by இளையசீஷர் REPORTERS
>>>
அண்மையிலே எமது இளையசீஷர் செய்தியாளர்கள் பேதுருவை கலிலேயாக் கடற்கரையோரம் சந்தித்து அவர் மனம் திறந்து பேசக்கேட்டனர். அந்த சந்திப்பின் ஒரு தொகுப்பு:
இளையசீஷர் செய்தியாளர்: ஐயா சீமோன் பேதுரு, உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களை அறிமுகப்படுத்துவதோடு, இயேசு சுவாமியோடு, அவருடைய அருமை சீஷனாய் நீங்கள் நெருங்கிப் பழகிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாமா?
பேதுரு: நிச்சயமா. நீங்க "சீமோன் பேதுரு" எண்டு என்ட பெயர அழகா சொன்னிங்க. உண்மைல சொல்லப்போனா, முதல் சீமோன்தான் நம்மட பெயர். பிறகு, இது, இயேசு சுவாமி வச்ச பெயர் நமக்கு - பேதுரு. அப்பவே விளங்கிற்று ஆண்டவருக்கு, இந்த சீமோன பிடிச்சு, நம்மளோட மூண்டு வருஷம் வச்சிருந்து, இவர நல்ல பலமா ஆக, எந்த அலையையும் தாங்கிற ஒரு கற்பாறையா மாத்தி எடுக்கணும் எண்டு... இயேசு சுவாமி அப்பவே நம்மட பெயர மாத்திற்றார் "பேதுரு - கற்பாறை" எண்டு..
அப்பா! சீஷனா அழைப்பு கிடைச்ச moment! ப்ஹா! அதை ஏன் கேக்குறீங்க.
அதென்ன ஒரு அழைப்பு! அப்பிடியே நம்மட heart ட வந்து அடிச்சிது அந்த அழைப்பு. அவ்வளவு power உம் நம்பிக்கையும் இருந்திச்சு அந்த அழைப்பில. Phew...
மீன்பிடிக்கிறதானே நம்மட பரம்பரை தொழில். அண்டைக்கு, நம்மட தம்பியார் அந்திரேயாவும் நம்மளும், இப்பிடித்தான், இந்த பக்கமா கொஞ்சம் தள்ளிப்போய் வலைய கடலில போட்டிற்று இருந்தம். இயேசு சுவாமி, அப்பிடியே, இந்த கரையாலேயே நடந்து வந்தார், திடீரெண்டு இவ்விடத்த நிண்டார். அப்பவே இதய துடிப்பு என்னவோ ஒரு speed ல கூடிக்கொண்டுதான் போச்சுது. திடீரெண்டு வந்திச்சே அந்த வார்த்தைகள் அவ்வளவும்! நம்மட வாழ்வையும் உலக திருச்சபை வரலாற்றையும் மாத்தின வார்த்தைகள். எவ்வளவு simple ஆக சொன்னார் தெரியுமா இயேசு சுவாமி. நமக்கு இங்க நெஞ்சு கை கால் ஒண்டும் வேலை செய்யல. ஆஹ்... நம்மட மத்தேயுட புத்தகம் 4: 19 ஒருக்கா தட்டிப் பாருங்களன் - அப்பிடியே எழுதி வச்சிருக்கார். "என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்" எண்டாரே ஆண்டவர். அப்படியே ஒரு மின்னல் தாக்கின உணர்வு. அவ்வளவுதான். எங்களுக்கு என்ன நடந்த எண்டே தெரியாப்பா. அந்த அழைப்பில அவ்வளவொரு பெரிய வாழ்வ, நிறைவ கண்டம். உடனே, வலை கிலை எல்லாம் விட்டிற்று போய்த்தம். வேற ஒன்றையும் பார்க்கல்ல நம்ம. இயேசு சுவாமிட முகத்தில ஒரு சிரிப்பு... ம்ம்ம்...
பிறகு, அந்தா, அந்த கொட்டில் ஒண்டு தெரியுதே... அவ்வடத்த வச்சுதான் நம்மட யாக்கோபும் யோவானும் வலைகளை கொஞ்சம் பழுது பாத்திற்று இருந்த. அவ்வடம் தாண்டி போகக்குள்ள அவங்களையும் இயேசு சுவாமி கண்டு அழைத்தார், அவங்களும் உடனே எல்லாத்தையும் விட்டிற்று வந்திற்றாங்க.
அந்த தொடக்க காலத்தில, இயேசு சுவாமி இந்த கலிலேயா முழுக்க சுத்தி திரிஞ்ச... இயேசு எல்லா ஜெப ஆலயங்களும் போய், உபதேசிச்சு, தேவ இராச்சியத்திட சுவிசேஷத்த பிரசங்கிச்சு, எல்லா வருத்தமா வந்த ஆக்களையும் சுகமாக்கின. எங்களுக்கு ஆச்சரியம் எண்டா... என்னடா நடக்குது நம்மள சுத்தி எண்டமாதிரி... சீரியா முழுக்க இயேசு சுவாமி famous ஆக தொடங்கிற்றார்... எல்லா பக்கமும் இருந்து எல்லாவித பிரச்சனை, வருத்தம் இருந்த ஆக்கள், பிசாசு பிடிச்சு இருந்த ஆக்கள், திமிர்வாதக்காரன்கள் எண்டு ஒரு தொகை சனம் தேடி வரத்தொடங்கிற்று. இயேசு சுவாமியை நாங்க அப்பதான் கொஞ்சம் கொஞ்சமா விளங்கிக்கொண்டும். அவரோட முகத்தில இருந்த அன்பும் ஆதரவுமே நிச்சயமுமே போதும் ஒருத்தரோட வாழ்வு மாற.. ப்ஹா!
மூன்று சந்தர்ப்பங்கள் எனக்கு இயேசு சுவாமியோட மறக்க இயலாது. அந்த சந்தர்ப்பங்களும் அந்த சந்தர்ப்பங்கள் என்ன தாக்கி எண்ட வாழ்வையே மாத்தின விதமும் இயேசு சுவாமிக்கும் எனக்கும்தான் தெரியும்.
ஒன்று, அந்த அதிகாலைல ஆண்டவர் கடலின் மேலே நடந்து வந்தது. நாங்க எல்லாரும் படகில் இருந்த அந்த மோசமான காத்தில அலைகள்ல சரியா பயந்துபோய்த்தான் இருந்தம். திடீரெண்டு இயேசு சுவாமி கடல் மேலே நடந்து வாரத கண்டம். முதலாவது பயந்திட்டம். ஆனா எனக்கு இதை பாத்திரணும் எண்டு எண்ணம். அப்பவும் கேட்டேன் ஆண்டவர்ட இது உண்மையிலேயே நீங்கதான் எண்டா நீங்க நிக்கிற இடத்த நானும் வரணும் எண்டு. உடனே வா எண்டிற்றாரே ஆண்டவர். பிறகு நடந்த தெரியும்தானே. நானும் ஆண்டவரோட முகத்தை பாத்துக்கொண்டு படகை விட்டு இறங்கிட்டன். என்ன ஒரு ஆச்சரியம், நடந்தன் பா கடலுக்கு மேலே! ஆனா கொஞ்சம் தூரம் போன உடனே எண்ணம் ஆண்டவர மறந்து அலைகளை பார்க்க தொடங்கிற்று. போச்சுதே எல்லாம். தாண்டுபோக தொடங்கிற்றனே. ஆண்டவர் உடனே என்ன பிடிச்சு சொன்னார் அந்த வார்த்தைகள "அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்?" அண்டைக்கு விளங்கிச்சு எங்கள் எல்லாருக்கும் இயேசு சுவாமி யார் எண்டு. அந்த படகில் வச்சே எல்லாரும் ஆண்டவரை பணிந்துகொண்டம்...
இரண்டாவது அந்த பொல்லாத காரிருள் நேரம். ஆண்டவர் பிடிச்சுக்கொண்டுபோய், அடிச்சு துன்புறுத்தி சிலுவைக்கு கொண்டுபோக வழி பண்ணின நேரம்... கண்ணெல்லாம் கலங்குது தெரியுமா, நான் ஆண்டவர மறுதலிச்ச நேரங்களை நினைச்சா... ஐயோ... நெஞ்செல்லாம் வலிக்குதே... ஆண்டவர் சொன்னபடியே மூண்டுதரம் மறுதலிச்சன் தெரியுமா... எனக்கு இயேசுவை தெரியாது, அறவே தெரியாது, நமக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லப்பா எண்டு பொல்லாத அந்த நேரம் சொன்னன் தெரியுமா? பயத்தில சொல்லிட்டன். என்ன ஒரு துரோகம்! ஆண்டவரோடயே அந்த மூண்டு வருஷமும் அலைஞ்சு திரிஞ்சிற்று, அவரோடயே சாப்பிட்டு அவரோடயே தூங்கி, இயேசு சுவாமிட பாதத்தடியிலேயே இருந்து எல்லாம் கற்றுகொண்டிற்று கடைசில மூண்டு தரம் சம்பந்தமே இல்ல நமக்கு இயேசுவோட எண்டு சொல்லி சத்தியமும் பண்ணிட்டன். மூண்டாம் தரம் நான் சொல்லி முடிய சேவல் கூவிச்சிது. ஐயோ, அப்பத்தான் ஞாபகம் வந்திச்சு ஆண்டவர் முதல் சொன்னது. நான் ஒருபோதும் உமதுநிமித்தம் இடறலடையமாட்டேன் எண்டு முதல் நாள் கடைசி இராப்போசனத்துக்கு பிறகு நான் சொல்ல "சேவல் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய்" எண்டு இயேசு சுவாமி சொன்னாரப்பா.
இதெல்லாம் விளங்கி கொள்ளலாம் . ஆனா அந்த கடைசில நடந்ததுதான், மூண்டாவது சந்தர்ப்பம், எனக்கெண்டா இண்டைக்குவரைக்கும் ஏற்றுக்கொள்ள ஏலாம இருக்கே. நான் அவ்வளவு மோசமான ஆண்டவர மறுதலிச்ச ஒரு துரோகி எண்டு தெரிஞ்சிருந்தும், இயேசு சுவாமி உயிரோடெழுந்து சீஷர் எங்களுக்கு மூன்றாம் தரம் தரிசனம் தந்த நேரம், என்ன பார்த்து மூன்று தரம் அந்த கேள்வி கேட்டார் பா... "நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா... நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா... நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா..." எண்டு மூண்டு தரம்! ஐயோ... எனக்கு இப்பவும் அது எண்ட காதுக்குள்ள கேட்டுக்கொண்டே இருக்கு. நான் மூண்டுதரமும் ஆம் ஆண்டவரே எண்டு சொன்னன். நம்மட யோவாண்ட புத்தகத்தில கடைசி பக்கத்த வாசிச்சு பாருங்களன். தம்பி விளக்கமா எழுதி இருக்கான். அப்பிடி மூண்டு தரமும் கேட்டிற்று "என் ஆடுகளை மேய்ப்பாயாக" எண்டு என்னட்ட முழுப் பொறுப்பையும் தந்தார் பா இயேசு சுவாமி... இந்த அன்பை, இந்த மன்னிப்பை, இந்த அரவணைப்பை, இந்த ஏற்றுக்கொள்ளுதலை என்னெண்டு நான் சொல்ற...
நான் கடைசி வரைக்கும் செய்த மகிமையான ஊழியத்துக்கு ஒரே காரணம் இயேசு சுவாமி எனக்கு காட்டின அன்புதான் பா... அந்த அன்ப என்னத்துக்கு ஈடாக நான் சொல்லுவன்..
அவருக்காக துணிகரமான, பலமா நிக்கணும் எண்டு பேதுரு - கற்பாறை எண்டு பெயர் வச்சார்...
ஆனாலும், கடைசியில ஊழியத்த என்னட்ட பொறுப்பு தரமுதல் அவர நான் உண்மையாவே நேசிக்கிறேனா எண்டு கேட்டிற்றுதான் தந்தார்...
அண்டைக்கு அறிந்துகொண்டன்... ஆண்டவருக்கு உண்மையான சீஷனாக நான் பணி செய்றதுக்கு அறிவு இல்ல, பலம் இல்ல, அந்தஸ்து இல்ல, கெட்டித்தனங்கள் இல்ல... ஆனால் ஆண்டவர நான் எவ்வளவு நேசிக்கிறன் எண்டதுதான் முக்கியம் என்று... ம்ம்ம்...
பிறகு இன்னொரு நாளைக்கு சந்திச்சு பேசுவமே... மனம் திறந்து பேசுவம்... இப்ப போயிற்று வாரன்... கொஞ்சம் வேலைகள் கூட இருக்கு இன்னும்."
இளையசீஷர் செய்தியாளர்: மிக்க நன்றி ஐயா. மீண்டும் ஒரு தடவை உங்களை சந்தித்துப் பேச விரும்புகிறோம். உங்களுக்கு இயலுமான ஒரு நேரம் அறிவித்துவிட்டு வருகிறோம். இன்னும் இன்னும் கேக்க ஆசையா இருக்கு.
பேதுரு: நிச்சயமா. வாருங்களேன் பிறகு. பேசுவம். நன்றி. நன்றி.
***
NOTE from the TEAM: இந்த பதிவை நீங்கள் எங்கேயும் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நாடகமாக நடித்துக் காட்டலாம். தாராளமாக இந்த பதிவை எடுத்துப் பயன்படுத்தவும். மிக விரைவில் இந்த சந்திப்பின் வீடியோவையும் இப்பக்கத்தில் வெளியிடவுள்ளோம். வெளியிட்டதும் அறிவிக்கப்படும்.
Comments
Post a Comment
Comments