by பிறேமன் அண்ணா
>>>
அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல:
சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்;
அதற்குச் சாமுவேல்:
சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.
(1 சாமுவேல் 3: 10)
சாமுவேல் தீர்க்கதரிசியைப் பற்றி நீங்கள் அதிகம் வாசித்திருக்கக்கூடும். ஓய்வுநாட் பாடசாலை வகுப்புக்களில் சாமுவேலின் தாயார் அன்னாளைப் பற்றியும், தனக்கு ஒரு பிள்ளை இல்லையே என்று ஆண்டவரிடம் அவர் தேவாலயத்தில் அழுது ஜெபித்தபோது ஆண்டவர் அவருக்கு இரங்கி, சாமுவேலை அவருக்கு ஒரு பெறுமதியான பிள்ளையாக கொடுத்ததையும் படித்திருப்பீர்கள்.
இந்த சாமுவேல் வளர்ந்து இஸ்ரவேலின் ஒரு பெரிய தீர்க்கதரிசியாக, இஸ்ரவேலின் ஒரு மேய்ப்பனாக, இஸ்ரவேலின் ராஜாக்களை அபிஷேகம் செய்யும் ஆண்டவரின் பிரதிநிதியாக வளர்ந்தார். இப்படியாக சாமுவேல் தீர்க்கதரிசி ஆண்டவராலே உயர்த்தப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வாழ்ந்ததற்கு பின்னாக ஒரு பெரிய இரகசியம் உள்ளது. அது என்ன தெரியுமா? ஆண்டவரின் அழைப்பை கேட்டதும், அதற்கு அடிபணிந்ததும், தன்னை முழுவதுமாய் அர்ப்பணித்ததுமேயாகும்.
தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று சாமுவேலின் தாயார் அன்னாள் ஜெபித்தபோது, அவர் ஆண்டவரிடம் ஒரு பொருத்தனையைப் பண்ணினார். அதென்ன தெரியுமா? "சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உம்முடைய அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை" என்று ஒரு பொருத்தனை பண்ணினாள் (1 சாமுவேல் 1: 11).
சாமுவேலை ஆண்டவர் அன்னாளுக்கு எவ்வளவு ஒரு ஆசீர்வாதமாய், அன்னாள் ஆசையாக ஆண்டவரிடம் வேண்டி பெற்றுக்கொண்ட ஒரு பிள்ளையாக கொடுத்தாரோ, அதே அளவு அன்னாளும் ஆண்டவருக்கு உண்மையுள்ளவராய், தான் பொருத்தனை பண்ணியதில் தவறாமல் சாமுவேலைக் கர்த்தருக்கென்று, அவருடைய பணிவிடைக்கென்று ஒப்புக்கொடுத்தார்.
அவள் அவனைப் (சாமுவேலை) பால்மறக்கப்பண்ணினபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக்கொண்டு, சீலோவிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாயிருந்தது. அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் (கர்த்தருடைய ஆலயத்தின் ஆசாரியன்) கொண்டுவந்து விட்டார்கள். அப்பொழுது அவள்: என் ஆண்டவனே, இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணின ஸ்திரீ நான் தான் என்று என் ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார். ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான் (1 சாமுவேல் 1: 24 - 28).
இப்படியாக, தனது தாயாரால் ஆலயத்திற்கு அழைத்துவரப்பட்ட சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் சணல்நூல் ஏபோத்தைத் தரித்தவனாய்க் கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடை செய்தான் (1 சாமுவேல் 1: 18). சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான் (1 சாமுவேல் 1: 21). ஆசாரியனாகிய ஏலியினுடைய குமாரர் கர்த்தருக்கு பிரியமில்லாத பாவங்களைச் செய்து வாழ்ந்து வந்தபோதும் சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான் (1 சாமுவேல் 2: 26).
கர்த்தருக்கு பிரியமானதொரு வாழ்வை வாழ்ந்து வந்த சாமுவேலை கர்த்தர் பெயர் சொல்லி அழைத்தார். 1 சாமுவேல் 3: 1 - 10 இப்படியாக சொல்லுகிறது: சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை. ஒருநாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்கக்கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது. தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோகுமுன்னே சாமுவேலும் படுத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி, ஏலியினிடத்தில் ஓடி, இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்; அவன் போய்ப்படுத்துக்கொண்டான். மறுபடியும் கர்த்தர் சாமுவேலே என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய்: இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை. திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான். சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான்; கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை. கர்த்தர் மறுபடியும் மூன்றாம்விசை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது கர்த்தர் பிள்ளையாண்டானைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து, சாமுவேலை நோக்கி: நீ போய்ப்படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான். அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.
கடவுள் சாமுவேலை அழைத்தார்; சாமுவேல் கடவுளின் அழைப்புக்கு அடிபணிந்தார். உங்களைப் போன்ற இந்த பருவத்திலே, ஆண்டவர் சாமுவேலை அழைத்தபோது சாமுவேல் வேற எந்தக் கேள்விகளையும் கேட்கவில்லை. ஆசாரியனும், வயது சென்றவரும், தன்னை ஆலயத்திலே வழிநடத்தும் தலைவனாகவும் இருந்த ஏலி என்ன செய்யவேண்டும் என்று கற்பித்துக் கொடுத்தாரோ அதைக் கீழ்ப்படிவாக செய்தார். அன்று சாமுவேலைப் பெயர்சொல்லி அழைத்து பேசத்தொடங்கின ஆண்டவர், சாமுவேலோடு தொடர்ந்தும் பேசிக்கொண்டே இருந்தார். அது மட்டுமல்ல; ஆண்டவர் பேசுவதைக் கவனித்துக் கேட்டு அதை ஆண்டவரின் மக்களாகிய இஸ்ரவேல் தேசத்தினருக்கும், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் வேதத்தை அனுதினமும் வாசிக்கும் உலகத்தில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் ஆண்டவரின் வார்த்தையை சுமந்து வரும் ஒரு ஊழியத்தையும் வாழ்வையும் ஆண்டவர் சாமுவேலுக்குக் கொடுத்தார்.
இன்றைக்கு ஆண்டவர் உங்களையும் அழைக்க சித்தம் கொண்டிருக்கிறார். நம் ஆண்டவர் நம்மை தமது காரியமாய் அழைக்கும்போது "என் ஆண்டவரே சொல்லும் உம் பிள்ளை நான் கேட்கிறேன்" எனச் சொல்ல ஆயத்தமா?
வாசிப்பாளர் சின்னம்
READERS BADGE
Comments
Post a Comment
Comments