by பிறேமன் அண்ணா
>>>
"நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்;
மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது."
(மத்தேயு 05: 14)
எனது அன்பின் தங்கை தம்பிமாரே,
நமது ஆண்டவர் இயேசு சுவாமி இவ்வுலகில் நம்மிடையே வாழ்ந்த காலங்களில் நமக்குக் கற்றுத்தந்த ஒரு பெரிதான பாக்கியமான அழைப்பைக் குறித்து இன்று உங்களோடு பேச விரும்புகிறேன்.
மேலே நாம் வாசித்த வேத வசனமானது எம் வாழ்விலே ஒரு மிக முக்கியமான ஒரு உண்மையையும் நமது ஆண்டவர் நமக்கு அளித்த ஒரு விஷேட அழைப்பையும் நமக்கு உணர்த்துகிறது.
நமது கர்த்தர் இவ்வுலகைப் படைத்து, அதில் முதலாவதாக வெளிச்சத்தை உண்டாக்கி, அந்த வெளிச்சம் "நல்லது என்று தேவன் கண்டார்" என்று வேதம் நமக்கு சொல்லுகிறது (ஆதியாகமம் 01: 04). அது மட்டுமல்லாது, தேவன் நல்லது என்று கண்ட அந்த வெளிச்சத்தை இருளிலிருந்து வேறாகப் பிரித்தார். இதுவே ஆண்டவரின் விருப்பம். இதுவே நமது கர்த்தரின் திட்டம்.
வெளிச்சத்தை நல்லதென்று கண்டு, அதை இருளிலிருந்து பிரித்த நம் தேவன், நம் ஒவ்வொருவரையும் இந்த உலகத்துக்கு ஒரு வெளிச்சமாக, நன்மையாக, நல்லதொன்றாக நமது வாழ்வும் இவ்வுலகில் அமைய நம்மை அழைக்கிறார்.
மேலே நாம் வாசித்த வசனமான மத்தேயு 05: 14 இல் இயேசு சுவாமி நம்மை ஒரு வெளிச்சமாக அழைப்பது மட்டுமல்லாது, நம்மை மலையின் மேல் உள்ள பட்டணமாகவும் வைத்திருக்கிறார் என்பதை ஞாபகப் படுத்துகிறார். மலையின் மேல் உள்ள பட்டணம், உயர்ந்த இடத்திலே இருப்பதால் அதை யாவராலும் காணக்கூடியதாக இருக்கும்.
ஆகையால் இரண்டு உண்மைகள் நமக்கு வெளிப்படுகின்றன. ஒன்று வெளிச்சம் , மற்றது உயரம். ஆண்டவர் நம்மை இவ்வுலகில் தனது வெளிச்சமாக வைத்தது மட்டுமின்றி, நம்மைத் தமது பிள்ளைகளாக அழைத்து ஒரு உயர்ந்த மகிமையுள்ள ஒரு ஸ்தானத்திலேயும் வைத்திருக்கிறார். ஆகையால் நமது அழைப்பு பெரிதானது. ஆண்டவரின் வெளிச்சத்தைப் பிரகாசிப்பதும், உயர்வான இடத்திலிருந்து பூமியின் எல்லைகள் எங்கும் இந்த வெளிச்சம் போய் சேரும்படியாக அவருடைய நாமத்தை மற்றவர் அறியப்பண்ணுவதுமே நமது உயர்ந்த அழைப்பாகும்.
நாம் வளர்ந்து வரும் நாட்களிலே, எந்த துறையிலே, எந்த உயர்வான கல்வியிலே, பதவியிலே இருந்தாலும், அந்த அந்த இடங்களிலே ஆண்டவரின் வெளிச்சத்தை நாம் பிறர் மீது காட்டும் அன்பாலும், ஆதரவாலும் பிரகாசிக்கப்பண்ண அழைக்கப்படுகிறோம். இந்த உயர்வான அழைப்பை அறிந்து நம் தேவனுக்காய் நாம் கவனமாக வளருவோம். அவருடைய உயர்வான வெளிச்சமாய் இந்த உலகிலே வாழுவோம்.
ஆண்டவர்தாமே நம் ஒவ்வொருவரையும் வழிநடத்துவாராக.
Comments
Post a Comment
Comments