Skip to main content

விசுவாச அப்போஸ்தலன் - ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் (1859-1947)



by டேவிட் அண்ணா

>>>






“GREAT FAITH IS THE PRODUCT OF GREAT FIGHTS”

-SMITH WIGGLESWORTH-


நம் அருள் நாதர் இயேசுகிறிஸ்து, தாம் உலகத்திலிருந்த நாட்களிலே, மரித்தோரை உயிரோடெழுப்பினார் அத்துடன் தானும் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில்; உயிரோடெழுந்தார். பழைய ஏற்பாட்டுக் காலத்திலே, எலியாவும், எலிசாவும் மரித்துப்போன சிறுவர்களை உயிரோடெழுப்பினார்கள். புதிய ஏற்பாட்டிலே ஆதி அப்போஸ்தலர்களான பேதுருவும், பவுலும் மரித்தோரை உயிரோடெழுப்பினார்கள் என வேதாகமம் கூறுகிறது.

மரித்தோர் எழுப்பப்படுவதெல்லாம் வேதாகம காலத்தோடு முடிந்துவிட்டதா? இக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் எழுந்தவர்தான் “விசுவாச அப்போஸ்தலன்” என்றழைக்கப்படும் ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த்.

இவர் கி.பி.1859-ஆம் வருஷம் ஜூன் மாதம் 8ம் திகதி, இங்கிலாந்து தேசத்திலுள்ள மென்ஸ்டன் என்ற சிறிய கிராமத்திலே ஜோன் விக்கிள்ஸ்வொர்த் - மார்த்தா தம்பதியினருக்கு பிறந்தார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக புகைந்து கொண்டிருந்த திருச்சபையை அனல் மூட்டி, அக்கினியாய் பற்றி எரியவைக்கப் போகிறவன் அந்தக் குழந்தை என்று அந்த எளிமையான பெற்றோருக்கு அப்போது தெரியாது. குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக தனது ஆறு வயதிலேயே தன் தகப்பனாரோடு சேர்ந்து வயலிலே ‘டர்னிப்’ கிழங்கு பிடுங்கும் வேலை செய்வதற்கு ஆரம்பித்துவிட்டார். விடியற்காலை முதல் இரவு வரை வயலிலே வேலை செய்வதால், அவரத பிஞ்சுக் கரங்கள் புண்ணாகி, வீங்கிவிடும். ஆனாலும், இந்தக் கடின வேலை, அவனது தந்தையைப் போலவே கடினமாவும், நெடுநேரமும் பொறுமையாய் உழைக்கும் நற்பண்பை அவனுக்குள் விதைத்தது. இதுவே பின்னாட்களில் தேவன் தமது ஊழியத்தை அவரிடம் ஒப்படைத்தபோது, அதைச் சீரும் சிறப்புமாக செய்;ய வைத்தது என ஸ்மித் அடிக்கடி கூறுவார். மேலும் யார்க்ஷயர் கிழங்குத், தோட்டத்திலிருந்து, உலகளாவிய ஊழியத்திற்கு அவர் உயர்த்தப்பட் காலத்திலே, தேவன் தனது கரத்தில் ஒப்புவித்த கடமைகளுக்குத் தான் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர், பொறுப்பானவர் என்று உணர்ந்த, நம்பத்தகுந்த கடின உழைப்பாளியாக மாற்றியது.

இயேசுவின் ஆரம்ப வாழ்க்கையைப் போலவே, இவரது ஆரம்ப வாழ்க்கையும் மிக எளிமையானதுதான். இயேசு தச்சனுடைய குமாரன் என்னப்பட்டார். தமது முப்பதாம் வயது வரை தம் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து, அவர்களுக்கு உதவியாகவிருக்க தச்சனாக பணிபுரிந்தார். அக்காலத்திய தச்சு வேலை மிகக்கடினமானதுதான். அவ்வாறே கடினமாக உழைக்கும் ஒரு தொழிலாளியின் மகனாகப் பிறந்தார் விக்கிள்ஸ்வொர்த். தனது ஜீவனோபாயத் தொழிலாக பின்னர் தண்ணீர்க்குழாய் திருத்தும் வேலையை (Plumber) செய்ய ஆரம்பித்தார்.

தனது எட்டாவது வயதிலே இரட்சிப்பின் நேரடி அனுபவமும், இரட்சிப்பின் நிச்சயமும் இவருக்கு கிடைத்தது. “விசுவாசமுள்ளவனாயிரு” என்கிற வார்த்தை சிறுவயதிலிந்தே இவரது உள்ளத்தில் ஆணித்தரமாய் பதிந்திருந்தது. மேலும், இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றவுடனேயே, இந்த சின்ன ஸ்மித் ஒரு ஆத்தும ஆதாயப் பணியாளனாக மாறிவிட்டான். அவனது முதல் அறுவடையே அவனது சொந்தத் தாயார்தான். காலங்கள் புரண்டோடின. ஸ்மித் வளர்ந்து வாலிப வயதை அடைந்தான். கர்த்தருக்காக வைராக்கிய வாஞ்சையாக ஊழியம் செய்து கொண்டு வந்தார். ஜெபத்திலும் உபவாசத்திலும் உறுதியாய் தரித்திருந்தார். 

தனது இருபத்து மூன்றாவது வயதில் கர்த்தருக்குள் நேர்மையாக வாழ்ந்து குணசாலியான ஸ்திரீயாக திகழ்ந்த ‘மேரி ஜேன் ஃபெதர்ஸ்டோன்’ (பாலி) என்ற பெயரையுடைய பெண்ணை 1882 இல் திருமணம் செய்தார். குழந்தை செல்வங்களைப் பெற்றெடுத்தனர். இருவருமாக இணைந்து கர்த்தருடைய ஊழியத்தையும் சிறப்பாக செய்தனர். சரிவர எழுத, வாசிக்கத் தெரியாதிருந்த ஸ்மித்திற்கு நல்லாசானாகவிருந்து அனைத்தையும் அவரது அன்பு மனைவியே கற்றுக்கொடுத்தார். அதன் பின்னர் ‘வேதாகமம்’ என்கிற ஒரே புத்தகத்திற்கு அடிமை’ என அழைக்கப்படுமளவு அதை கனப்படுத்தி இரவு பகலாக தியானிக்க ஆரம்பித்தார். வேதாகமத்தையும் ஸ்மித்தையும் அதன் பின்னர் எவராலும் பிரிக்கமுடியவில்லை. எப்போதும், எங்குசென்றாலும் தன்னுடன் ஒரு சிறிய வேதாகத்தை எடுத்துச் செல்வதை பழக்கப்படுத்திக்கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் பகுதி நேரமாக ஊழியஞ்செய்துகொண்டு வந்த ஸ்மித், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று, தன் அழைப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொண்ட பின்பு முழு நேர ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணித்ததுடன் குழாய் செப்பனிடும் தன் தொழிலைக் கைவிட்டு இயேசுவை விசுவாசத்தோடே பின்பற்ற ஆரம்பித்தார். தன்னை நம்பி வந்த ஸ்மித்தை தேவன் தரித்திரமடையவிடவில்லை. நிறைவாக ஆசீர்வதித்தார். கல்வியில் சிறந்த நிபுணர்களும், தலைவர்களும் இவரது பிரசங்கத்தை கேட்டு ஆச்சரியப்பட்டு அதன்;பால் ஈர்க்கப்பட்டனர். (அப்.4:13, 1கொரி.1:27-28) 

காலங்கள் புரண்டோடின. கி.பி. 1913ம் ஆண்டு அவரது பாசமிகு துணைவியான ‘பாலி’ மரணத்தைத் தழுவினாள். இதனால் சிறகுடைந்த பறவை போலானார் ஸ்மித். எனினும், அவரை தைரியப்படுத்திய தேவன், இரட்டிப்பான வரங்களை கொடுத்து, தம் ஊழியத்தில் முன்னையதை விட வல்லமையாக  பயன்படுத்த ஆரம்பித்தார். உலகமெங்கிலுமிருந்து ஊழிய அழைப்புக்கள் வர ஆரம்பித்தன. கர்த்தர் ஸ்மித்தோடு இருந்த படியால், அவர் சென்ற எல்லாவிடத்திலும் எழுப்புதல் உண்டாயின. அனேக தேசங்கள் அசைக்கப்பட்டன. நம்முடைய இலங்கை தேசத்திற்கும் கூட ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் வருகைதந்த போது, கொழும்பு நகரம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் கொளுந்துவிட்டு எரிந்தது. இந்த ‘அபிஷேகிக்கப்பட்ட மனிதனைக்’ கொண்டு தேவன் தம்முடைய வார்த்தைகளை உறுதிப்படுத்தினார். ஆம், ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டன, சரீரங்கள் சுகம் பெற்றன, ஜீவியங்கள் மாறுதலடைந்தன, இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் திருச்சபையில் அனுதினமும் சேர்த்துவந்தார்.  நம் தேசமும் கிறிஸ்துவை அறிய இவர் காலாயமைந்திருப்பதையிட்டு தேவனுக்கு நன்றி கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஆத்தும ஆதாயமே ஸ்மித்தின் ஊழியத்தின் முழுமுதல் நோக்கமாயிருந்தபோதிலும், அதை அடைவதற்கு வழியாக அவர் தெய்வீக சுகத்தைப் பயன்படுத்தியதால், மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். கிறிஸ்துவுக்குப்பின் அப்போஸ்தலர்கள் மாத்திரமே செய்த மரித்தோரை உயிர்த்தெழுப்பும் அற்புதங்கள் அதில் மக்கிய இடம் பெறுகின்றன. சரித்திரம் கண்ட இந்த உண்மைகளில் சிலவற்றை நாமும் காண்போம்.

அற்புத சாட்சி – மரணமே உன் கூர் எங்கே?


ஒருமுறை மரணத் தறுவாயிலிருந்த ஒரு பெண்ணுக்காக ஜெபிக்கும்படி ஸ்மித்தை அழைத்திருந்தார்கள். நேரமோ இரவு 10 மணி. இவர் போவதற்கு முன்பதாகவே அங்கு வந்திருந்த வைத்தியர் எல்லாம் முடிந்து விட்டது என்று சொல்லிவிட்டுப் போயிருந்தார். அங்கு சென்றவுடன் அந்தக் குடும்பம் இருந்த சூழ்நிலையை உணர்ந்த விக்கிள்ஸ்வொர்த், அந்தப் பெண்ணின் தாய் உட்பட குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் நோக்கி, “எல்லாரும் தூங்கச் செல்லுங்கள்” என்றார். 

ஆனால் ஒருவருக்கும் மனமில்லை. எனவே, தன் மேல் கோட்டை அணிந்தவாறே அவர் புறப்பட தயாரானார். பின்னர் அவர்கள் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு உறங்கச் சென்றார்கள். அவநம்பிக்கையும் பச்சாதாபமும் சூழ்ந்திருக்கும் இடத்தில் தேவன் எதையுமே செய்யமாட்டாரென்று அவருக்குக்குத் தெரியும், அவர் அங்கேயே தங்கினார்.

அப்போதுதான் மரணத்துக்கும் பிசாசுக்கும் எதிராக நேருக்கு நேர், முகத்திற்கு முகம் ஓர் யுத்தம் தொடங்கியது. எத்தனை பயங்கரமான போர் அது! இரவு 11 மணி முதல் 3:30 மணி வரை அவரது ஜெப யுத்தம் தொடர்ந்தது. ஆனால் அவர் கண் முன்பாகவே அவளது உயிர் பிரிந்தது.

“நீ தோற்று விட்டாய். உன் கரங்களில் இருக்கும்போதே அப்பெண் மரித்துப்போனான்.” – பிசாசு சொன்னது

“இருக்காது. இதற்காக தேவன் என்னை இங்கே அனுப்பவில்லை.” –விக்கிள்ஸ்வொர்த்

போராட்டத்தின் இறுதிக்கட்டம் வந்துவிட்டதை இவர் உணர்ந்தார். இது தேவன் பொறுப்பெடுக்க வேண்டிய நேரம் என்பதை அறிந்தார். சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்த தேவன் இப்பொழுது தன்னோடு இருக்கிறார் என்ற உணர்வு அவருக்குள் பிறந்தது.

“நடக்காது” என்றான் பிசாசு

“நடக்கும்” என்றார் விக்கிள்ஸ்வொர்த்

இதைச் சொன்னவாறே ஜன்னலை நோக்கினார் ஸ்மித். இதே வினாடி அங்கே இயேசுவின் முகம் தோன்றியது. அவருடைய முகத்திலிருந்து ஒரு கோடி ஒளிக்கிரணங்கள் புறப்பட்டு வந்தன. அப்போதுதான் மரித்துப் போயிருந்த அந்தப் பெண்ணை நோக்கி அவர் தம் முகத்தைத் திருப்பினார். அவர் பார்வை பட்டதும் அந்தப் பெண்ணின் முகத்திலிருந்த சவக்களை மாறியது. முகத்தில் ஜீவன் பிறந்தது. அவள் புரண்டு படுத்தாள். அப்படியே உறங்கிப்போனாள்., அப்பப்பா, எத்தனை மகிமையான நேரம் அது!

அதிகாலையில் அப்பெண் எழுந்தாள். அழகாக உடுத்திக் கொண்டாள். பியானோவை நோக்கிச் சென்றாள். அழகாக இசைக்கத்தொடங்கினாள். ஒரு அற்புதமான பாடலைப் பாடினாள். அவளது தாயும், அனைத்து குடும்பத்தினரும் பியானோவைச் சுற்றிக் கூடினார்கள். மரித்தவளை தேவனிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். 

ஸ்மித் அப்போஸ்தலரின் சுகமளிக்கும் ஊழியத்தின் மேன்மைக்கும் வெற்றிக்கும் காரணங்களாக, அவரது பரிசுத்தமான வாழ்வு, தேவனோடு அவர் கொண்டிருந்த ஐக்கியம், அவரது தளராத விசுவாசம், மனதுருக்கம், எளிமை, நீதியின் மேல் அவர் கொண்ட பசிதாகம், வேதத்தை கனப்படுத்தி நேசித்த விதம், ஆத்தும ஆதாயத்தின் மேல் அவர் கொண்டிருந்த வாஞ்சை எனப் பலவற்றைக் குறிப்பிடலாம்.

இவற்றுள், லாசருவை, நாயீன் ஊர் விதவையின் மகனை, யவீருவின் மகளை இயேசு உயிரோடெழுப்பிய போது அவருக்கிருந்தது மனதுருக்கம். இயேசு கிறிஸ்துவுக்குள் இருந்த அதே மனதுருக்கத்தை ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த்தும்; பெற்றிருந்தது தான் அவரும் மரித்தோரை உயிரோடெழுப்பக் பிரதான காரணம். இறுதியாக, 1947ம் வருஷம், மார்ச் மாதம் 12ம் திகதி அன்று பரலோக அழைப்பை பெற்று, இவ்வுலக ஓட்டத்தை வெற்றியாக ஓடி முடித்தார்.

நம் கர்த்தர் இன்றும் தம் ஊழியத்தைச் செய்யும்படி, விழுந்து போன மனுக்குலத்தை குணமாக்கி, சொஸ்தபடுத்தி, சீர்ப்படுத்தி அதைத் தம்மோடே ஒப்புரவாக்கிக் கொள்ளும்படி அப்படிப்பட்ட தளராத விசுவாசமும், மனதுருக்கமும் நிறைந்தவர்களைத் தேடுகிறார். நண்பர்களே, சற்று சிந்தித்துப்பாருங்கள்…இவ்வுலகில் எமக்கு கொடுக்கப்பட்டுள்ளது ஒரே ஒரு வாழ்க்கை. எனவே அதை வீணாக்காமல், கிறிஸ்து இயேசுவின் கையில் ஒப்படைத்து, அவர் பணி செய்;ய எம்மை அர்ப்பணிப்போமாக!

இயேசு கூறினார்,

“மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் என் பிதாவினிடத்தில் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், அவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.”

(யோவான் 14:12)


வேதவாசிப்புப் பகுதி: எபிரேயர் 11–12:1-3, மாற்கு 16: 17-18, யோவான் 11:14-45









Comments

Popular posts from this blog

எனக்கொத்தாசை வரும் பர்வதம் | Enakkoththasai Varum Parvatham | MUSIC NOTES & CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>

ஆவியின் கனிகள் @ QUILLING & NEEDLEWORK

by  ஷரோன் அக்கா >>>

தேவகுமாரா என்னை நினைச்சிடுங்க | Devakumara Enna Ninachchidunga | MUSIC NOTES AND CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>