இயேசு சுவாமி இந்த பூவுலகில் வந்து பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு முன், அவருக்கு வழியை ஆயத்தம் செய்யும்படி யோவான் ஸ்நானகன் தெரிவு செய்யப்பட்டார். இயேசு சுவாமியின் வருகைக்கு இப்பூவுலகின் மாந்தரை ஆயத்தம் செய்யும் பொறுப்பு யோவான் மேலே விழுந்தது. இப்படியான ஒரு உன்னதமான ஊழியத்துக்கு தெரிவு செய்யப்பட்ட யோவானைக் குறித்தும் அவரது அதிசயமான பிறப்பைப் பற்றியும் முன்னறிவிக்கப்பட்டதை நாம் அநேகர் அறிவோம். இப்படியாக அறிவிக்கப்பட்ட அந்த ஆச்சரியமான செய்தியிலிருந்தே இன்று நாம் சில ரகசியங்களை தெரிந்துகொள்வோம்.
லூக்கா 1ம் அதிகாரத்திலே, யோவானின் பிறப்பைப் பற்றி முன்னறிவிக்கப்படும் பகுதியை நாம் பார்ப்போமானால், சகரியாவுக்கும் எலிசபெத்துக்கும் பிறக்கப்போகும் இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்கும் என அறிவிக்கப்படுவதை நாம் காணலாம். 1ம் அதிகாரத்தின் 15ம் வசனம் இப்படியாய் சொல்கிறது.
“அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாய் இருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.” (லூக்கா 1:15)
இந்த வசனத்திலிருந்து கர்த்தருக்காக வழியை ஆயத்தப்படுத்த
அழைக்கப்பட்ட ஒருவரிடம் காணப்பட வேண்டிய சில முக்கிய இயல்புகள் எடுத்துக்
காட்டப்பட்டுள்ளன. மூன்று முக்கியமான காரியங்கள்.
முதலாவது, யோவான் கர்த்தருக்கு முன்பாய் பெரியவனாய் இருப்பான் என்று சொல்லப்படுகிறது. கர்த்தருடைய பார்வையில் நீ பெரியவனாய் இருக்க வேண்டும். உன்னுடைய வாழ்வின் சாட்சி, கர்த்தருக்கு முன்பாய் பெரியதை இருக்கவேண்டும். உன் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திருச்சபையார் முன்பில் நீ பெரியவனாய் இருக்கலாம். ஆனால், உன் இருதயத்தைக் காணும் கர்த்தருக்கு முன்பாய் நீ பெரியவனாய் இருக்கிறாயா? அதுதான் நீ கர்த்தருக்காய் வழியை ஆயத்தம் பண்ணும் ஊழியத்தில் மிக முக்கியம்.
இரண்டாவது காரியம், யோவான் திராட்சரசமும் மதுவும் குடியான் என்று முன்னுரைக்கப்படுகிறது. இன்று உன்னுடைய வாழ்வில் இருக்கும் திராட்சரசமும் மதுவும் எவை தம்பியே தங்கையே? உன்னை மயக்குகின்ற காரியங்கள் எவை? நீ கர்த்தருடைய அன்பையும், அவர் பிரசன்னத்தையும், அவர் உனக்கு கொடுக்கும் மகிமையின் காரியங்களையும் நீ உணராத படிக்கு உன்னை மயக்கி வழிதவற செய்யும் காரியங்கள் எவை? அவற்றை இன்றே அறிந்து, கைவிடு. இல்லாவிட்டால் கர்த்தருக்கென இந்த கடைசி காலங்களில் அவரது வழியை ஆயத்தம் பண்ணுவது உனக்கு கடினமான ஒரு காரியம் ஆகிவிடும்.
மூன்றாவது. தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிறைக்கப்பட்டிருப்பான் என கூறப்படுகிறது. உன்னுடைய வாழ்வில் நீ பரிசுத்த ஆவியானவருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் யாது? நீ செல்லும் இடமெல்லாம் அவருடைய பிரசன்னம் உன்னை சூழ்ந்திருப்பதையும், அவரது வழிநடத்துதல் உன்னோடு இருப்பதையும் உணர்கிறாயா? ஆராதனை வேளைகளில் மாத்திரமல்ல, நீ தனிமையில் இருக்கும்போதும் அவரது பிரசன்னத்துக்கு நீ இடம் கொடுக்கிறாயா? அவர் கொடுக்கும் வரங்களைப் பெற்று அநேகருக்கு ஆசீர்வாதமாய் வாழ்வதற்கு உன்னை நடத்தையை கடைப்பிடிக்கின்றாயா? மிகவும் முக்கியம்.
யோவான் ஸ்நானகனை வழியை ஆயத்தம் செய்பவனாய் ஏற்படுத்தின கர்த்தர் இன்று உன்னையும் அழைக்கிறார்.
Comments
Post a Comment
Comments