முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
(மத்தேயு 21: 09)
குருத்தோலை ஞாயிறு நம் ஒவ்வொருவருக்கும் சிறு வயது தொடக்கம் நன்கே அறிந்த ஒரு நாளாயிருக்கிறது. இந்த நாளிலே இயேசு சுவாமி எருசலேமுக்குள் பவனியாக ஒரு கழுதைக்குட்டியின்மேல் அமர்ந்திருந்து வந்ததும், அப்பட்டணத்தின் மக்களால் "தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா" என்று வாழ்த்தி வரவேற்கப்பட்டதும் நமக்கு நன்கு அறிந்தவையாகும்.
குருத்தோலைகளும் பவனியும் ஓசன்னா என்ற சத்தமும் நமக்கு மிகவும் பழக்கமானதாகவும், நன்கு அறிந்ததாகவும் இருந்தாலும் இந்த ஓசன்னா என்பது நமது விசுவாச வாழ்வில் ஒரு முக்கியமானதாக இருக்கிறது.
ஓசன்னா என்ற வார்த்தை, நவீன உலகில், ஒருவரை மகிமைப்படுத்தவோ அல்லது ஒரு நபர் மீது நமக்கு இருக்கும் மிகையான பாராட்டை தெரிவிக்கும் ஒரு வார்த்தையாகவோ அமைந்தாலும், இதன் ஆரம்பம் எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளிலே உள்ளது என்பதை நாம் மறக்கமுடியாது. இந்த வார்த்தையைப்பற்றி நாம் மேலும் அறியும்போது, இது "எங்களை இரட்சியும்.. எங்களைக் காப்பாற்றும்..." என்று அர்த்தம் கொடுக்கிற ஒரு வார்த்தையாக இருந்ததை நாம் அறியலாம். எருசலேமின் மக்கள் இயேசு சுவாமியை ஆர்ப்பரித்து வரவேற்றபோது, "தாவீதின் குமாரனுக்கு வாழ்த்துக்கள், துதிகள், மகிமை, எமது ஆராதனை" என்று பொருள்படும்படியாக "ஓசன்னா" என்று சொன்னதுமன்றி, "இவரே எங்களை மீட்டெடுக்க, காப்பாற்ற, வாழ்வுதர" வரும் மேசியா என்பதையும் உணர்த்தினார்கள்.
இன்றும் நமது வாழ்விலே ஓசன்னா என்ற வார்த்தை இரண்டு முக்கியமான விசுவாச உண்மைகளை உணர்த்துகிறது. ஒன்று அது நம் ஆண்டவர் துதிக்கப்படத்தக்கவர், ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர் என்ற உண்மையை ஒரு பக்கம் உணர்த்தும்போது, மறு பக்கம், இந்த ஆண்டவரே நம் வாழ்வில் தொடர்ந்தும் நம்மைக் காப்பாற்றி, வழிநடத்தி, நித்தியத்தில் சேர்ப்பவர் என்பதையும் காட்டுகிறது. ஒரு கிறிஸ்தவரின் வாழ்வில் எவ்வாறு துதியும் ஜெபமும் இன்றியமையாததோ, அதுவே இந்த வார்த்தையின் இரண்டு பக்கங்களும் ஆகின்றன.
ஆகையால், ஓசன்னா என்று நாம் உச்சரிக்கும், பாடும், வாசிக்கும் ஒவ்வொரு முறையும் இந்த வார்த்தை நம்முடைய கிறிஸ்தவ விசுவாச வாழ்வின் இரண்டு பெரிய அங்கங்களாகிய துதியையும் ஜெபத்தையும் குறித்து நிற்பதை ஞாபகப்படுத்திக்கொள்வோமாக.
Comments
Post a Comment
Comments