐயா.
இறுதியில் கி.பி. 52ம் ஆண்டு இந்தியாவை வந்தடைந்து, கேரளாவில் முதன்முதலில் கால் பதித்தார். அங்கு இயேசுவின் அன்பையும், அவர் உயிர்த்தெழுதலின் செய்தியையும் அனைவருக்கும் பிரசங்கித்தார். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக கொடுங்கழூர் (Kodungalore), பாலையூர்(Palayur), பரவூர்(Paravur), கொக்கமங்கலம்(Kokkamankalam), நிரானாம்(Niranam), நிலக்கல்(Nilackal), கொயிலாகு(Quilon) ஆகிய ஏழு இடங்களில் ஆண்டவருடைய ஊழியத்தை உண்மையாகச் செய்தார்.
அதன் பிறகு மலபார் பகுதியிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள மைலாப்பூருக்கு(Mylapore) பயணித்து அங்குள்ள மக்களுக்கு இயேசுவின் அன்பையும் அவர் உயிர்த்தெழுந்த செய்தியையும் பிரசங்கித்தார். அத்தோடு அனேகருக்கு அன்பையும் பரிவையும் தன் செயலில் காட்டினார். இதனால் அனேக மக்கள் இயேசுவின் போதனைகளை விசுவாசித்து, தம் பாவங்களை விட்டு மனந்திரும்பி, ஆண்டவர் அருளும் சமாதானத்தை விடுதலையை தம் வாழ்வில் பெற்றனர். இதனால் வேற்று மத குருக்கள் அவர் மீது பொறாமை கொண்டனர். அவர் அறிவித்த இயேசுவையும் அவர்களுக்கு பிடிக்கவில்லை அத்துடன் அவரையும் கூட அவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் தோமாவை கொலைசெய்ய அவர்கள் சதித்திட்டம் போட்டார்கள். இதனால் தோமா ஐயா அவர்களுக்கு பயந்து ‘சின்னமலை’ (Little Mount) என்கிற இடத்திலுள்ள குகைகளில் சிலகாலம் ஒளிந்துவாழ்ந்தார். அங்கேயும் அவரை பின்தொடர்ந்தார்கள். பின்னர் இப்பொழுது ‘பறங்கி மலை’ என்றழைக்கப்படும் இடத்தில் தஞ்சம் புகுந்தார். அவரை பின்தொடர்ந்த மதகுருக்கள் தோமா தேவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்போது அவர்களின் வாளினால் அவரைக் குத்திக் கொலை செய்தார்கள். தோமாவும் மற்றைய சீடர்களைப் போலவே கிறிஸ்துவுக்காய் இரத்தசாட்சியாய் மரித்தார். இவ்வாறு, கி.பி. 72ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் திகதி அன்று தோமா ஐயா இவ்வுலக வாழ்வில் தன் ஓட்டத்தை முடித்துக் கொண்டார்.
சற்று ஒருகணம் யோசித்துப் பாருங்கள் நண்பர்களே. மொழி தெரியாத நாட்டில், வானிலை முற்றிலும் வேறுபட்ட ஊரில் உணவுக்காக கஷ்டப்பட்டு, உடைக்காக கஷ்டப்பட்டு, இடத்திற்காக கஷ்டப்பட்டு, எதிரிகளால் விரட்டப்பட்டு உயிர்போகிற நேரம் வரைக்கும் இயேசுவை பகிர்ந்து கொண்டே இருந்தார் நம்ம தோமா ஐயா!
நம்முடைய வாழ்க்கையிலும் கஷ்டம் வரும்போது நாம் இயேசுவை பகிர்ந்து கொள்ளுகிறோமா? அல்லது ‘என்னடா கடவுள் இவரெண்டு’ நம்மை படைத்த தேவனையே குறைகூறி, பழித்து பேசுகிறோமா?
இயேசுகிறிஸ்து உயிர்தெழவில்லை என்றால் தோமா எதற்கு இந்தியா வரவேண்டும்? இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தது பொய் என்றால் தோமா எதற்கு தன் உயிரையே பரிசாகக் கொடுக்க வேண்டும்? தோமா தன் உயிரையே தியாகம் செய்து, மெய்யாகவே இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தாரென்று நிரூபித்து விட்டார்.
இந்தியாவில் இன்று 2.78 கோடி கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் மட்டும் 1 கோடி கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இதற்கு காரணம் இந்தியாவிற்கு இயேசுவை அறிமுகப்படுத்திய உன்னத சீடன் தோமா என்று சொன்னால் மிகையாகாது. மேலும், ‘கிறிஸ்துவுக்காக மரிக்கும் ஒவ்வொரு இரத்தசாட்சியினதும் இரத்தம், திருச்சபைகளின் வித்து’ என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.
தோமாவுடைய பெயர் இவ்வுலகத்தில் எத்தனையோ கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டிருந்தாலும், அது பெரிதல்ல. அவரது பெயர் பரலோகத்திலுள்ள அஸ்திபாரமுள்ள கல்லில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதுவே பெரிய காரியம். தோமாவைப்போல இயேசுவுக்காய் வாழ்கிறவர்களின் பெயர்கள் நிச்சயமாய் பரலோகத்திலுள்ள ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் என்று வேதம் சொல்லுகிறது.
எனவே, நாம் நம்முடைய வாழ்க்கையில், வார்த்தையில், குணத்தில் மற்றவர்களுக்கு தோமாவைப்போல இயேசுவை அறிமுகப்படுத்துகிறோமா? சற்று எம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்; நண்பர்களே.
மற்றவர்கள் பார்க்கக்கூடிய ஒரே இயேசு கிறிஸ்து நாம் தான் – அவர் அன்பைக் காட்டுவோம்! மற்றவர்கள் வாசிக்கக்கூடிய ஒரே வேதப்புத்தகம் நாம் தான் - அவர் நேசம் காட்டுவோம்! தேவன் தாமே உங்களனைவரோடும் கூட இருந்து, உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.
வாசிக்க வேண்டிய வேதப்பகுதி : மத்தேயு 28:18-20, மாற்கு 8:34-38, மாற்கு 10:28-30
Comments
Post a Comment
Comments