Skip to main content

பர்மாவின் அப்போஸ்தலன் அடோனிராம் ஜட்சன் | ADONIRAM JUDSON | FOOTPRINTS OF MISSIONARIES


by டேவிட் அண்ணா

>>>

“There is no success without sacrifice.

If you succeed without sacrifice, it is because someone has suffered before you;

If you sacrifice without success it is because someone will succeed after.”

-          ADONIRAM JUDSON   -

 



வணக்கம் நண்பர்களே,

 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் மனதில் சமாதானமும் உண்டாவதாக. என்ன, எல்லாரும் நல்லா இருக்கின்றீர்களா? கடந்த வாரம் இந்தியா தேசத்திற்கு கிறிஸ்துவை அறிவித்த உன்னத சீடரான தோமாவைக் குறித்து கற்றோம். இன்று, இந்தியாவிற்கு அருகாமையில் இருக்கும் மியன்மார்(பர்மா) தேசத்திற்கு கிறிஸ்துவை அறிமுகம் செய்த கிறிஸ்தவ மிஷனரியான அடோனிராம் ஜட்சன் பற்றி கற்கவுள்ளோம். நீங்கள் கற்க ஆயத்தமா? வாருங்கள், அம் மிஷனரியின் அடிச்சுவடுகளை பின்பற்றிப் போவோம்.


‘பொருள், புகழ், பட்டம், பதவி என்பவை வேண்டும் அத்துடன் நித்திய வாழ்வின் பேரின்ப மோட்சமும் வேண்டும், ஆனால் இயேசு கிறிஸ்து வேண்டாம்’ இதுதான் தற்காலத்தில் பெரும்பாலானோரின் போக்கு. 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த அமெரிக்க வாசியான அடோனிராம் ஜட்சனின் இளமை எண்ணமும் இவ்வாறே இருந்தது.


 அடோனிராம் ஜட்சன் அமெரிக்காவில் மல்தேனிலுள்ள மாசசூசெட்ஸ் (Malden, Massachusetts, U.S.Aஎன்ற கிராமத்தில் 1788ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் திகதியன்று பிறந்தார். இவரது தந்தை ஒரு போதகர். அனைத்திலும் திறமைசாலியாகவிருந்த அடோனிராம் Brown University  இல் கல்விபயின்ற போது ஜேக்கப் ஈமாஸ் (Jacob Eamas) என்பவரை தன் நண்பராக ஏற்றுக்கொண்டார். அந்த நண்பர் ‘கடவுளின் வெளிப்பாடு இல்லை’ என்று சாதிக்கக் கூடிய ஓர் இயற்கைச் சமயவாதி (Deist) ஆவார். எனினும், இ ருவரினது ஆர்வமும் நகைச்சுவை, நாடகம், படிப்பு என்று பொதுவாய் இருந்தபடியால் அவ்விருவரும் நண்பர்களானார்கள். தனது பட்டப்படிப்பை முடித்து வீட்டிற்கு வந்தபொழுது, அடோனிராம் முழு நாஸ்திகனாக மாறியிருந்தார். தன் பெற்றோரிடம் கடவுள் இல்லையென வாதம் புரிந்தார். இதனால் அவரது பெற்றோர்கள் மிகவும் கவலையடைந்தனர். அவருக்காக தேவனிடத்தில் இடைவிடாமல் ஜெபம் செய்தனர்.

 21 வயதை எட்டியிருந்த அடோனிராம் புதிய உலகைக் காண எண்ணி, அமெரிக்காவிலுள்ள நியூயோர்க் நகரை நோக்கி பயணமானார். அங்கு கண்டதெல்லாம் இவரது கண்களுக்கு இதமாகவும் மனதிற்கு எழுச்சியூட்டுவதாகவும் இருந்தது. அங்குள்ள ஓர் நாடகக் கம்பனியில் வேலைக்கு அமர்ந்தார். ஒரு வருடம் கழிந்த பிறகு ‘செப்பீல்ட்’ என்ற இடத்தை சுற்றிப்பார்க்க தனது குதிரையின் மேல் பயணமானார். அங்கு ஒரு இளம் போதகரை சந்தித்துப் பேச வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது. அப் போதகரின் பேச்சு கடவுளையும் மெய்பக்தியை பற்றியும் அமைந்திருந்தது. அதனால், அது ஜட்சனுக்கு மிகுந்த எரிச்சலையும் வெறுப்பையும் உண்டாக்கியது.

ஜட்சன், அன்றிரவு இளைப்பாறுவதற்கு ஒரு சத்திரத்திற்கு சென்றார். சத்திரக்காப்பாளன், ‘ஒரேயொரு அறை மாத்திரம் காலியாக இருப்பதாகவும், அந்த அறைக்கு பக்கத்து அறையில் ஒரு நோயாளி மரணத்தருவாயில் இருப்பதால், அவன் இரவெல்லாம் சத்தமிடுவான்’ எனவும் கூறினான். ஜட்சனுக்கு மிகவும் களைப்பாக இருந்ததால், ‘எதுவானாலும் பறவாயில்லை’ என அந்த அறையைக்  கேட்டு வாங்கிக் கொண்டார். இரவெல்லாம் அவருக்கு தூக்கம் வரவில்லை. ஏனெனில் பக்கத்து அறைக்கு மருத்துவர்கள் வந்துபோகும் சத்தமும் நோயாளியின் மரண அலறுதலின் சத்தமும் இவரது தூக்கத்தைக் கெடுத்தது. மரணத்திற்குப்பின் என்ன நடக்கும்? என்ற எண்ணவோட்டம் அன்றிரவில் ஜட்சனுக்குள் அலைமோதியது. மரணம் என்றால் என்ன? பக்கத்து அறையில் கத்திக் கொண்டிருந்தவனோ வாலிபன். அவன் இந்த மரணத்திற்கு ஆயத்தமா இருந்திருப்பானா? மரணத்திற்கு பிறகு அவன் எங்கு போவான்? போதகரான என் தந்தை சொல்வதைப் போல் நரகம் என்றொன்று உண்டா? இல்லை..இல்லை. என் நண்பன் ஈமாஸ் சொல்வானே: ‘நரகம் என்றொன்று இல்லைவே இல்லை. மரணத்தோடு நம் வாழ்வு முடிந்துவிடும்’ என்று. இதைக்குறித்து எப்படியாய் அவன் கேலிச்சிரிப்பு சிரிப்பான். ஒரு வேளை அவன் இப்படிப்பட்ட மரண பயத்திற்கும் திகிலூட்டும் நினைவிற்கும் மிக ஞானமான பதிலை வைத்திருப்பான். ஒரு வேளை அவன் இந்த நோயாளியின் அருகில் இருந்திருந்தால் இவன் மரண ஓலமிட்டிருக்கமாட்டான் என்று நினைத்துக் கொண்டு ஒருவாறு கண்ணயர்ந்தார் ஜட்சன்.


 அதிகாலை வேளையில் அந்த அறையிலிருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை. மறுநாள் காலை சத்திரக் காப்பாளனிடம் அந்த வாலிபனுக்கு என்ன நடந்தது என விசாரித்தார். ‘உங்களது வயதையுடைய அந்த வாலிபன், Brown University இல் பட்டப்படிப்பை முடித்தவன்’ என்று சத்திரக்காரன் சொல்ல, ஆர்வமிகுதியால் அடோனிராம் அவரது முழுப்பெயரையும் விசாரிக்க, நேற்று அவ்விதம் மரண ஓலமிட்டவனை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அடோனிராமுக்கு உலகமே ஒரு நிமிடம் தலைகீழாக சுற்றியது. பக்கத்து அறையிலிருந்து அலறியது தன்னுடைய ஆருயிர் நண்பன் ‘ஈமாஸ்’ என்பதையும் இப்பொழுது அவன் இறந்துவிட்டான் என்பதையும் அவரால் நம்பமுடியவில்லை. ‘கடவுளே இல்லை’ என சாதித்து, உலகத்தின் எல்லா கேள்விகளுக்குமான பதில் தன்னிடமுண்டென கங்கணம்கட்டி வாழ்ந்த தன் நண்பனின் மரண ஓலம் அடோனிராமின் நினைவில் அடிக்கடி வந்து, அவரை வாட்டி வதைத்தது. அப்போது தான் அவருக்கு, அவரது தகப்பன் ஏற்கனவே புத்திமதியாய் சொல்லியிருந்த ‘தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்…’(சங்கீதம் 14:1) என்கிற வேதாகம வார்த்தை எத்துணை உண்மையானது என்பது புரிந்தது.


 தன் வீட்டிற்கு வந்ததும் ‘தான் ஏதாவதொரு இறையியல் கல்லூரியில் இணைந்து படித்து, சத்தியத்தை அறிய வேண்டும்’ என தீர்மானித்தார் அடோனிராம். வேதாகம கல்லூரியில் சேர்ந்த மூன்றாவது மாதம் 1808ம் ஆண்டு டிசம்பரில் தன்னை முழுவதும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். கிறிஸ்துவுக்காக தன்னை அர்ப்பணித்த பின், பிரிட்டிஷ் போதகர் எழுதிய மிஷனரி சவாலைத்தரும் ஒரு கைப்பிரதியை வாசித்தார். அன்றிலிருந்து அவரது உள்ளம் மிஷனரி பாரம் பெற்றது. மேலும், Star in the East’  மற்றும் An Account of an Embassy to the Kingdom of Ava’ஆகிய நூல்களை படித்தமையால் மிஷனரி ஊழியத்தின் மேல் அளவுகடந்த தாகம் ஏற்பட்டது. எனினும், அவர் படித்த ஆண்டோவர் வேதாகம கல்லூரி (Andover Theological Seminary) வெளிநாட்டு மிஷனரி ஊழியத்தை அவ்வளவாக உற்சாகப்படுத்தவில்லை. என்றாலும் இவரும் ‘சாமுவேல் மில்ஸ்’ என்ற மற்றுமொரு மாணவனும் ஏனைய மாணவர்களுடன் சேர்ந்து மிஷனரி பணிக்காக ஜெபிக்க ஆரம்பித்தனர். இதுவே அமெரிக்க வெளிநாட்டு ஊழியங்களுக்கு வித்தாக அமைந்தது. மிஷனரி தரிசனங்கொண்ட இந்த மாணவர்கள் வைக்கோல் போர் அருகில் தவறாமல் கூடி ஜெபித்து வந்ததுடன் தங்களையும் மிஷனரிகளாக அர்ப்பணித்துக் கொண்டனர்.


 இதற்கிடையில் கிறிஸ்துவை அறியாத மக்களைக் குறித்த பாரத்தைக் கொண்ட ‘ஆன் (Ann)’ என மறுபெயர் கொண்ட ‘நான்சி ஹசில்டன்’ எனும் பெண்மணியை 1812ம் ஆண்டு ஜட்சன் மணந்தார். திருமணமான 13வது நாளிலேயே இருவரும் ஒன்றாக இந்தியாவிற்கு மிஷனரிகளாக புறப்பட்டனர். இவர்களுடன் சாமுவேல் மில்ஸ் - ஹரியட் நிவெல் தம்பதியினரும் இணைந்து கொண்டனர். அந்நாட்களிலிருந்த கிழக்கிந்திய கம்பனியினர் அமெரிக்கர்களான இவர்களை இந்தியாவிற்குள் அனுமதிக்கவில்லை.


 கலப்பையில் கைவைத்தாகிவிட்டது, இனி பின்னிட்டு திரும்பக்கூடாது என தம் மனதில் தீர்மானம் பண்ணிக்கொண்டவர்களாய் தேவனுடைய சித்தத்தை அறிய முயற்சித்தனர். இறுதியாக ‘பர்மா’ (Burma)  எனப்பட்ட இன்றைய மியன்மார் (Myanmar) தேசத்திலுள்ள ‘ரங்கூன்’ (Rangoon) பட்டணத்தை போய்ச் சேர்ந்தனர். தங்களைப் பற்றியதான தேவனுடைய திட்டவட்ட நோக்கம்: பர்மாவில் தேவனுடைய ஊழியம் செய்வதே என்பதை கண்டு கொண்ட ஜட்சன் தம்பதியினர் அங்கு முழு மனதோடு தேவனுடைய வசனத்தை விதைக்க ஆரம்பித்தனர்.

 (தொடரும்…..)

வேதவாசிப்பு பகுதி : நீதிமொழிகள் 1:7-10, 1தீமோத்தேயு 6:20-21



Comments

Popular posts from this blog

கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்போம் | SHORT STORY

by ரஜீவனி அக்கா >>> ஒரு சூப்பர் மார்க்கட் ஒன்றிலே, தன் சிறுபிள்ளையுடன் ஒரு தாயார் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.  அந்த குட்டிப்பிள்ளை கடையில் அடுக்கி வைத்திருந்த ஒரு ட்ரோன் ஹெலிகொப்டரை தூக்கி வைத்துக்கொண்டு “எனக்கு இது வேண்டும்” என்று அழுதது.  தாய் ஏதோ ஒரு நன்மை கருதி, இதை நீ விளையாடும் அளவுக்கு உன் வயது பக்குவம் பெறவில்லை. இது உனக்கு வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே வேறு பொருட்களை எடுத்த வண்ணம் நகர்ந்தாள்.  தாய் வாங்கித் தராததைக் கண்டு குழந்தை காலை உதைத்து உதைத்து அழுதது.  தாயும் அவள் பங்கிற்கு எவ்வளவோ சொல்லி, கவனத்தைத் திருப்ப முயன்றும் முடியவில்லை.  வழியெல்லாம் அழுது அடம்பிடித்துக் கொண்டே சென்றது. ஒரு வழியாக குழந்தையை சமாளிக்க இயலாமல் அதை வேண்டி கொடுத்தார். வீடு திரும்பியதும் குழந்தைக்கு அதை சரியாக இயக்க தெரியாததால் மேலே பறந்து கொண்டிருந்த ட்ரோன் ஹெலிகொப்டர் கீழே விழுந்து உடைந்து போனது..... நாமும் கூட ஏதாவது ஒரு காரியத்தை விரும்பி ஆண்டவரிடம் கேட்கலாம்.  அது எப்படியாவது கிடைக்க வேண்டுமென்று ஆசையாய் எதிர்பார்க்கலாம்.  ஆனால் நம்மைக் குறித்து ...

மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் ( Medical missionary - Dr. John Scudder Sr.)

by  டேவிட் அண்ணா >>> மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் (Dr. John Scudder Sr.) - கி.பி.1793 - 1855 மருத்துவர் ஐடா ஸ்கடரை (Dr. Ida Scudder) பற்றி கேள்விப்படாதோர் யாருமே இருக்கமாட்டோம். ஆனால் முன்னோடி மருத்துவ மிஷனரியான அவரது தாத்தா ஜோன் ஸ்கடர் சீனியர் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாத்தா ஜோன் ஸ்கடரில் ஆரம்பித்து பேத்தி ஐடா ஸ்கடர் வரை இரண்டு தலைமுறைகளாக ஸ்கடர் குடும்பத்தினர் இலங்கையர், இந்தியருக்கு மருத்துவ மற்றும் ஆன்மீக சேவை செய்திருக்கிறார்கள். என்னவொரு அர்ப்பணிப்பு பாருங்கள். இன்று ஜோன் ஸ்கடர் பற்றி ஒருசில காரியங்களை தெரிந்து கொள்ளலாம். அவர் 1793ம் ஆண்டு செப்டெம்பர் 3ம் திகதி அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாகாணத்தில் ப்ரிஹோல்ட் எனும் ஊரில் (Freehold, New Jersey, USA) பிறந்தார். சிறுவயதிலிருந்தே தேவையுள்ளோருக்கு உதவும் இரக்க குணம் நிறைந்தவராகக் காணப்பட்டார். எப்போதுமே ஜோனிற்கு கிறிஸ்தவ மனநிலை உண்டு என அவரது குழந்தைப் பருவம் பற்றி அவரது அம்மா கூறியிருக்கிறார். படிப்பில் கெட்டிக்காரனாகவிருந்த அவர் Princeton University மற்றும் New York College of Physicians and Surgeons இ...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...