இந்தியாவுக்கு வந்த ஒரு உன்னத சீடன் - அப்போஸ்தலன் தோமா - பாகம் 01 | Thomas the Apostle | FOOTPRINTS OF MISSIONARIES
‘‘நீ வாழ்ந்தால் ஓர் கனி தரும் மரமாயிரு! மடிந்தால் ஓர் விதையாக மடி!’’
If you fall, be a seed!
-Jei Nesha -
அன்பான தம்பி, தங்கைமார்களே,
நீண்ட நாட்களுக்கு பின், மறுபடியும் உங்களை சந்திப்பதில் அண்ணாவுக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் எல்லாரும் சுகமுடன் இருக்கிறீர்களா? ‘ஆம்’ என்று பலர் சொல்லும் சத்தம் என் செவியை எட்டுகிறது. சந்தோஷம்! இவ்வாரத்தில் நாம் கற்கவுள்ள இறைபணியாளரின் அடிச்சுவடுகளை பின்பற்றி; அவர் யார்? அவரின் வாழ்வு இன்று எமக்கு எவற்றை கற்றுத்தரவுள்ளது? என்பதை ஆராய்வோம், வாருங்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களின் பெயர்களை சொல்லுங்கள் என்று கேட்டால், சிலருடைய பெயர்களேதான் உடனடியாக எம்முடைய ஞாபகத்தில் வரும். மூன்று முறை மறுதலித்த பேதுரு, காட்டிக்கொடுத்த யூதாஸ், அன்பு சீடன் யோவான், வரிவசூலித்த மத்தேயு என்று சிலருடைய பெயர்கள்தான் முதலில் எம் வாயிலிருந்து புறப்படும். காரணம், அவை நம் மனதில் நன்றாய் பதிந்துள்ளது. ஆனால் இன்றைக்கு நாம் பார்க்கப்போகிற சீடன் பெயர் ‘திதிமு என்னப்பட்ட தோமா’. இவர் தான் நம் அண்டை நாடான இந்திய தேசத்துக்கே முதன்முதலில் சுவிசேஷத்தை பிரசங்கிக்க வந்த மிஷனரி. இக்கட்டுரையை முழுமையாக வாசித்து முடிக்கும் போது, ‘தோமா’ என்கிற பெயரும் உங்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என நான் நம்பகிறேன்.
மேலும், இவருக்கு ‘சந்தேகப்பட்ட தோமா’ என இன்னுமொரு பெயர் உள்ளது. சந்தேகப்பட்ட சீஷன் என்றவுடன் யோசிக்கிறீர்களா? அந்தப் பெயருக்கான காரணத்தைக் கூறுகிறேன், கேளுங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த பின் சீடர்களுக்கு காட்சியளித்தார். அப்பொழுது தோமா அங்கு இருக்கவில்லை. சீடர்களுள் சிலர் ஆண்டவர் உயிர்த்தெழுந்த செய்தியை தோமாவுக்கு அறிவித்தனர். ஆனால் தோமாவோ, ‘இயேசுவுடைய விலா மற்றும் கைகளில் ஆணிகளால் உண்டான காயத்தைக் கண்டு அந்த காயங்களில் தன் விரலை போட்டாலொழிய தான் அதை நம்பப்போவதில்லை’ எனக் கூறினார். அதனால்தான் ‘சந்தேகப்பட்ட சீடன் தோமா’ என்கிற வழக்க பெயர் உருவாகிற்று.
எனினும், சந்தேகப்பட்ட தோமாவை மறுபடியும் சந்தித்த நம்ம உயிர்த்தெழுந்த இயேசப்பா, தழும்புள்ள தன் கைகளை நீட்டி, தொட்டுப்பார்க்க தன் விலாவையும் தோமாவுக்கு காட்டினார். சந்தேகப்பட்ட சீடன் மனம் நொருங்கி, ‘என் தேவனே என் ஆண்டவரே!’ என்று உருக்கமாய் தன் கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுக்கக் கூறினான். இவ்வாறு இயேசுவின் உயிர்த்தெழுதலின் ஆதாரத்தை கண்ணாரக் கண்டு விசுவாசித்தார் தோமா. எனினும், ‘கண்டு விசுவாசிப்பவனைக் காட்டிலும் காணாமல் விசுவாசிப்பவன் அதிக பாக்கியவான்’ என்ற அறிவுரையை கூறி, நம்ம இயேசப்பா தோமாவை தன் மார்போடு அணைத்துக்கொண்டார். இறுதியில், சந்தேகித்த தோமா சுவிசே~த்தை சுமக்கும் தோமாவாய் மனம் மாறினார்.
நண்பர்களே, தோமாவைப் போலதான் நாமும் பல தடவை, நம் வாழ்வில், குடும்பஉறவுகளில், படிப்பில், தொழிலில் பிரச்சினைகள் வரும் போது தடுமாறுகிறோம், செய்வதறியாது திகைக்கிறோம், மனம் பதைக்கிறோம், இதுவரை அதிசயமாய் நம்மைத் தாங்கி தப்புவித்து வந்த இயேசப்பாவின் அன்பை, அவரது வார்த்தையை, மறக்கிறோம். அவரின் வல்லமையின் மகத்துவத்தை சந்தேகிக்கின்றோம். ஆண்டவரையே பார்த்து சிலநேரங்களில் கேள்வி கேட்கிறோம். மேலும், முதலில் ஆண்டவரைத் தேடாது அவரின் ஆலோசனைக்கு செவிமடுக்காது, எம் சுயபலத்தை, சுயபுத்தியை அல்லது பிறரின்; உதவியை நாடுகிறோம். இதனால் ஒன்றன்பின் ஒன்றாக தோல்வியையே தழுவுகிறோம், ஆக, நம்ம பிரச்சினை கூடினதேயொழிய குறைந்தபாடில்லை.
எனினும், அன்று சந்தேகப்பட்டு தட்டுத்தடுமாறித்திரிந்த தோமாவின் மன ஐயங்களை போக்க தன்னையே தாழ்த்தி வந்த அருள்நாதர் இயேசு, இன்று உன் மன ஐயங்களையும் மனதின் போராட்டங்களையும் நீக்க, தம் பாசக் கைகளால் உன்னைத் தன் மார்போடு அணைத்தன்பு செய்ய, குறிப்பாக இக்கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும் உன்னைத் தேடி உன்னருகே வந்திருக்கிறார். ‘அவரை நான் கண்டு தான் விசுவாசிப்பேன்’ என்று தோமாவைப் போல் இன்று உன் இதயத்தை கடினப்படுத்தாதே! எள்ளவும் சந்தேகப்படாமல் இயேசப்பாவை விசுவாசித்து, முதலில் அவரிடம் உன் மனப்பாரங்களை, குறைவுகளை, தேவைகளைக் கூறு. அப்போது அற்புதங்களை உன் வாழ்வில் காண்பாய். நிச்சயமாய், அநேகருக்கு முன் ஜீவனுள்ள சாட்சியாய் உன் வாழ்வை நம்ம இயேசப்பா மாற்றுவார்! குவலைப்பட்டு கலங்காதே! நீ தோல்விக்கல்ல, வெற்றிக்கென்றே அழைக்கப்பட்டாய்!‘நீ வெற்றியின் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளை’ என்பதை ஒருபோதும் மறவாதே!
வேத வாசிப்புப்பகுதி: யாக்கோபு 1: 5 - 7
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால்இ யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன்இ அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.
அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.
நண்பர்களே, மிஷனரியான தோமா ஐயாவைப் பற்றி அடுத்தவாரம் இன்னும் அனேக சுவாரஸியமான விடயங்களை கற்கவுள்ளோம்… சற்றுப் பொறுத்திருங்கள்!
அதுவரைக்கும் உங்களிடமிருந்து விடைபெறும் நான்,
உங்கள் அண்ணா டேவிட்.
(தொடரும்……)
Comments
Post a Comment
Comments