ஓர் கிராமத்தில் அந்தோனி எனும் ஒரு ஏழை மனிதன் வசித்து
வந்தார். அவர் நேர்மையானவரும் சிறந்த உழைப்பாளியுமாக இருந்தார். அவர் ஓர் நாள்
ஊருக்கு ஒதுக்கு புறம் இருந்த ஒரு பொது நிலமொன்றில் ஒரு மாமரக் கன்றை நட்டார். அதை
தினமும் கரிசனையுடன் பாதுகாத்து நீரூற்றி வளர்த்து வந்தார். வருடங்கள் ஓடின....
சிறிய மரமானது பெரிய விருட்சமாக செழிப்பாக வளர்ந்து நின்றது. இந்த மரம் ஊரில்
இருந்த மற்றைய மாமரங்களை விட மிகவும் இனிமையான கனிகளை தந்து கொண்டிருந்தது...
அதின் கனிகளை விற்று பணமாக்கியது போக மீதமானதை மற்றவர்களுக்கு கொடுத்து பகிர்ந்து
வந்தார்.
அதே ஊரிலே சபரி என்னும் பேர் கொண்ட ஒருவன் இருந்தான். அவன்
ஒரு ஏமாற்றுப் பேர்வழி... மற்றவர்களுடைய உடைமைகளை ஏமாற்றி அபகரிப்பதில்
கில்லாடியாக இருந்தான். அது மட்டுமல்லாமல் தனது முரட்டுக் குணத்தால் மற்றவர்களின்
பயத்தையும் பெற்றிருந்தான்...
சபரி,
அந்தோனி நட்ட மாமரத்தின் மேல் கண் வைத்தான்... எப்படியாவது அந்த மரத்தை தனக்கு
சொந்தம் கொண்டாடி அதின் முழு பலனையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற கெட்ட சிந்தனை
அவனுக்கு ஏற்பட்டது. இதனால் அவன் ஒரு போலி நாடகத்தை நடத்த திட்டமிட்டான்.
அந்தோனி மறு நாள் காலையில் மாம்பழங்களை பறித்து விற்பனை
செய்வதற்காக கனிகளை பறிக்க புறப்பட்டான்... இதனை முன்னமே அறிந்த சபரி, அந்தோனி செல்வதற்கு
முன்னமே அங்கு சென்று மாம்பழங்களை பறிக்க ஆரம்பித்தான். இதை கண்ட அந்தோனி, " சபரி, என்ன காரியம்
செய்கிறாய்? ஏன்
என்னுடைய மரத்து கனிகளை என்னை கேட்காமல் பறிக்கிறாய்"?? என்று கேட்டார்.
அதற்கு அவன் " நான் யாரை கேட்க வேண்டும்?? இது என்னுடைய மரம். நான் நட்ட மரத்தின் கனிகளை நான்
பறிப்பேன்" என சொல்லி மரத்துக்கு சொந்தம் கொண்டாடினான். அந்தோனி எவ்வளவு
விவாதித்தும் அது தனக்கு சொந்தமான மரம் என்று பிடிவாதமாய் நின்றான் சபரி..
அக்கம் பக்கம் இருந்த ஜனங்களுக்கு உண்மையான உரிமையாளன் யார்
என்பது தெரிந்தும் சபரியின் முரட்டுக் குணத்திற்குப் பயந்து அந்தோனிக்கு ஆதரவளிக்க
பயந்தனர். இவர்களது வாக்குவாதத்தை பார்த்துக் கொண்டு நின்ற ஒருவன் இவர்களிடம் அந்த
ஊர் தலைவர் பொன்னம்பலம் ஐயாவிடம் சென்று நியாயத்தை கேட்குமாறு சொன்னார். அதற்கு
இருவரும் சம்மதிக்கவே ஊர் தலைவரிடம் இந்த பிரச்சனை தெரிவிக்கப்பட்டது. ஊர்த்
தலைவர், சம்மந்தப்பட்ட
நபர்களை மறு நாள் அந்த மாமரத்தடிக்கு வரும் படியாக கட்டளையிட்டார்.
மறு நாள் சம்மந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், ஊர் ஜனங்களில் சிலரும்
என்ன நடக்க போகின்றது என வேடிக்கை பார்க்க அவ்விடத்தில் ஒன்று கூடினர். அந்தோனி
ஊர்த் தலைவரிடம் , "ஐயா, இத்தனை ஆண்டுகளாக
நான் தான் இம்மரத்தை கஷ்டப்பட்டு வளர்த்து வந்தேன். இப்பொது சபரி இது தனக்கு
சொந்தம் என்கிறான். இதற்கு நீங்கள் ஒரு முடிவு கூற வேண்டும் என கேட்டுக்
கொண்டான்." அதற்கு சபரி,
"அப்படியல்ல நான் தான் இத்தனை ஆண்டுகளாக வளர்த்து வந்தேன் திடீரென இவர் என்னை
ஏமாற்றி உரிமை கொண்டாடுகிறார்" என்று கூறினான். மாறி மாறி இருவரும் இதையே
சொல்லிக் கொண்டிருந்தனர்.
1
இராஜாக்கள் 3: 16-28 இல்
சாலமோன் ராஜாவும் இதே போல ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு குழந்தைக்காக உரிமை கொண்டாடிய
இரு தாய்களுக்கு எவ்வாறு ஒரு சரியான முடிவை எடுத்தார் என்பதை நாம் வாசிக்க
முடியும். அவ்வாறே ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நாமும் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில்
சரியான முடிவை எடுக்க வேண்டிய சூழ் நிலைக்குள் நாம் அனேக நேரம் தள்ளப்படுகிறோம்...
அது சில சமயம் நம்மை சார்ந்த விடயமாக இருக்கலாம் அல்லது மற்றவர்களுக்கு நியாயம்
கிடைக்க வேண்டிய சந்தர்ப்பமாகவும் இருக்கலாம். இதிலே நாம் எப்படி நமது ஞானத்தை
உபயோகிக்கிறோம் என்பது மிகவும் முக்கியமான விடயமாகும்.
ஊர்த் தலைவர் சிறிது நேரம் யோசித்து விட்டு ஒரு முடிவுக்கு
வந்தார். " சரி இதற்கு நான் ஒரு நல்ல முடிவு தருகிறேன். பேசாமல் இந்த மரத்தை
முழுமையாக வெட்டிப் போடுவோம். யாருக்கும் இது சொந்தமாக இருக்க தேவையில்லை. இதில்
கிடைக்கும் கனிகளை சரி சமனாக இருவரும் பங்கிட்டுக் கொள்ளுங்கள். பிரச்சனை
முடிந்தது." உடனே அதற்கு சபரி,
"ஐயா இது ஒரு நல்ல முடிவு. அதையே செய்வோம்" என்றான். ஆனால் அந்தோனியோ
மிகவும் துக்கம் கொண்டு,
"ஐயா, அப்படி
ஒருபோதும் செய்து விடாதீர்கள். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இதை வளர்த்தேன் என்பது
எனக்குத்தான் தெரியும். எனக்கு எதுவுமே வேண்டாம். இதை இவனே வைத்துக் கொள்ளட்டும்.
மரத்தை மாத்திரம் வெட்டாதீர்கள்" என்று சொல்லி அழுதான்.
உடனே ஊர்த் தலைவருக்கு உண்மையான சொந்தக்காரர் யார் என்பது
புலப்பட்டது. உடனே அந்தோனிக்குத்தான் மரம் சொந்தம் என கூறி, சபரியை நன்கு
திட்டி கண்டித்து துரத்தி விட்டார். ஊர் மக்கள், ஊர்த்தலைவர் பொன்னம்பலம் ஐயாவின் இந்த புத்திசாலித்தனமான
தீர்ப்பை கண்டு அவரை மிகவும் பாராட்டினர்.
என் அன்புக்குரிய சகோதரர்களே...
இவ்வாறான நேரங்களில் நம்முடைய ஆலோசனை கர்த்தராகிய தூய
ஆவியானவரின் துணை கொண்டு நல்ல முடிவுகளை எடுக்க பழகுவோம்...
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக !!!
Comments
Post a Comment
Comments