ஒரு சூப்பர் மார்க்கட் ஒன்றிலே, தன் சிறுபிள்ளையுடன் ஒரு தாயார் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார். அந்த குட்டிப்பிள்ளை கடையில் அடுக்கி வைத்திருந்த ஒரு ட்ரோன் ஹெலிகொப்டரை தூக்கி வைத்துக்கொண்டு “எனக்கு இது வேண்டும்” என்று அழுதது. தாய் ஏதோ ஒரு நன்மை கருதி, இதை நீ விளையாடும் அளவுக்கு உன் வயது பக்குவம் பெறவில்லை. இது உனக்கு வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே வேறு பொருட்களை எடுத்த வண்ணம் நகர்ந்தாள். தாய் வாங்கித் தராததைக் கண்டு குழந்தை காலை உதைத்து உதைத்து அழுதது. தாயும் அவள் பங்கிற்கு எவ்வளவோ சொல்லி, கவனத்தைத் திருப்ப முயன்றும் முடியவில்லை. வழியெல்லாம் அழுது அடம்பிடித்துக் கொண்டே சென்றது. ஒரு வழியாக குழந்தையை சமாளிக்க இயலாமல் அதை வேண்டி கொடுத்தார். வீடு திரும்பியதும் குழந்தைக்கு அதை சரியாக இயக்க தெரியாததால் மேலே பறந்து கொண்டிருந்த ட்ரோன் ஹெலிகொப்டர் கீழே விழுந்து உடைந்து போனது.....
நாமும் கூட ஏதாவது ஒரு காரியத்தை விரும்பி
ஆண்டவரிடம் கேட்கலாம். அது எப்படியாவது கிடைக்க வேண்டுமென்று ஆசையாய் எதிர்பார்க்கலாம். ஆனால் நம்மைக் குறித்து சகலமும் அறிந்திருக்கும் தேவன் ஏதோ ஒரு நன்மை கருதி அதைத் தர மறுக்கலாம். ஆகவே அந்த நிலையையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வேண்டும்.
தாவீது, தேவனாகிய கர்த்தருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்று விரும்பினார். ஆனால் தேவனோ, “நீ ஆலயத்தைக் கட்ட வேண்டாம் உன் குமாரனே எனக்கொரு ஆலயத்தை கட்டட்டும்.” என்றார். தாவீது மிகவும் விரும்பி இக்காரியத்தைத் தேவனிடம் கேட்டாலும், தேவன் விரும்பவில்லை என்றதும் தேவசித்தத்திற்கு விட்டு விட்டார். இதுதான் முதிர்ச்சி. தாவீதிற்கு முதிர்ச்சியடைந்த மனப்பக்குவம் இருந்தது.
பிரியமானவர்களே! நாம் ஏதோ ஒரு காரியத்திற்காக, விடாப்பிடியாய் தேவனிடம் கேட்டு அடம்பிடிக்கிறவர்களாயிருப்போமானால் இன்னும் ஆவிக்குரிய குழந்தைகளாகவே இருக்கிறோம் என்பதே பொருள். நான் குழந்தையா? முதிர்ச்சியுள்ளவனா? என்பதை சிந்திக்க வேண்டும். நாம் விரும்பும் எல்லாக் காரியங்களையும் தேவனிடம் கேட்கலாம். ஆனால் அதில் சிலவற்றிற்கு தேவன் “இல்லை” என்று பதிலைக் கூறும்போது அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வேண்டும். தேவன் ஒரு காரியத்தை மறுக்கிறார் என்றால் அது முற்றிலும் நமது நன்மைக்காகவே என்பதையும் நாம் ஒருபோதும் மறந்துவிடவே கூடாது.
“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு...” - நீதி. 3:5
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
Comments
Post a Comment
Comments