நம்மில் அநேகமானவர்கள் சகேயு என்னும் ஐசுவரியவானுக்கும் இயேசுவுக்கும் இடையே எரிகோவிலே நடந்த ஒரு ஆச்சரியமான புதுமையான சம்பவத்தைக் குறித்து படித்திருப்போம். இந்தச் சம்பவத்தை நாம் சிறுவர்களாக ஞாயிறு பாடசாலையிலே கற்றபோது நம்முடைய மனதில் பல ஞாபகங்கள் இந்தச் சம்பவம் பற்றி பதிந்திருக்கும்.
குள்ளனாயிருந்த சகேயு, காட்டத்தி மரம், இயேசுவைச் சுற்றிலும் ஜனக்கூட்டம், மற்றும் இன்னும் சில ஞாபகங்கள் இருக்கலாம். லூக்கா 19ம் அதிகாரத்தை நாம் வாசிக்கும்போது பின்வருமாறு அந்த சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது.
"அவர் (இயேசு) எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில், ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன், இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல், அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான். அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள். சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்" (லூக்கா 19: 1 - 10).
இந்த இளம்பிராயத்திலே இந்தச் சம்பவமானது நமக்கு மேலான ஒரு சத்தியத்தைக் கற்றுத்தருவதாய் உள்ளது. ஆண்டவர், தாம் படைத்த நம் ஒவ்வொருவரையும் தனித்தனியாக பெயர் பெயராக அறிந்திருக்கிறார் என்ற பெரிதான ஒரு உண்மையே அதுவாகும். நாம் வாசித்த இந்தப் பகுதியிலே, இயேசு சுவாமி "சகேயுவே..." என்று சொல்லி அவனது பெயரைச்சொல்லி அழைப்பதை அறிகிறோம். இயேசு சுவாமிக்கு இந்த சம்பவத்துக்கு முன் சகேயுவை சந்தித்ததுண்டா? சகேயு பற்றிய அறிமுகம் அவருக்கு எவ்வாறு கிடைத்தது? சகேயு இந்த ஆச்சரியத்தை கொஞ்சமும் எதிர்பாத்திருந்தானா? இல்லை என்பதே எல்லாவற்றுக்குமான பதில். ஆனாலும், இயேசு சுவாமி அவனைப் பெயரைச்சொல்லி அழைக்கின்றார். "சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும்" என்றார்.
சகேயுவின் சமுதாயம், அவன் வாழ்ந்த சூழல் அவனை எப்படி பார்க்கிறது, எப்படி நடத்துகிறது என்பதை ஆண்டவர் பொறுப்படுத்தவில்லை. ஆயக்காரருக்கு தலைவனும் ஐசுவரியவானாயும் இருந்த சகேயு அநியாயமாய் ஜனங்களிடம் பணம் அறவிடுகிறான் என்பதே பொதுவான அபிப்பிராயமாய் இருந்தது. ஆனாலும் இயேசு சுவாமி அவனைப் பெயர் சொல்லி அழைத்தது மட்டுமல்லாது, அவனின் வீட்டில் தான் தங்கவேண்டும் என்றும் கூறினார். நிச்சயமாகவே அன்றைக்கு சகேயுவின் வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது.
இன்றைக்கு ஆண்டவர் உங்களையும் உங்கள் பெயர்களை அறிந்து அழைக்கிறார். அவர் இன்றைக்கு நம் உள்ளங்களில் வந்து தங்க விரும்புகிறார். அவரை ஏற்றுக்கொண்டு நம் உள்ளங்களில் அவரை வரும்படி அழைக்கும்பொழுது, நமது வாழ்வுக்கும் நிச்சயம் இரட்சிப்பின் நாள் காத்திருக்கிறது. ஆகையால் நம் ஆண்டவர் இயேசு சுவாமியை, நம் பெயர்களையெல்லாம் அறிந்து நம்மை பெயர் சொல்லி அழைக்கும் ஆண்டவரை இன்று நம்முள் வாழ அழைப்போம்.
ஆண்டவர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment
Comments